காலைப் பொழுதை இனம்புரியாத மகிழ்ச்சி, உற்சாகம், பயம், அதிர்ச்சி ஆகிய உணர்வுகளில் மூழ்கடிக்க வல்லவை கனவுகள். சில நேரங்களில் அவை உறக்கத்தைக் கலைத்து எழ வைப்பதும் உண்டு. கனவுகள் வருவது ஏன், அவற்றின் விளைவுகள் யாவை என்பன குறித்து அறிந்துகொள்வதற்கான ஆர்வமும் பரவலாக உள்ளது.
“மனித மூளை எப்போதும் செயல்பட்டுக்கொண்டே இருக்கும். குறிப்பாக, உறக்கத்தில் மூளை பல்வேறு செயல்களில் ஈடுபடுவதே கனவுகள் வருவதற்கு முக்கியக் காரணம் என்கிறார் எச்.எம்.ஐ மருத்துவ நிலையப் பொது மருத்துவரும் உறக்கவியல் நிபுணருமான கர்வி பாண்டியா.
தூக்கத்தின் நிலைகள்
கனவுகள் பற்றி அறிய முதலில் தூக்கத்தின் நிலைகள் குறித்தும் மூளையின் செயல்பாடுகள் குறித்தும் அறிவது அவசியம் என்று சொன்ன அவர், “ஒவ்வொரு இரவும் மனிதர்களின் தூக்க சுழற்சியில் நான்கு கட்டங்கள் உள்ளன,” என்றார்.
முதற்கட்டம், தூக்கத்தின் தொடக்கநிலை. பொதுவாக, ஒன்று முதல் ஏழு நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்நிலை, விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடைப்பட்டது. இந்த நிலையிலிருந்து ஒருவரை எழுப்புவது எளிது. நலமான உறக்க சுழற்சி கொண்டோரால் இந்த நிலையிலிருந்து சில நிமிடங்களிலேயே இரண்டாம் நிலைக்குச் செல்ல முடியும்.
இரண்டாம் கட்டத்தில் தசைகள் இலகுவாகி சுவாசத்தின் வேகம், இதயத் துடிப்பு ஆகியவை குறைந்து உடல் தளர்வான நிலைக்குச் செல்கிறது.
மூன்றாம் கட்டம், ஆழ்ந்த உறக்கம். இரவின் முற்பாதியில் மனிதர்கள் அதிக நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றனர். இந்த ஆழ்ந்த உறக்கநிலை முக்கியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அது உடல் வளர்ச்சிக்கும் நோயெதிர்ப்பாற்றலுக்கும் பங்களிப்பதோடு நுண்ணறிவுச் சிந்தனை, படைப்பாற்றல் போன்ற மேம்பாடுகளுக்குத் துணைபுரிகிறது.
இந்த நிலையில், மூளையின் செயல்பாடுகள் அடையாளம் காணக்கூடிய குறிப்பிடத்தகுந்த வடிவத்தைக் கொண்டுள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்
நான்காம், இறுதிக் கட்டம் ‘ரேப்பிட் ஐ மூவ்மண்ட்’, அதாவது ‘விரைவான கண் அசைவு’ கொண்ட நிலை. ஏறத்தாழ விழித்திருக்கும்போது காணப்படும் அளவிலான மூளைச் செயல்பாடுகளுடன் உடலில் ஒருவித தற்காலிகப் பக்கவாத நிலை இக்கட்டத்தில் ஏற்படும். இது உறக்க நிலைகளிலேயே ஆக நீளமானது.
“நான்காம் நிலைதான் பொதுவாக கனவுகள் வரும் நிலை,” என்றார் மருத்துவர் கர்வி.
“உறக்கத்தில் உட்புற உறுப்புகளைச் செயல்படுத்துவதுடன் மூளை, ‘நினைவக ஒருங்கிணைப்பு’ எனும் முக்கியப் பணியை மேற்கொள்கிறது. பார்த்த, கேட்ட, உணர்ந்த யாவற்றையும் தகவல்களாக மூளை உள்வாங்கிக்கொள்கிறது. சூழ்நிலைக்குத் தகுந்தவாறு அவற்றை குறுகியகால நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் எனப் பிரிக்கிறது,” என்றார் அவர்.
