அக்டோபரில் ஆறு பிரிவுகளில் நடைபெறும் கிரேட் ஈஸ்டர்ன் பெண்கள் ஓட்டம்

அக்டோபரில் ஆறு பிரிவுகளில் நடைபெறும் கிரேட் ஈஸ்டர்ன் பெண்கள் ஓட்டம்

2 mins read
63467430-fa44-4538-899f-054a71eb1f29
தொடக்க விழாவில் கலந்துகொண்ட திருவாட்டி சுன் ஷுவெலிங்கும் (முன்வரிசையில், இடமிருந்து 2வது) மற்ற சிறப்பு விருந்தினர்களும் ட்ரெட்மில் சாதனத்தில் ஓடி நிதி திரட்டினர். - படம்: கிரேட் ஈஸ்டர்ன்

சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி (ஞாயிறு) நடைபெறும் ‘கிரேட் ஈஸ்டர்ன் பெண்கள் ஓட்டம் 2024’, சிங்கப்பூரில் ஆண்டுதோறும் பெண்கள் மட்டும் ஓடுவதற்கான ஒரே நிகழ்ச்சியாகும்.

இளம் வயதிலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பது அவசியம் என்பதை உணர்ந்த கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், இளம்பெண்கள் துடிப்புடன் செயல்படவும் ஒன்றாக உடற்பயிற்சி செய்து மகிழ்ச்சியான அனுபவங்களைப் பெறவும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

பதினெட்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த ஓட்டத்திற்குப் பதிந்துகொள்வதற்கான தொடக்க நிகழ்ச்சி, கடந்த மே 21ஆம் தேதி குவோகோ டவர் நகர்ப்புற பூங்காவில் நடைபெற்றது.

உள்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங்கும் கிரேட் ஈஸ்டர்ன் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி கோர் ஹாக் செங்கும் அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டு 9,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஓட்டம், இவ்வாண்டு ஆறு பிரிவுகளில் நடைபெறவுள்ளது. உள்ளூர் ஓட்டக்காரர்கள் கலந்துகொள்ளும் 21.1 கி.மீ. அரை நெடுந்தொலைவோட்டம், பொதுமக்களுக்கான 21.1 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ. ஓட்டம், ஐந்து முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் தங்கள் தாயாருடன் சேர்ந்து பங்கேற்பதற்கான 2 கி.மீ. ஓட்டம், மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான 100 மீ. ஓட்டம் ஆகியவை அவை.

இவ்வாண்டின் ஓட்டத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் https://greateasternwomensrun.com/ என்ற இணையத்தளத்தில் பதிவுசெய்யலாம்.

ஓட்டத்திற்குப் பதிந்துகொள்வதற்கான தொடக்க நிகழ்ச்சியில், ‘டாட்டர்ஸ் ஆஃப் டுமாரோ இயக்கத்திற்கும் சிங்கப்பூர் புற்றுநோய் சங்கத்திற்கும் நிதி திரட்டு நடவடிக்கையும் இடம்பெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள், 10 பெண்கள் அடங்கிய குழுவுடன் சேர்ந்து 10 நிமிடங்கள் ட்ரெட்மில் சாதனத்தில் ஓடினர். அவர்கள் ஓடிய 1 மீட்டர் தூரத்திற்கு $1 என்ற அடிப்படையில் மொத்தம் $10,099 நிதி திரட்டப்பட்டது.

நிதி திரட்டு முயற்சிக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் https://www.simplygiving.com/event/gewr2024 என்ற இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்