இவ்வாண்டு தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பு, வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் இம்மாதம் 12ஆம் தேதி சனிக்கிழமை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் ‘இலக்கியச் சங்கமம் 2025’ எனும் நிகழ்ச்சியை நடத்தியது.
வாழ்வியல் இலக்கியப் பொழில் இவ்வாண்டு பாலர் பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள்வரை பத்துப் பிரிவுகளில் இலக்கியப் போட்டிகளை நடத்தியது. அப்போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் தமது படைப்புகளை மீண்டும் வழங்க நிகழ்ச்சியில் வாய்ப்பளிக்கப்பட்டது.
திருவாட்டி வானதி பிரகாஷ் ‘சொற்கட்டுக் களிறு’ என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார். சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக, தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பட்டக்கல்வி தலைவர் முனைவர் மணிவண்ணன் முருகேசன் ‘சங்க இலக்கியத்தில் சமூக கட்டமைப்பும் புலவர் நோக்கும்!’ என்ற தலைப்பில் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி ‘எண்ணும் எழுத்தும்’ என்ற தலைப்பில் தலைமையுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் ‘ஏன் தமிழ்?’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
திருவாட்டி வர்தினி குழுவினர் ‘முத்தொள்ளாயிரம் காட்டும் மூவேந்தர்கள்’ என்ற தலைப்பில் சில பாடல்களுக்கு இசை நாட்டியம் வழங்கினர். திருச்சியிலிருந்து வந்திருந்த சிறப்புப் பேச்சாளர் முனைவர் மு. ஜோதிலட்சுமி ‘நின்ற சொல்லர் நீடு வாழ்வர்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இணையம்வழி நடத்தப்பட்ட (பொழில்) போட்டி வெற்றியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.