வாரத்தில் ஆறு நாள்கள் வெறும் அரைமணி நேரம் மிதமான உடற்பயிற்சி செய்தால் போதும், முதியோர் இறக்கும் வாய்ப்பு 40 விழுக்காட்டிற்குமேல் குறையும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
எந்தவோர் உடற்பயிற்சியையும் செய்வதற்குமுன் முதியோர் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது.
மருத்துவரை அணுகவும்
மருத்துவரிடம் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். குறிப்பாக, உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் முதியோர், பரிசோதனைவழி என்னென்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.
உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும்
உடற்பயிற்சி செய்வதற்குமுன் தசைகளை ஊக்குவிக்க லேசான அசைவுகள் (warm up) அவசியம். உடற்பயிற்சிக்குப் பின் தசைகளுக்கு நிவாரணமாக கால்களையும் கைகளையும் நீட்டலாம், விரிக்கலாம் (stretching).
உடல் சொல்வதைக் கேளுங்கள்
வலி ஏற்பட்டால் உடற்பயிற்சியை நிறுத்திவிட வேண்டும். அதிகமாக உடலை வருத்தி உடற்பயிற்சி செய்யக்கூடாது.
தண்ணீர் அருந்துங்கள்
உடற்பயிற்சி செய்யும்போது போதிய நீர் அருந்தவேண்டும். குறிப்பாக, வெப்பமான காலங்களில் அதிகம் நீர் அருந்துவது நீர்ச்சத்து குறைவதைத் தடுக்கிறது.
சரியான ஆடை
வழுக்காத, சரியான ஆதரவு அளிக்கும் காலணிகளை அணியுங்கள். சீரான சுவாசம் மற்றும் சுழற்சிக்குத் தளர்வான ஆடைகளை அணிவது நல்லது.

