சிங்கப்பூரில் பெண்களின் நலனைப் பறிக்கும் உயிர்க்கொல்லி நோய்களில் இதய நோய்க்கு முதன்மையான இடம் என்று சில மாதங்களுக்குமுன் வெளிவந்த செய்தியை எளிதில் மறந்துவிட முடியாது.
அதன் தொடர்பில் இதய நலன் சார்ந்தவற்றில் பெண்கள் கைகொள்ள வேண்டியவை எவை, இவ்வகை சுகாதார இடர்கள் ஏற்படும்போது இவற்றிலிருந்து மறுவாழ்வு அளிக்க மருத்துவத் துறை நல்கும் மேம்பட்ட சிகிச்சை முறைகள் யாவை என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு தமிழ் முரசிடம் பதிலளித்தார் மருத்துவரும் இதயநோய் வல்லுநருமான டாக்டர் தவிந்தர் சிங்.
நெஞ்சுவலி மட்டுமே அறிகுறியன்று
ஆண்களைவிட பெண்களுக்கு மாரடைப்பின் அறிகுறிகள் அவ்வப்போது வேறுபடுவதாகவும் பொதுவான அறிகுறிகளுடன் இதர வலிகளையும் அவர்கள் சந்திக்க நேரிடும் என்று டாக்டர் சிங் தெரிவித்தார்.
“கைகள், கழுத்து, தாடை அல்லது முதுகில் லேசான அல்லது கடுமையான வலி ஏற்படலாம்.
“எனினும், இருபாலருக்கும் ஒரே மாதிரியான தீவிரம் கொண்ட நெஞ்சுவலி ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அண்மைய ஆய்வு கண்டறிந்துள்ளது,” என்றார் அவர்.
உடல்நலம் நலிவுறாதோருக்கும் இதய நோய் வரலாம்
மாரடைப்பைப் பொறுத்தவரை, பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் அறிகுறிகள் பொதுவானதா அல்லது பெண்களின் இதய நலன் குறித்து அபாய ஒலி எழுப்பும் அறிகுறி ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் விவரித்தார் கேடன்ஸ் ஹார்ட் சென்டரின் மருத்துவ இயக்குநருமான டாக்டர் சிங்.
இதய நோய் என்பது உடல்நலம் பேணாமல், உடற்தகுதியில்லாமல் இருப்போரை மட்டுமன்று, உடற்தகுதியுள்ள பெண்களையும் பாதிக்கக்கூடும் என டாக்டர் சிங் எச்சரித்தார்.
“உடற்தகுதியைப் பாராது, பெண்களை இதய நோய் பாதிக்கக்கூடும்,” என்ற அவர், பெண்களைப் பாதிக்கும் இதயநாள நோய் பற்றியும் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நோய் ஏற்படுவதற்கான அபாயக் கூறுகளைக் குறைக்க வழக்கமான உடற்பயிற்சிகள் உதவும். அதேவேளையில், மரபியல், ஹார்மோன் மாற்றங்கள், ஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலமே தவறாக அவர் உடலைத் தாக்குவதால் ஏற்படும் தன்னுடல் தாக்குமை நோய்கள் (autoimmune diseases), மனஅழுத்தம் போன்ற மற்றக் காரணிகளும் பெண்களின் இதய நோய்க்கு வித்திடலாம் என்றார் டாக்டர் சிங்.
நோயறிதலிலும் தனி கவனம் வேண்டும்
உடற்கூறுடன் சுகாதாரம் சார்ந்த பல்வேறு காரணங்களால் பெண்களின் வாழ்நாளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோய்களுள் இதய நோய் முக்கிய இடம் வகிக்கிறது.
ஆண்களுடன் ஒப்புநோக்க, பெண்களுக்குக் குறைந்த அளவிலான அறிகுறிகளே தென்படுகின்றன. இதனால் நோயைக் கண்டறிவதற்கும் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கும் தாமதமாகிறது என்று டாக்டர் சிங் கூறினார்.
’’பெண்களுக்கு இதயத்தின் சிறிய ரத்த நாளங்களில் உட்படிவுகள் (plaque) காணப்படும், ஆனால் ஆண்களுக்கு பொதுவாக இத்தகைய உட்படிவங்கள் இதய தமனிகளில் (arteries) படிகின்றன.
இதன் விளைவாக, மாரடைப்பு தொடர்பில் சோர்வு, தலைச்சுற்றல், குமட்டல், முதுகு அல்லது தாடையில் வலி போன்ற பொதுவாக காணப்படாத அறிகுறிகளையும் அனுபவிக்கக்கூடும்,” என்று டாக்டர் சிங் தெரிவித்தார்.
