உடல்நலன், கச்சிதமான உடற்கட்டு, எடைக்குறைப்பு உள்ளிட்டவற்றுக்கான உணவுமுறைகளை வகுக்கும்போது முதலில் பலரும் எடுக்கும் முடிவு ‘நோ கார்ப்ஸ்’ - அதாவது, மாவுச்சத்துள்ள உணவுகளைத் தவிர்ப்பது.
சோறு, ரொட்டி, கோதுமை எனப் பொதுவாக உட்கொள்ளப்படும் அனைத்து உணவுகளிலும் மாவுச்சத்து நிறைந்துள்ளது. இதுதான் உடல் இயங்குவதற்கான சக்தியை வழங்குகிறது.
ஆனால், எளிமையான, சிக்கலான ஆகிய இருவகை, நல்ல, கெட்ட மாவுச்சத்து குறித்த புரிதல் இருந்தால் உணவுமுறைகளை வகுப்பது எளிதாகும்.
சிக்கலான மாவுச்சத்து பொதுவாக அனைவரும் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. சிக்கலான வேதியியல் கட்டமைப்பு, வலுவான நார்ச்சத்து உள்ளிட்டவை காரணமாக மெதுவாகச் செரித்து, அதிலிருந்து மெதுவாக சர்க்கரை (குளுக்கோஸ்) வெளியேற்றம் நடைபெறுவதால் இது நல்ல மாவுச்சத்து என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வகை உணவுகளில் பெரும்பாலும் அதிக நார்ச்சத்து இருக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை வெளியேற்றுவதைக் குறிக்கும் ‘கிளைசீமிக்’ குறியீட்டெண் இவற்றுக்குக் குறைவாக இருக்கும்.
குறைவான அளவு உண்டாலும் வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும். உணவு செரிக்க நீண்ட நேரம் எடுப்பதால், நொறுக்குத்தீனியை நாடுவதும் குறையும்.
இவை இயற்கையான வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதாகவும் ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
பழுப்பு அரிசி, கீன்வா, நெளிகோதுமை (பக்வீட்), சிறுதானியங்கள் உள்ளிட்டவை சிக்கலான மாவுச்சத்து கொண்ட உணவுகளாகும்.
இத்துடன், ஓட்ஸ், பச்சைக் காய்கறிகள், பழங்கள், கொண்டைக்கடலை, தட்டைப்பயறு போன்ற பயிறு வகைகள், சோளம் ஆகியவையும் இவ்வகை உணவுகளில் அடங்கும்.
எளிதான வேதிக் கட்டமைப்புடன் விரைவில் செரிக்கும் உணவுகள் எளிய மாவுச்சத்து கொண்டவை. இவை வேகமாக, அதிக அளவு சக்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்கிறது.
இவை, உடனடியாகப் பயன்படுத்தாமல் போனால் ரத்த அணுக்களில் கொழுப்பாகப் படிகிறது.
இவற்றில் நார்ச்சத்தும் ஊட்டச்சத்தும் பெரும்பாலும் குறைவாக இருக்கும். அதிகமான ‘கிளைசீமிக்’ குறியீட்டெண்ணைக் கொண்டிருக்கும். இது உடலுக்குப் பலவகை கேடு விளைவிக்க அடித்தளமாக அமைவதால் இவற்றைக் கெட்ட மாவுச்சத்து உடைய உணவுகள் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
வெள்ளை அரிசிச்சோறு, பால், இனிப்பு வகைகள், சாக்லெட் உள்ளிட்ட பண்டங்கள், மைதாவினால் செய்யப்பட்ட உணவுவகைகள், குளிர்பானங்கள், கலனில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை இப்பட்டியலில் அடங்கும்.

