தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீச்சல் பயிற்சியால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்

2 mins read
89352964-a6f7-49d1-8467-908d1895f952
உடல் நலம் காப்பதில் நீச்சல் தனிப் பங்கு வகிக்கிறது. - படம்: ஃப்ரீபிக்‌

உலகில் மூன்றில் இரு பங்கு தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும், பெரும்பாலானோருக்கு நீந்தத் தெரிவதில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.

நகரங்களில் வசிப்பவர்களில் பலர் நீச்சல் பயிற்சி இன்றியே இருக்கிறார்கள். ஆனால், நீச்சல் என்பது நமது பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான ஒரு வாழ்க்கைத் திறனாகும். அதுமட்டுமல்லாமல் உடல் நலம் காப்பதில் அது தனிப் பங்கு வகிக்கிறது.

நீச்சல் பயிற்சி என்பது உடல் முழுவதையும் இயக்கும் சிறந்த உடற்பயிற்சியாகும். தினசரி 30 நிமிட நீச்சல் பயிற்சி மேற்கொண்டால் உடல் மட்டுமின்றி மனமும் பல நன்மைகளைப் பெறுகிறது.

நீச்சலின்போது உடலிலுள்ள அனைத்துத் தசைகளும் செயல்படுவதால் கை, கால், தொடைப் பகுதிகளிலுள்ள முக்கியத் தசைகள் வலிமை அடைகின்றன. நீண்ட காலமாக நீச்சல் பயிற்சியை மேற்கொள்பவர்கள் வலுவான உடல் அமைப்பைக் கொண்டிருப்பார்கள்.

மேலும், நீச்சல் பயிற்சியின்போது அதிகப்படியாக மூச்சு இழுத்துவிட நேரிடும். இது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதால் இதயம், நுரையீரல் ஆகிய உடல் உறுப்புகளின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது.

உடலின் கொழுப்பைக் குறைத்து எடையைக்‌ கட்டுப்படுத்தவும் நீச்சல் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நடைப்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு உள்ளிட்ட பலவித முயற்சிகளைக் காட்டிலும் உடல் எடையைக் குறைக்க சிறப்பான பலன்களை நீச்சல் தரக்கூடியது. குறைந்தபட்சம் 30 நிமிடங்களில் 350க்கும் மேற்பட்ட கலோரிகளை நீச்சலின்வழி குறைக்கலாம்.

அதுமட்டுமல்லாமல், மன அழுத்தத்தைக் குறைத்து, தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் நீச்சல் உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. நீந்துவதால் சீரடையும் உடலின் ரத்த ஆக்ஸிஜன் விநியோகம், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, மன உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் தருகிறது.

நீச்சல் அடிப்பதால் உடலிலுள்ள களைப்புகள் நீங்கி, இரவு நேரத்தில் உறக்‌கத்தின் தரமும் மேம்படுகிறது.

நீச்சலுக்கு வயது, பாலினம் போன்ற எந்தத் தடையுமில்லை என்பதால், அனைவரும் இந்த உடற்பயிற்சியைத் தங்கள் வாழ்க்கையுடன் இணைத்துக்கொள்ளலாம். இதைத் தொடர்ச்சியாகச் செய்துவருவது நீண்டகால ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறுவதற்கு வழிவகுக்‌கும்.

குறிப்புச் சொற்கள்