அதிகரித்து வரும் ‘இருதிரை’ போக்கு

2 mins read
de55685a-1129-4f70-9449-39e6e5e6cc20
‘இருதிரை’ போக்கு, ‘அட்டென்‌‌ஷன் ஸ்பேன்’ எனும் கவனம் செலுத்தும் நேரம் குறைவதற்குக் காரணமாகலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். - படம்: பிக்சாபே
multi-img1 of 2

‘ஓடிடி’ தளத்தில் ஒரு தொடரைப் பார்த்துக்கொண்டே, இணையத்தில் ‘ஷாப்பிங்’ மேற்கொள்வது, நாளை சமைக்கவுள்ள உணவின் செய்முறையைப் பார்ப்பது, இணையம்வழி விற்பனையாகும் உடைகளைத் தெரிவுசெய்வது, மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் தளங்களில் தகவல் பரிமாறிக்கொள்வது எனப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடாதோரை இன்று விரல்விட்டு எண்ணிவிடலாம் என்றால் அது மிகையில்லை.

தொழில்நுட்பம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத பங்காற்றிவரும் நிலையில், அவ்வப்போது திரை நேரம், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த கவலை எழாமல் இல்லை.

அவற்றுக்குத் தீர்வு காணுமுன், ‘செகண்ட் ஸ்க்ரீனிங்’ எனப்படும் ஒரே நேரத்தில் இரு திரைகளில் கவனம் செலுத்தும் போக்கு அதிகரித்து வருவதையும் காணமுடிகிறது.

தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைக் காண்போரும் கைகளில் திறன்பேசி, ‘டேப்’, மடிக்கணினி, மின்னூல் உள்ளிட்ட ஏதாவதோர் இரண்டாம் திரையைப் பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்காவில் நடைபெற்ற அண்மைய ஆய்வு, 83 விழுக்காட்டினர் தொலைக்காட்சி பார்க்கும்போது, மற்றொரு திரையிலும் நேரம் செலவிடுவதாகக் கூறியுள்ளது. ஆண், பெண் வேறுபாடின்றி இது அனைவரிடமும் காணப்படும் நிலை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இது தொலைக்காட்சி மீது கவனமில்லாத நிலை என்பதைவிட, ஒரே நேரத்தில் மூளைக்குப் பல வேலைகள் கொடுப்பதற்கான தேவை என வரையறுக்கிறது மனநல ஆய்வுச் சமூகம்.

இந்தப் பழக்கம், மனநலனுக்கு ஊறு விளைவிப்பதாகவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதற்கு ஏற்றார் போலவே, ஓடிடி தளங்களின் தொடர்கள் எழுதப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இரண்டாம் திரையில் கவனம் செலுத்த முடியாமல் போகும் வகையிலான கதைகளுக்கு வரவேற்பு குறைந்து வருகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு காட்சியில் கவனம் சிதறினாலும், அடுத்தடுத்த கதைக்களம் புரியாமல் போகும் அளவிலான, நுணுக்கமான கதையமைப்புள்ள தொடர்களைப் பலர் விரும்பிப் பார்ப்பதில்லை என்று தெரியவந்துள்ளது.

பார்வையாளர்களின் முதன்மைத் திரை கைப்பேசி என்பதால், அதிலிருந்து அவர்கள் பெரிதாகத் திசைதிரும்ப விரும்புவதில்லை. அதையும் மீறி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அவர்கள் கவனத்தைச் சிதறடித்தால், குழப்பமடைந்து, அதை அணைத்துவிடும் போக்கு அதிகரிப்பதால் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அதற்குக் கூடுதல் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.

இந்தப் போக்கை ஊன்றிக் கவனிக்கும் விளம்பரங்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரிகிறது.

தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களில் திறன்பேசி பயன்படுத்துவோர் எடுக்கும் வணிக முடிவுகள் தொழில்களுக்கு லாபமளிப்பதாகவும் தெரிகிறது. இதையொட்டி, ‘கிராஸ் டிவைஸ் கேம்பைன்ஸ்’ (Cross-Device Campaigns) எனும் பல கருவிகளிலும் ஒரே நேரத்தில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்தும் போக்கும் அதிகரித்துவருகிறது.

இது காலப்போக்கில், முடிவெடுக்கும் திறனை மழுங்கடித்து, தூக்க சுழற்சி பாதிப்பில் தொடங்கி, பதற்றம், ஓய்வின்மை ஆகியவற்றின் அளவைக் கூட்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்