வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்திய வேலை

2 mins read
bdceb642-d9f8-4420-ad37-750c2adf50bc
சொத்து முகவர் முகம்மது அமீன், 42. - படம்: முகம்மது அமீன்

பள்ளிப் பருவத்தின்போது படிப்பில் கவனம் செலுத்தாதிருந்த முகம்மது அமீன், 42, வேலை செய்யத் தொடங்கியபோதுதான் வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்ந்தார்.

இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரியுடன் வளர்ந்த இவர், நாளைய பொழுது பற்றி அதிகம் சிந்திக்காமல் உல்லாசமாக வளர்ந்தார்.

சுவிஸ் காட்டேஜ் தொடக்கப்பள்ளியிலும் பிறகு கேலாங் மெத்தடிஸ்ட் உயர்நிலைப் பள்ளியிலும் வழக்கநிலை ஏட்டுக்கல்வி பயின்றபின், பிடோக்கில் தகவல் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சேர்ந்தார்.

படிப்பில் ஏற்பட்ட பல்வேறு தடைகளால் தேசிய சேவையை 23 வயதில்தான் திரு அமீன் ஆற்றத் தொடங்கினார். தேசிய சேவையின்போது இரவு வகுப்புகளுக்காக தெம்பனிஸ் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சேர்ந்து படிப்பை மேற்கொள்ள எடுத்த முயற்சியும் கைவிடப்பட்டது.

ஹோட்டலில் உபசரிப்புத் துறையில் சேர்ந்த திரு அமீன், அங்கு கடுமையாக உழைக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தபோதுதான் படிப்பின் அருமை அவருக்குப் புலப்பட்டது.

உபசரிப்புத் துறையில் நிர்வாகியாக உயர்ந்தபோதும் முன்னேற்றத்திற்கான வேட்கை இவரை விடவில்லை.

சொத்து முகவராக ஒருவர் வேலை செய்வதைக் கவனித்து வந்த திரு அமீன், அந்த வேலையையும் செய்ய முடிவெடுத்தார்.

“வீடுகளைப் பற்றி தெரிந்துகொள்வதில் எனக்குள் இயல்பான ஆர்வம் இருந்தது. அத்துடன், பிறருடன் பேசிப் பழகுவது எனக்குப் பிடிக்கும்,” என்றார் இரண்டு இளம் பிள்ளைகளுக்குத் தந்தையான திரு அமீன்.

பேச்சில் இனிமையும் நேர்மையும் அவசியம்

வேலையைத் திறம்பட செய்வதற்கான தகுதிகளின்மீது போதிய கவனம் செலுத்தாமல் பிறருடன் பழகி முன்னேற நினைக்கும் உத்தி, நீண்டகாலத்துக்குப் பயன் தராது என்று திரு அமீன் கருதுகிறார்.

திறன்கள் இல்லாமல் திறனாளியைப்போல பேசுபவர்களின் கபடத்தன்மையைப் பிறர் நிச்சயம் கண்டறியக்கூடும் என்று இவர் கூறுகிறார்.

எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் உண்மையான ஆர்வம் இருக்கவேண்டும். அந்த ஆர்வம், நேர்மையான செயல்பாடுகளுக்கு அடித்தளமாக இருக்கும் என்று இவர் சொல்கிறார்.

வாழ்க்கைத்தொழிலில் எப்போதும் போட்டித்தன்மை இருக்கும் என்பதால் மனதளவில் அதற்கு எல்லா நேரங்களிலும் தயாராக இருக்கவேண்டும் என்கிறார் திரு அமீன்.

“போட்டித்தன்மையைக் கையாள்வதற்குத் திறன் மேம்பாடு சிறந்த வழி. புதிய திறன்களைக் கற்பதால் வேலையிடத்தில் போட்டிப்போட்டு வெல்லும் ஆற்றல் அதிகரிக்கும்,” என்கிறார் இவர்.

குறிப்புச் சொற்கள்