குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து புத்தகங்களை வாசிக்கச் சிங்கப்பூர் நூலகங்களில் புதிய பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க தேசிய நூலக வாரியத்தின் ‘கம்யூனிட்டி டேக்ஓவர்’ எனும் திட்டம் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) தொடங்கி வைக்கப்பட்டது.
நூலகங்களிலிருக்கும் இடவசதியை வாசகர்களுக்குப் புதுமைமிக்க இடங்களாக மாற்றும் இலக்கோடு வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டம் இரண்டாம் முறையாக இந்த ஆண்டு நடைபெறுகிறது.
இம்முறை குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதையும் அடுத்த தலைமுறையினரின் மொழி ஆர்வத்தை வளர்ப்பதையும் இத்திட்டம் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.
தேசிய நூலக வாரியத்துடன் மூன்று உள்ளூர் அறைகலன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ஆண்டு கைகோத்துள்ளன.
‘கிளேம்ப்பிங் சொசைட்டி’, ‘ஸ்கேன்டீக்’, ‘ஃபார்ட்டிடூ’ ஆகிய மூன்று நிறுவனங்களும், உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட அறைகலன்களைப் பயன்படுத்தி, நூலகங்களுக்குச் செல்லும் வாசகர்கள் அமர்ந்து படிக்கும் வாசிப்பு இடங்களை மறுவடிவமைத்துள்ளன.
ஜூரோங் வட்டார நூலகம், பீஷான் பொது நூலகம், பொங்கோல் வட்டார நூலகம் ஆகியவற்றில் உள்ள வாசிப்பு இடங்கள் இவ்வாறு மறுவடிவமைக்கப்பட்டுள்ளன.
“பெற்றோர் குழந்தைகளுக்குக் கதை சொல்லி வளர்ப்பது காலங்காலமாக நடைமுறையிலிருக்கும் ஒரு பழக்கம். ஆனால் இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இந்தப் பழக்கம் குறைந்துவிட்டது,” என்றார் தேசிய நூலக வாரியத்தின் திட்டமிடுதல், மேம்பாட்டுப் பிரிவு மேலாளர் லாவண்யா கிருஷ்ணமூர்த்தி, 39.
தொடர்புடைய செய்திகள்
இத்திட்டம் குடும்பங்கள் ஒன்றாக வாசிக்கப் புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதன்வழி இளம் வயதில் இருந்தே புத்தகங்கள் வாசிப்பதில் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்ட முடியும் என்று அவர் சொன்னார்.
“பெற்றோர்கள் குழந்தைகளுடன் நூலகத்தில் நேரம் செலவிட்டு, புத்தகங்களைப் படிக்கும்படி ஊக்குவிக்க வேண்டும். இது அவர்களின் மொழியாற்றல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்,” என்றார் லாவண்யா.
பீஷான் பொது நூலகத்தில் வாசகர்களை மர்ம உலகிற்கு அழைத்துச்செல்லும் வாசிப்பு இடத்தை ‘கிளேம்ப்பிங் சொசைட்டி’ நிறுவனம் வடிவமைத்துள்ளது.
“குழந்தைகள் வாசிப்பதில் ஆர்வம்கொள்ள வேண்டுமானால், அதற்கேற்ற விதத்தில் அவர்களுக்கு விருப்பமான சூழலை அமைத்துத்தர வேண்டும். நூலகத்தில் புதிய இடவசதிகளைக் கண்டவுடன் அவர்கள் ஆவலுடன் இங்கு அமர்ந்து படிப்பார்கள் என்று நம்புகிறோம்,” என்றார் நிறுவனத்தின் இயக்குநர் கிறிஸ்டபெல் லீ, 32.
பீஷான் நூலகத்தில் புதிய வாசிப்பு இடம் மூன்று மாதங்களுக்கும் ஜூரோங், பொங்கோல் நூலகங்களில் ஆறு மாதங்களுக்கும் இடம்பெற்றிருக்கும். அதன் பிறகு அறைகலன்கள் அந்தந்த நிறுவனங்களிடம் திருப்பித் தரப்படும் என்று கூறப்பட்டது.

