தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு

மாபெரும் தமிழ்ப் புத்தகத் திருவிழா

2 mins read
fad6149f-3ca0-4980-9e7f-b279beaf7f24
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இந்தப் புத்தகத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

விக்டோரியா சாலையில் உள்ள தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் மாபெரும் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (மே 9) முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 11) வரை நடைபெறவுள்ளது.

சிங்கப்பூர் விடுதலை பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இந்தப் புத்தகத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் ‘தி பிளாசா’ கீழ்த்தளத்தில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் மொத்தம் 20 புத்தகக்கூடங்கள் அமைக்கப்படும் என்று எழுத்தாளர் கழகம் புதன்கிழமை (மே 7) தெரிவித்தது.

புத்தகத் திருவிழாவின் முதல் நாள் காலை 10 மணிக்கு, உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் விழாவைத் தொடங்கிவைப்பார். முதல் நாளன்று இளையர் பிரிவினர் இயக்கி நடிக்கும் குறுநாடகமும், குரலோடு விளையாடு என்னும் புதிர்ப்போட்டியும் நடைபெறும்.

சனிக்கிழமை காலை சின்ன குரல்கள் பெரிய கதைகள் அங்கமும், பிற்பகல் நூல் வெளியீடுகளும், மாலை கவியரங்கமும் நடைபெறும்.

இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ‘பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும்’ என்ற தலைப்பில் பன்னாட்டுப் பதிப்பகத்தாருடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறும். 

தேசியக் கலை மன்றம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, வளர்தமிழ் இயக்கம், தேசிய நூலக வாரியம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து எழுத்தாளர் கழகம் இதனை நடத்துகிறது.

டிஸ்கவரி புக் பேலஸ், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், யாவரும் பதிப்பகம், புத்தகக் கடை டாட் காம், எதிர் வெளியீடு ஆகிய இந்தியப் பதிப்பகங்கள், உமா பதிப்பகம், ஜெயபக்தி பதிப்பகம், தமிழ்க்கனி என்டர்பிரைஸ் பதிப்பகம் ஆகிய மலேசியப் பதிப்பகங்கள், கிரிம்சன் எர்த் பதிப்பகம், ஜீவஜோதி பதிப்பகம், சிராங்கூன் டைம்ஸ், ஆர்யா கிரியேஷன்ஸ் ஆகிய சிங்கப்பூர்ப் பதிப்பகங்கள் இந்தப் புத்தகத் திருவிழாவில் பங்குபெறுகின்றன.

பன்னாட்டுத் தமிழ் இலக்கிய வட்டங்கள் சங்கமிக்கும் மையப்புள்ளியாக இந்த நிகழ்ச்சி அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் கருத்துரைத்தனர்.

“எழுத்துலகில் நீங்கள் வாசகர், எழுத்தாளர் அல்லது பதிப்பாளராக இருந்தால் இந்தத் திருவிழா, குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை நான்கு மணிக்கு நடைபெறவுள்ள கலந்துரையாடல் பயனுள்ளதாக இருக்கும்,” என்று சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் பிரேமா மகாலிங்கம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்