மாறும் வயதும் சலிப்பூட்டும் நட்பும்

மாறும் வயதும் சலிப்பூட்டும் நட்பும்

2 mins read
0852c301-fba9-49ab-9cab-e2f20cdb060d
வயது அதிகரிக்கும்போது நட்பின் எதிர்பார்ப்புகள் மாறலாம். - படம்: செயற்கை நுண்ணறிவு

இளமைப் பருவத்தில் இருந்த உற்சாகம் பெரியவர்களான பிறகு நட்பு வட்டங்களில் பொதுவாகக் குறைந்துவிடுகிறது.

பழைய நண்பர்களைச் சந்திக்கும்போது “வேலை எப்படிப் போகிறது?”, “வார இறுதித் திட்டங்கள் என்னென்ன?” என்ற அதே பழைய கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்படுகின்றன.

வயது அதிகரிக்கும்போது பொறுப்புகள் கூடுகின்றன. நிதியை நிர்வகிப்பது, சொந்தமாக வீடு வாங்குவது, வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்குமான சமநிலையைப் பேணுவது எனப் பல சவால்களை நாம் எதிர்கொள்கிறோம்.

பழக்கத்தின் அருமையும் அவசியமும்

பல்கலைக்கழக நாள்களில் இரவில் ஒன்றாக வெளியே செல்வது, புதிய திட்டங்களில் ஈடுபடுவது என நாள்தோறும் புதிய அனுபவங்கள் கிடைப்பது வழக்கம்.

ஆனால் வேலைக்குப் போக ஆரம்பித்ததும் அந்த நிலை மாறுகிறது. வாழ்க்கை மாற்றங்கள், மாறுபடும் ஆர்வங்கள், மோதல்களைத் தவிர்க்கும் எண்ணம் ஆகியவை காலப்போக்கில் நட்பின் சுவாரசியத்தைக் குறைக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனினும், நட்பு வட்டம் எப்போதும் புதியதாகவும் பரவசமளிப்பதாகவும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சில சலிப்பூட்டும் நட்புகளில்தான் நாம் நாமாக இருக்க முடிகிறது.

“சலிப்பூட்டும் ஒரு நட்பைக் கொண்டிருப்பது பெரும்பாலும் ஆரோக்கியமானதே,” என்கிறார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் உளவியல் உதவிப் பேராசிரியர் டாக்டர் கென்னத் டான்.

நட்பும் மன நெகிழ்வுத்தன்மையும்

ஆரோக்கியமான நட்பு நமது மனத்தின் நெகிழ்வுத்தன்மையை வளர்க்கிறது. அது உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் மற்றவர்களின் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

அதேநேரம், அதிகப்படியான நட்பு வட்டங்களும் பிரச்சினையாக மாறலாம். நண்பர்களின் எண்ணங்கள் ஒரே மாதிரியாக இருக்கும்போது மாறுபட்ட சிந்தனைகளுக்கான வெளிப்பாடு குறைந்து நமது சிந்தனைத் திறன் சுருங்கவும் வாய்ப்புண்டு.

நட்புறவில் தேக்கம் ஏற்படுவதற்கான அறிகுறிகள்

நட்பு வட்டத்தில் ஒருசிலர் அடுத்து என்ன சொல்வார்கள் என்பதை யாராலும் எளிதில் கணிக்க முடியாது. புதிய தலைப்புகளைப் பற்றிப் பேச முயலும்போது மீண்டும் பழைய கதைகளுக்கே உரையாடல் திரும்பும்.

அத்தகைய சூழல்கள் உறவு தேக்கமடைந்ததற்கான அறிகுறிகள் என்றார் ‘லைட்டிங்வே கவுன்சிலிங் அண்ட் தெரபி’ அமைப்பின் இணை நிறுவனரும் மனநல ஆலோசகருமான ஸ்டெல்லா ஓங்.

நட்பை எவ்வாறு மேம்படுத்துவது?

நட்பில் சுவாரசியத்தைத் தக்கவைக்கப் புதுமைகளை நாடுவதோடு மட்டுமல்லாமல் நண்பர்களின் தற்போதைய விருப்பங்கள், சவால்கள் குறித்து ஆர்வத்துடன் விசாரிக்கலாம்.

பழைய கதைகளையே பேசாமல் அவர்களின் தற்போதைய விருப்பங்கள் குறித்துக் கேட்கலாம்.

அர்த்தமுள்ள உரையாடல்களை ஒருவர் முதலில் தொடங்கி, அவரின் சொந்த சவால்களைப் பகிர்ந்துகொள்ளலாம். நட்பில் என்ன எதிர்பார்ப்புகள் உள்ளன என்பதை வெளிப்படையாகக் கூறலாம்.

“நண்பர்கள் சிலர் நம்மைக் கடந்த காலத்தோடு கட்டிப்போடுவார்கள், வேறு சிலர் நம்மோடு இணைந்து வளர்வார்கள். இதில் எதிர்பார்ப்புகள் மாறும்போதுதான் சிக்கல் எழுகிறது. எந்த நட்பும் எப்போதும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதில்லை,” என்று திருவாட்டி ஓங் கூறினார்.

எதுவாயினும் மனந்திறந்த உரையாடலே ஆரோக்கிய நட்பிற்கான திறவுகோல்.

தேவைகளை வெளிப்படுத்தி, நண்பர்களின் தேவைகளைக் காதுகொடுத்துக் கேட்டுப் புதிய முறையில் இணைவதற்கான வழிகளை ஆராய்வது நல்லது.

குறிப்புச் சொற்கள்