ஞானப்பல் வலிக்கு வீட்டு வைத்தியம்

2 mins read
973f1717-29d0-4f85-b858-3667bdb18350
பாதியளவு முளைத்த ஞானப்பற்களைச் சுத்தம் செய்வது கடினமாக இருக்‌கலாம் என்பதால் பல் சொத்தை, ஈறுப் பிரச்சினைகளினால் வீக்கம், வலி, அருகிலுள்ள பற்கள் பாதிப்படைவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. - படம்: ஃப்ரீபிக்

ஒருவருக்கு ஞானப்பல் (Wisdom tooth) முளைக்கும்போது அவரது அறிவு வளர்ச்சி அடைகிறது என்ற பழைய நம்பிக்கையை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

மேல் தாடையிலும் கீழ்த் தாடையிலும் இரு பக்கங்களிலும் இறுதியில் அமைந்துள்ள பற்க‌ள் ஞானப்பற்கள் எனப்படுகின்றன. பெரும்பாலான மக்களுக்கு ஞானப்பற்கள் 17 வயதுக்கும் 25 வயதுக்கும் இடையில் முளைக்கின்றன.

நமது முன்னோர்கள் இறைச்சி, பச்சைக் காய்கறிகள் போன்ற, மெல்வதற்குக் கடினமான உணவுகளைச் சாப்பிட்டனர். ஆனால், காலப்போக்‌கில் நாம் மென்மையான உணவுகளை அதிகம் உட்கொள்ள ஆரம்பித்ததால் அதற்கு ஏற்பத் தாடையின் பயன்பாடு குறைந்து, அதன் அளவும் சிறியதாக மாற்றம் அடைந்துவிட்டது.

இந்தப் பரிணாம வளர்ச்சியினால், இடப்பற்றாக்குறையால் ஞானப்பற்கள் நேராக முளைக்க முடியாமல், முழுமையாக வெளியே வராமல் அல்லது ஈறுகளுக்குள் புதைந்து விடும் நிலைமை ஏற்படுகிறது. பாதியளவு முளைத்த ஞானப்பற்களைச் சுத்தம் செய்வது கடினமாக இருக்‌கலாம் என்பதால் பல் சொத்தை, ஈறுப் பிரச்சினைகளினால் வீக்கம், வலி, அருகிலுள்ள பற்கள் பாதிப்படைவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

இத்தகைய பாதிப்புகளைப் போக்க எளிய முறையில் வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம். இதனால் பற்கள் சொத்தையாகும் ஆபத்து குறைகிறது.

உப்பு நீர்

உப்பு நீரை இயற்கையான கிருமிநாசினியாகப் பயன்படுத்தலாம். இது, உணவுத் துகள்களையும் பற்களுக்கு இடையில் சிக்கியிருக்கும் அழுக்குகளையும் அகற்ற உதவுகிறது.

வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து, ஓரிரு நிமிடங்களுக்‌கு வாய் கொப்பளிப்பதால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பதோடு ஈறு வீக்கமும் குறையும்.

தொடர்புடைய செய்திகள்

கிராம்பு

கிராம்பில் யூஜெனோல் என்ற இயற்கையான, உணர்வு இழக்கச் செய்யும் மருந்துப்பொருள் காணப்படுகிறது. மேலும், இதிலுள்ள அழற்சி எதிர்ப்புத்தன்மையும் கிருமிநாசினியாகவும் பற்சொத்தையை எதிர்க்‌க உதவுகின்றன.

பஞ்சில் சில துளிகள் கிராம்பு எண்ணெய்யை விட்டு, அதைப் பற்களுக்‌கு இடையில் வைத்துக் கொள்ளலாம். அல்லது முழுக் கிராம்பை மென்று அதன் சாறு, வலி தரும் ஞானப்பல்லில் படுமாறு செய்யலாம்.

பூண்டு

ஆன்டிஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு ஆகிய பண்புகள் நிறைந்த பூண்டு, ஞானப்பல்லால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும். இதிலுள்ள அல்லிசின் என்ற பொருள் கிருமிநாசினித் தன்மை வாய்ந்தது.

பல் வலிக்கும்போது பூண்டை நசுக்கி அதை அப்படியே வலி உள்ள பற்களில் தடவலாம். அல்லது சில துளிகள் பூண்டு எண்ணெய்யைப் பஞ்சில் விட்டு, வலிக்கும் பல்லின்மீது வைக்கலாம்.

‘ஐஸ்’ ஒத்தடம்

‘ஐஸ்’ கட்டியைப் பயன்படுத்தி ஒத்தடம் தருவதால் பல்வலியும் வீக்கமும் குறையும். எந்தப் பக்கம் பல் வலியை உணர்கிறீர்களோ அந்தக் கன்னத்தில் இவ்வாறு ஒத்தடம் கொடுக்‌கவும்.

இப்படிச் செய்யும்போது அந்தப் பகுதியிலுள்ள ரத்த நாளங்கள் சுருங்குகின்றன. இதனால் வலியுள்ள இடத்தில் ரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, வலி, வீக்கம், அழற்சி அனைத்தும் நீங்கி விடும்.

ஞானப்பல் வலியைக் குறைக்க வீட்டில் இத்தகைய இயற்கையான வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்றாலும், வலியின் தீவிரம் பல நாள்களுக்குத் தொடர்ந்தால் உடனடியாகப் பல் மருத்துவரை அணுகுவது நல்லது.

குறிப்புச் சொற்கள்