மூன்று மணிநேரம் இடைவேளையில்லாமல் தொடர்ந்து பக்திப் பாடல்களைப் பாடி மக்களை இசை வெள்ளத்தில் மூழ்கடிக்கக் காத்திருக்கிறார் இந்தியத் திரையிசைப் பாடகர் வி.எம்.மகாலிங்கம்.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் தீமிதித் திருவிழாவை முன்னிட்டு இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டிருக்கும் திரு மகாலிங்கமும் அவரது இசைக்குழுவும் இசைக் கச்சேரி நிகழ்ச்சியை ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் (அக்டோபர் 19) இரவு 9 மணிக்குப் படைக்கவுள்ளனர்.
இதை முன்னிட்டு தமிழ் முரசிடம் பேசினார் திரு மகாலிங்கம்.
“என்னுடைய கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இசையும் பாட்டும் நிறைந்திருக்கும். அவற்றையும் எனது தாயார் பாடும் கும்மிப் பாடல்களையும் சிறுவயதிலிருந்தே கேட்டு வளர்ந்தேன். எனது தாத்தாவும் மாரியம்மன் தாலாட்டு போன்ற பக்திப் பாடல்களை கோவில்களில் விடிய விடிய பாடுவார்,” என்றார் திரு மகாலிங்கம். சிறுவயதிலிருந்தே இசையால் சூழப்பட்ட இவர், இயல்பாகவே பாடத் தொடங்கியதாகச் சொன்னார்.
கும்மி, பக்தி, நாடகப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ள இவர், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகராக நிறைய திரைப்படங்களுக்கும் பாடியுள்ளார்.
“பல்வேறு தடைகளைக் கடந்து, சினிமாவிலும் நிறைய நல்ல வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன,” என்றார் திரு மகாலிங்கம்.
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, வித்யாசாகர், தேவா, விஜய் ஆண்டனி, டி.இமான் முதலிய பல பிரபல இந்திய இசை அமைப்பாளர்களுக்கு அவர் பாடியுள்ளார்.
இசைத்துறையில் அனைவரும் இயல்பாகப் பழகி, ஒருவருக்கொருவர் உதவி செய்து, ஆலோசனை வழங்கி இசையை உருவாக்குவதால் அதனின் தரம் மேன்மேலும் உயர்கிறது என்றார் திரு மகாலிங்கம்.
தொடர்புடைய செய்திகள்
அதுமட்டுமின்றி, சொந்த ‘யூடியூப்’ பக்கத்தை வைத்திருக்கும் இவர், அதில் சொந்தப் பாடல்களை எழுதி, தயாரித்து, பாடி வெளியிட்டு வருகிறார். அம்மாவைப் பற்றிய அவரது நாட்டுப்புறப் பாடல் ஒன்று 29 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களாக தீமிதித் திருவிழாவின் இருநாள் இசைக் கச்சேரிக்குத் தயார்செய்து வந்துள்ள திரு மகாலிங்கமும் அவரின் இசைக்குழுவும் நீண்ட நேரம் கலந்துரையாடி ஏற்ற பாடல்களைத் தேர்வு செய்ததாகவும் பிரபலமான பழைய, புதிய பக்திப் பாடல்களையும் தமது சொந்தப் பக்திப் பாடல்களையும் பாடவிருப்பதாகவும் சொன்னார்.
ஏறக்குறைய 100 பாடல்கள்வரை தயார்செய்து வைத்திருப்பதாகக் கூறிய திரு மகாலிங்கம், அதில் 10 பாடல்களை இந்த நிகழ்ச்சிக்காகவே எழுதி இசையமைத்திருப்பதாகவும் அப்பாடல்களை ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கும் இவ்வாண்டின் தீமிதித் திருவிழாவிற்கும் தாம் அர்ப்பணிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
“ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்துவம் உண்டு. பழைமைவாய்ந்த சிங்கப்பூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பாடும் வாய்ப்பு கிடைத்ததற்கு இறைவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்,” என்றார் அவர்.
2000ஆம் ஆண்டிலிருந்து மேடை நிகழ்ச்சிகளில் பாடி வரும் இவர், இதுவரை 1,500க்கும் மேற்பட்ட கச்சேரிகளை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிகழ்த்தியுள்ளார். இவ்வாண்டின் மகா சிவராத்திரியின்போது சத்குருவின் ஈஷா யோகா மையத்தில் பாடுவதற்கும் திரு மகாலிங்கம் அழைக்கப்பட்டிருந்தார்.