இவை, இதய நோயுடன் சம்பந்தப்பட்டவையாகக் கருதப்படுவதில்லை. பதற்றம் அல்லது செரிமானப் பிரச்சினைகள் என்றே இவை கருத்தப்படுகின்றன. இதனால், இத்தகைய அறிகுறிகள் கவனிக்கப்படாமல், தவறான புரிதலோடு அணுகப்படுகின்றன.
பாரம்பரிய, ஆரம்பகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நோயறிதல் சோதனைகளும் சிகிச்சை உத்திகளும் முதன்மையாக ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் தொடங்கப்பட்டன என்று குறிப்பிட்ட திரு சிங், இது பெண்களின் இதய நோயைத் துல்லியமாகக் கண்டறிவதில் சவால்களுக்கு வழிவகுத்தது எனவும் கூறினார்.
தொக்கி நிற்கும் சவால்கள்
பெண்களிடம் இதய நோயைக் கண்டறிவதில் சவால் மிகுந்ததாக இருப்பதற்கான காரணங்கள் யாவை என்பதையும் டாக்டர் சிங் விவரித்தார்.
பெண்களுக்கு நுண் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளது. இது, பெரிய தமனிகளைவிட சிறிய தமனிகளைப் பாதிக்கிறது. இயல்புக்கு மாறான இத்தகைய பிறழ்வுகளை ‘இசிஜி’, மனஅழுத்த சோதனைகள் போன்ற வழக்கமான பரிசோதனைகள் கண்டறியாமல் போகலாம். இது, நோய் கண்டறிதலில் பின்னடைவை ஏற்படுத்துகிறது.
- பொதுவான மரபுவழி ‘கோரனரி ஆஞ்சியோகிராஃபி’ எனப்படும் இதய ரத்தநாள வரைவு, பெரிய தமனிகளில் உள்ள அடைப்பைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், பெண்கள் நுண் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். அப்போது நோய்வாய்ப்பட்டிருக்கும் நிலையை அவர் தவறவிடலாம். இது பலனற்ற சிகிசிச்சைகளுக்கு வழிவகுக்கக்கூடும்.
- ஆண்களுக்கு ஏற்படுவதுபோல கடுமையான இதய நோய் ஏற்படுவதற்கு முன்னரே மிதமான அறிகுறிகளுடன் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது.
- இதய நோய் பிரச்சினையுள்ள குடும்பப் பின்னணி உள்ளிட்ட அபாயக் காரணிகள் கொண்ட பெண்கள் தங்கள் இதயநலனைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் பட்டியலிட்டார் டாக்டர் சிங்.
- குறிப்பாக, உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இதய நோய் இருந்தால், வழக்கமான இதயப் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்
- அசாதாரண சோர்வு, மூச்சுத்திணறல், தாடை, முதுகு, கரங்களில் ஏற்படும் அசௌகரியங்கள் முதலிய ஆரம்பநிலை அறிகுறிகளைப் புறக்கணிக்காதீர்.
- குறைவான தூக்கமும் நாட்பட்ட மனஅழுத்தமும் இதய நோய்க்கு வழிவகுக்கும் காரணிகள். கவனத்துடன் சுகாதாரமிக்க வாழ்வியல் முறையைக் கடைப்பிடியுங்கள்.
தவறு
*பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவது அரிதானது
*மாரடைப்பின்போது எப்போதும் பெண்களுக்கு நெஞ்சு வலி ஏற்படுகிறது.
*இளம்பெண்கள் இதய நோய் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
*நீங்கள் ஆரோக்கியமாக இருந்து நன்றாக சாப்பிட்டால், உங்களுக்கு இதய நோய் வராது
*ஆரோக்கியமான வாழ்க்கை முறை இதய ஆரோக்கியத்தை உறுதி
சரி
*பெண்களின் உயிரைப் பறிக்கும் நோய்களில் இதயநோய்க்கு முதலிடம்
*பல பெண்களுக்கு குமட்டல், தலைச்சுற்றல் அல்லது முதுகுவலி போன்ற இயல்புக்கு மாறான அறிகுறிகளும் தென்படக்கூடும். இதில் மாரடைப்பின்போது ஏற்படும் நெஞ்சு வலி உட்படாது.
*நோய்க்கான அபாயக் காரணிகள் ஆரம்பத்திலேயே ஏற்படலாம்.
*மேலும், பேறுகால வலிப்பு (preeclampsia), உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு உட்பட பிற வகை பாதிப்புகள் சார்ந்த ஆபத்து எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்.
*ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆபத்தைக் குறைக்கலாம். ஆயினும், அதே வேளையில், இதய நலன் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவது சாத்தியமே.