வாழ்க்கையிலும் தமது செயல்பாடுகளிலும் கட்டுக்கோப்பையும் நிதானத்தையும் கடைப்பிடிக்கும் தேவி சம்பந்தன், 76, வேலை, வாழ்க்கைச் சமநிலையைப் பின்பற்றுபவர்.
நெடுந்தொலைவு ஓட்டக்காரராக இளவயதில் திருவாட்டி தேவியிடம் இருந்த துடிப்பை இப்போதும் இவரிடம் காணலாம். முகாமிடுவது, மலையேறுவது போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் தம் கணவருடன் இவர் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்.
பல ஆண்டுகளாக, பொழுதுபோக்காகச் சமூக நிலையத்திலும் இந்தியர் நற்பணிச் செயற்குழுவிலும் அவர் செயலாற்றினார்.
நண்பர் ஒருவரின் பரிந்துரையில் 2012ஆம் ஆண்டு சுகாதார மேம்பாட்டு வாரியத்தில் சுகாதாரத் தூதராக இணைந்து, 13 ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் செயல்பட்டுவந்தார் திருவாட்டி தேவி.
பேரங்காடிகளில் ஊட்டச்சத்தைக் குறிக்கும் ஒட்டுவில்லைகளைப் படிக்க பிறர்க்கு உதவுவதுடன் உடல்நலப் பரிசோதனைகளிலும் இவர் உதவுவார்.
74 வயதில் நீரிழிவுப் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து, திருவாட்டி தேவி உணவைக் கட்டுப்படுத்தத் தொடங்கினார்.
காலையில் பழம் உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்த இவர், ஆலோசனைக்குப் பிறகு அவற்றை நண்பகலில் சாப்பிடத் தொடங்கினார்.
“காய்கறிகள், தயிர், கடலை ஆகியவற்றைக் காலையில் உண்கிறேன். இரண்டு மணி நேரம் கழித்து, சர்க்கரையில்லா பிஸ்கெட்டுகளுடன் காப்பி குடிப்பேன். காப்பியில் பால் மட்டும் சேர்ப்பேன்,” என்கிறார் இவர்.
தொடர்புடைய செய்திகள்
இரவு நேரத்தில் இவர் முழுச் சாப்பாடு உண்கிறார்; சோறு சமைக்கும்போதும் பாதி குவளை அரிசியையும் பாதி குவளை சிறுதானியத்தையும் சேர்த்துக்கொள்கிறார்; சில நேரங்களில் கறுப்புக் கவுனி அரிசி, புழுங்கல் அரிசி, சப்பாத்தி ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்வார்.
தீபாவளிக் கொண்டாட்டங்களின்போது நெய்ச்சோறு, இறைச்சிக்குழம்பு உள்ளிட்ட உணவுகளைக் குறைவாக எடுத்துக்கொள்வதாகத் திருவாட்டி தேவி கூறினார்.
இத்தகைய கட்டுப்பாடு தமது வாழ்க்கைமுறையை மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட திருவாட்டி தேவி, அவ்வாறு சாப்பிடுவதால் தாம் சுறுசுறுப்பாகவும் உடல்நலத்தோடும் இருப்பதாகச் சொன்னார். அதனால் அவர் மகிழ்ச்சியோடும் காணப்படுகிறார்.
“நம்மை நாம்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதை உணர்ந்தால் விருப்பத்துடன் நம் வாழ்க்கைமுறையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்,” என்கிறார் இவர்.
தீபாவளி மகிழ்ச்சியான திருநாள் என்றபோதும் நீண்டகால உடல்நலம் குறித்து அனைவருமே சிந்திப்பது நல்லது என்பது இவரது கருத்து.