‘சிட்ரஸ்’ பழங்களின் நன்மைகள்

2 mins read
240d114c-a2ab-4e8b-95eb-855b2a9eb80b
நாள்தோறும் வைட்டமின் ‘சி’ நிறைந்த ‘சிட்ரஸ்’ பழங்களை உண்பதால் நோய்களின் தீவிரம் குறையும்.  - படம்: பிக்சாபே

ஆரஞ்சு, நாரத்தம்பழம் (grapefruit) போன்ற ‘சிட்ரஸ்’ பழ வகைகளின் சுவை குளிர்காலத்தில் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நோயெதிர்ப்பு ஆற்றலை வளர்த்து, உடலைக் குணப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்கள் அவற்றில் நிரம்பியுள்ளன. அவற்றை உண்பதால் உடல்நலத்திற்குப் பல நன்மைகள் விளையும்.

வைட்டமின் ‘சி’ சத்து 

‘சிட்ரஸ்’ பழங்களில் அதிக அளவில் வைட்டமின் ‘சி’ நிறைந்திருக்கும். ஓர் ஆரஞ்சுப் பழத்தில் 83 மில்லிகிராம் வைட்டமின் ‘சி’ உள்ளது. பாதி நாரத்தம்பழத்தில் 46 மில்லிகிராம் வைட்டமின் ‘சி’ இருப்பதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக நம் உடலுக்கு ஒரு நாளில் 75 முதல் 90 மில்லிகிராம் வரையிலான வைட்டமின் ‘சி’ பரிந்துரைக்கப்படுகிறது. ‘சிட்ரஸ்’ பழங்களை உண்பதால் போதிய அளவு வைட்டமின் ‘சி’ எளிதில் கிடைக்கும். 

அதுமட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் வைட்டமின் ‘சி’ முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கான உயிரணுக்களை உருவாக்க வைட்டமின் ‘சி’ உதவுகிறது. 

‘சிட்ரஸ்’ பழங்களில் அதிகம் காணப்படும் வைட்டமின் ‘சி’ காயங்களைக் குணப்படுத்துவதற்கும் திசுக்களின் வளர்ச்சிக்கும் மிக முக்கியம். இது தோல், தசைகள், ரத்த நாளங்களைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. 

குளிர்ச்சியைக் குறைக்க உதவும் பழங்கள்

காய்ச்சல், சளி போன்ற நோய்களை வைட்டமின் ‘சி’ குணப்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், அன்றாடம் வைட்டமின் ‘சி’ நிறைந்த ‘சிட்ரஸ்’ பழங்களை உண்பதால் நோய்களின் தீவிரம் குறையும் என்று கூறப்படுகிறது. 

நாள்தோறும் குறைந்தது 200 மில்லிகிராம் வைட்டமின் ‘சி’ உட்கொண்டோர்  எட்டு விழுக்காடு விரைவாகச் சளியிலிருந்து குணமடைந்ததாக 2013ஆம் ஆண்டில் மெட்டா பகுப்பாய்வு ஒன்று கண்டறிந்தது. 

மேலும் வைட்டமின் ‘சி’ பொடிகள், மாத்திரைகள் இருப்பினும், ஒரு முழு ‘சிட்ரஸ்’ பழத்தை உண்பதன் மூலம் கிடைக்கும் நார்ச்சத்து, நீர்ச்சத்து போன்ற நன்மைகள் மேலும் சிறந்தவை என்று கூறப்படுகிறது. 

வீக்கத்தைக் குறைக்க உதவும்

நாட்பட்ட உடல் வீக்கம், புற்றுநோய், இதய நோய் மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

‘சிட்ரஸ்’ பழங்களில் உள்ள வைட்டமின் ‘சி’ ஓர் ‘ஆன்டிஆக்சிடன்ட்’ ஆகும். இது உடல் வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

எப்படி உண்பது?

‘சிட்ரஸ்’ பழங்களைச் சாறாக அருந்தும்போது, ​​அவற்றில் உள்ள நன்மை பயக்கும் நார்ச்சத்து அழியக்கூடும். அதனால் பழங்களை அப்படியே உண்பது சிறந்தது.

நாரத்தம்பழங்கள் சில மருந்துகளுடன் ஒத்துப்போகாத தன்மை கொண்டவை. இதன் விளைவாக, அதிகமான மருந்து ரத்த ஓட்டத்தில் கலந்து பக்க விளைவுகள் ஏற்படுத்தும் அபாயம் அதிகரிக்கிறது.

சில நேரங்களில் ரத்த ஓட்டத்தில் மருந்து கலப்பதை நாரத்தம்பழங்கள் தடுக்கும். எனவே, அதிக மருந்துகளை எடுத்துக்கொள்வோர், மருத்துவரின் பரிந்துரைப்படி ‘சிட்ரஸ்’ பழங்களை உட்கொள்வது நல்லது. 

அத்துடன், ‘சிட்ரஸ்’ பழத் தோலில் நிறைந்துள்ள ‘ஆன்டிஆக்சிடன்ட்’கள் முழுமையான உடல்நலத்துக்குப் பயனுள்ளவை என்று சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.  

இதனால், ‘சிட்ரஸ்’ பழத்தோலை வீசிவிடாமல் சமையலில் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் பழங்களின் எல்லாப் பகுதிகளையும் வீணாக்காமல் பயன்படுத்த முடியும்.

குறிப்புச் சொற்கள்