உறக்கத்தின் நான்காம் நிலையில் மூளை தன்னிடமுள்ள தகவல்களைக் கலைத்து தரம்பிரித்து ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்கிறது. இதனால், சிறு வயது முதல் தற்போது வரையுள்ள பலவகை நினைவுகள் வரிசையின்றி மேலெழுந்து கனவாகிறது என்றும் அவர் சொன்னார்.
“பள்ளிக் கட்டடத்தில் குடும்பத்தினரைச் சந்திப்பது, சிறு வயதுப் பள்ளி நண்பர்கள் பணியிடத்தில் இருப்பது போன்ற தொடர்பில்லாத காட்சிகள் கனவாக வருவதற்கும் இதுவே காரணம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
வாழ்வின் பல்வேறு கட்டங்களில் மனத்தைப் பாதித்தவையும் கனவுகளாக வரும்.
கனவுகளின் விளைவுகள்
“சில கனவுகள் விழித்த பின்னும் நன்கு நினைவிருக்கும். சில கனவுகள் மங்கலாக இருக்கும். இது இயல்பே,” என்றார் உறக்க மருத்துவ நிபுணர் கர்வி.
சில கனவுகள் உறக்கத்தைக் கலைத்து எழ வைப்பதும் வழக்கம் என்ற அவர், அடிக்கடி அல்லது தொடர்ந்து அவ்வாறு ஏற்பட்டால் கவனமாக இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“பொதுவாக பயம் ஏற்படுத்தும் கனவுகள், தூக்கத்தின் நான்காம் கட்டத்தில் வருகின்றன. அவை அவ்வப்போது வருவது பிரச்சினை இல்லை. தொடர்ந்து வந்தாலோ தூக்கத்தைப் பாதித்தாலோ கவனம் செலுத்த வேண்டும்,” என்றார்,
சிறுநீரகத் தொற்று, பிறவகை தொற்று, காய்ச்சல் ஆகியவற்றால் தூக்கத்தைப் பாதிக்கும் கனவுகள் சில நேரம் ஏற்படலாம் என்று தெரிவித்தார் மருத்துவர் கர்வி.
தூங்கியவுடன் கனவு வருவதும் கனவில் நடப்பதற்கு நிஜத்தில் எதிர்வினையாற்றுவதும் ‘ஸ்லீப் டெரர்’ எனப்படும். இது குழந்தைகளிடம் பரவலாகக் காணப்படுகிறது. இது பெரியவர்களிடம் தென்பட்டால் அவரது தூக்கச் சுழற்சியில் பாதிப்புள்ளதா என்பதை ஆராய வேண்டும்.
குறிப்பாக தொடர்ந்து இது நடந்தாலும் தூக்கத்தில் செயல்பட்டது மறுநாள் நினைவில்லை என்றாலும், மருத்துவரை அணுக வேண்டும் எனப் பரிந்துரைத்தார் மருத்துவர் கர்வி.
சரியான தூக்க முறை
தெளிவற்ற கனவுகள் வருவதால் அது அடுத்த நாளைப் பாதிக்க வாய்ப்புண்டு. சரியான தூக்கமின்றி உற்பத்தித் திறன் குறைந்து சோர்வாக உணரலாம்.
இதனைச் சரிசெய்ய சில வாழ்க்கை முறை மாற்றங்களைப் பரிந்துரைத்தார் மருத்துவர் கர்வி.
முதலில் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் படுக்கச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நாளைடைவில் உடல் அதற்குப் பழகிவிடும்.
மாலை 3 மணிக்குப் பின் காப்பி, தேநீர் உள்ளிட்ட பானங்களைத் தவிர்க்கலாம்.
தூங்குவதற்கு 5 மணி நேரத்திற்கு முன்பே உடற்பயிற்சியை முடித்துக்கொள்வது சிறப்பு.
படுக்கைக்கு திறன்பேசி உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு செல்லாமல் இருப்பது நல்லது.
தேவையற்ற சிந்தனைகளைச் சிந்திக்காமல் மனத்தை ஒருநிலைப்படுத்துவது கனவுகள் வருவதைத் தடுக்க உதவும். மறுநாள் குறித்த சிந்தனை வந்தால் உடனடியாக அவற்றை ஒரு தாளில் எழுதுவது பதற்றத்தைக் குறைக்கும். தியானம் செய்வது, புத்தகங்களின் சில பக்கங்களை வாசிப்பது ஆகியவையும் உதவும்.