உணவு உண்டபின் ஏற்படும் ‘ஃபுட் கோமா’

உணவு உண்டபின் ஏற்படும் ‘ஃபுட் கோமா’

2 mins read
8a865e7c-d560-4fd6-a5e1-60f37b06633a
அளவுக்கு மீறிச் சாப்பிடும்போது ‘ஃபுட் கோமா’ எனப்படும் உறக்க உணர்வு ஏற்படுகிறது. - படம்: பிக்சாபே

உணவு பல வழிகளிலும் மனித மூளைக்கு உதவியாக இருக்கிறது. குறிப்பாக, நினைவாற்றலுக்கும் கவனம் செலுத்துவதற்கும் சமநிலையான உணவுப் பழக்கமுறை ஒருவரின் மனநலனுக்கும் ஆதரவாக விளங்குகிறது.

ஆனால், அளவுக்கு மீறிச் சாப்பிடும்போது அது நமது மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சாப்பிடும்போது உடலில் தோன்றும் பல்வேறு சமிக்ஞைகள் வயிறு நிறைந்துவிட்டது என்பதை மூளைக்கு உணர்த்த ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

மேலும், ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கச் செய்யவும் ஹார்மோன்கள் சமிக்ஞை அளிக்கின்றன.

குடல், கணையத்திலிருந்து சுரந்து மூளைக்குச் சமிக்ஞை அனுப்பும் இந்த ஹார்மோன்களே ஒருவர் அதிகமாகச் சாப்பிட்ட பிறகு ஏற்படும் தூக்க உணர்விற்குக் காரணமாகவும் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

‘ஃபுட் கோமா’ என்று பலரால் அழைக்கப்படும் இந்த உணர்வு, பெரும்பாலும் ரத்த ஓட்டம் மூளையிலிருந்து விலகி வயிற்றை நோக்கிப் பாய்வதால் ஏற்படுகிறது.

பல மணிநேரம் அல்லது ஒரு நாள் முழுவதும் தொடர்ந்து அதிகமாக உண்பது, வளர்சிதை மாற்றத்தைச் சீர்குலைத்து உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்றும் அதன் விளைவாக மூளையும் பாதிக்கப்படலாம் என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உருளைக்கிழங்கு, காலை உணவுத் தானியங்கள், வெள்ளை ரொட்டி போன்ற அதிக மாவுச்சத்தும் சர்க்கரையும் நிறைந்த உணவுகள் ஒருவரை விரைவில் சோர்வடையச் செய்யக்கூடும்.

இந்த உணவுகளின் ‘கிளைசீமிக் குறியீடு’ அதிகம் என்பதால் அவை உடலில் சர்க்கரையை மிக வேகமாக வெளியிடுகின்றன.

சாப்பிடும்போது உடலின் ‘பாராசிம்பதெடிக்’ நரம்பு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது. அப்போது ‘ஓய்வு, செரிமான’ நிலைக்கு உடல் செல்கிறது.

இந்த ‘ஓய்வு, செரிமான’ நிலை எந்த அளவிற்குத் தூக்கத்தைத் தூண்டுகிறது என்பது ஒருவர் ஒரே நேரத்தில் எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்தது. அதிக உணவு உண்டால் உடலுக்கு அதிக ஓய்வு தேவைப்படும்.

இதற்கு ‘டிரிப்டோபான்’ எனும் அமினோ அமிலமும் மற்றொரு காரணமாக இருக்கலாம். முட்டை, மீன், இறைச்சி உள்ளிட்ட புரதச் சத்து நிறைந்த பல உணவுகளில் டிரிப்டோபான் உள்ளது.

இன்சுலின் சில அமினோ அமிலங்களைத் தசைகளுக்குள் செலுத்துகிறது; ஆனால், டிரிப்டோபானைச் செலுத்துவதில்லை. இதனால், எஞ்சியுள்ள டிரிப்டோபான் அமினோ அமிலக் கடத்திகள் மூலமாக மூளைக்குள் எளிதாகச் செல்கின்றன.

அங்கே அது செரடோனின், மெலடோனின் சுரப்புநீராக மாறுகிறது. அவை இரண்டுமே உடல்தளர்ச்சியையும் தூக்க உணர்வையும் அதிகரிக்கின்றன.

சாப்பிட்ட பிறகு ஏற்படும் மந்தத்தைத் தவிர்க்க ‘சாண்ட்விச்’ அல்லது சோறு போன்ற அதிக மாவுச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பதே சிறந்த வழி.

சமச்சீர் உணவிற்குப் புரதம், நல்ல கொழுப்பு நிறைந்த உணவுப்பொருள்களையும் காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடுவதையும் தவிர்க்கலாம்.

குறிப்புச் சொற்கள்
தூக்கம்உணவுஉடல்நலம்