மனித உறவுகளில் உண்மையும் பொய்யும் பின்னிப் பிணைந்தவையாகவே உள்ளன.
நாம் ஒருவரை எவ்வாறு மதிப்பிடுகிறோம்? யார் நம்பகமானவர், யார் பொய்யர் என்று எப்படித் தீர்மானிக்கிறோம்? இவ்வினாக்களுக்கு உளவியல், அறிவியல் ஆய்வுகள் பல சுவாரஸ்யமான உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.
பொய் கண்டறிதலில் பகுத்தறிவின் பங்கு
ஒருவர் பொய் சொல்வதை நமது உள்ளுணர்வால் மட்டும் கண்டறிவது நம்பகமான வழி அல்ல என்று கூறுகிறார் எழுத்தாளரும் சிந்தனையாளருமான சர் ஸ்டீபன் ஃப்ரை.
பல சமயங்களில் உள்ளுணர்வு நம்மைத் தவறான முடிவுகளுக்கே இட்டுச் செல்கிறது.
உண்மையில், பொய்யைக் கண்டறிதல் சாத்தியமாகும் நேரங்களில் அது பெரும்பாலும் ஆதாரங்களை நுணுக்கமாக கவனித்து, தர்க்க ரீதியாகப் பகுத்தறிவதன் (logic) மூலமே நிகழ்கிறது.
எனவே, உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதை விட, தகவல்கள், ஆதாரங்களை ஆராய்வதே அறிவுடைமையாகும்.
தோற்றத்தை வைத்து மதிப்பிடுவதின் ஆபத்துகள்
மனித முகம், தோற்றம் குறித்த பல தவறான நம்பிக்கைகள் நம்மிடையே வேரூன்றியுள்ளன.
முக அமைப்பை வைத்துக் குணாதிசயங்களைக் கணிக்க முயலும் ஃபிசியோக்னோமி (Physiognomy) என்ற பண்டைய முறைக்கு அறிவியல்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை. மாறாக, இது இன, சமூக பாகுபாடுகளை ஊக்குவிப்பதாகவே கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல், அழகான தோற்றம் கொண்டவர்கள் புத்திசாலிகளாகவும் நம்பகமானவர்களாகவும் இருப்பார்கள் என்ற தவறான மனப்பான்மை ஹேலோ விளைவு (Halo Effect) என அழைக்கப்படுகிறது.
புன்னகை, முக சமச்சீர்மை, மென்மையான முக அம்சங்கள் நம்பிக்கையை உருவாக்கும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. ஆனால் சில சூழல்களில், மிக அதிகமான சமச்சீர்மை இயல்பற்றதாகத் தோன்றி, மாறாக நம்பிக்கையைக் குறைக்கவும் செய்யலாம்.
குழு மனப்பான்மையும் அதன் பாதிப்புகளும்
மனிதர்கள் குழுவாகச் சிந்திக்கும்போது, தங்களின் தனிப்பட்ட பகுத்தறிவை இழக்கும் நிலை அடிக்கடி நிகழ்கிறது.
தெளிவற்ற அல்லது பலவீனமான ஆதாரங்களே இருந்தாலும், பெரும்பான்மையின் கருத்தையே சரி என்று ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கு உருவாகிறது. குழுவின் கருத்துக்கு மாறான உண்மையான ஆதாரங்கள் இருந்தாலும், அவற்றை மனம் எளிதில் புறக்கணித்துவிடுகிறது.
இதுவே, ஒரு குழுவிற்குள் இருக்கும் பொய்யர்களைக் கண்டறிவதற்கான மிகப்பெரிய தடையாக மாறுகிறது.
உடல் மொழி குறித்த தவறான நம்பிக்கைகள்
வியர்வை, கண்களைத் தவிர்ப்பது, கைகளில் நடுக்கம் போன்றவை பொய் சொல்வதற்கான உறுதியான அறிகுறிகள் என்று பொதுவாக நம்பப்படுகிறது.
ஆனால் அறிவியல் ஆய்வுகள் இதை மறுக்கின்றன. இத்தகைய அறிகுறிகள் கூச்ச சுபாவம், பயம், பதற்றம் காரணமாகவும் தோன்றலாம். முகபாவனைகளை, உடலியல் மாற்றங்களை வைத்து ஒருவர் பொய் சொல்வதைக் கண்டுபிடிக்க முடியாது.
எனவே, உடல் மொழியை மட்டும் வைத்து ஒருவரை பொய்யர் என்று முடிவெடுப்பது அறிவியல் ரீதியாக தவறானது.
பரிணாம வளர்ச்சியும் அனிச்சையான முடிவுகளும்
பரிணாம வளர்ச்சியின் விளைவாக, மனித மனம் ஒருவரை நண்பரா அல்லது எதிரியா என்று மிகக் குறுகிய நேரத்தில் தீர்மானிக்கும் திறனைப் பெற்றுள்ளது.
பழங்காலத்தில் இது உயிர் காக்க உதவியிருந்தாலும், சிக்கலான நவீன சமூகத்தில் இவ்வாறான வேகமான, அனிச்சையான முடிவுகள் பல சமயங்களில் தவறுகளையே உருவாக்குகின்றன.
இருப்பினும், அனைத்துப் பொய்களும் தீயவை அல்ல.
சமூக உறவுகளில் இணக்கத்தைப் பேண சில சிறிய பொய்கள் (white lies) அவசியமாகின்றன. உற்சாகம் அளிக்க, தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கச் சொல்லப்படும் இவ்வகைப் பொய்கள், சமூக உறவுகளை இணைக்கும் ஒரு பசை போலச் செயல்படுகின்றன.
ஒருவரை நம்பும்போதோ, மதிப்பிடும்போதோ, முதல் அபிப்பிராயம் அல்லது உள்ளுணர்வு மட்டும் போதுமானது அல்ல.
அதற்குப் பதிலாக, உண்மையான ஆதாரங்கள், சூழல், தர்க்க ரீதியான பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவெடுப்பதே அறிவியல் ரீதியாகவும் மனித ரீதியாகவும் சிறந்த வழி என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

