புகழ்பெற்ற இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் இசை நிகழ்ச்சி சிங்கப்பூரில் ஜனவரி 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
சிங்கப்பூரில் முதன்முறையாக நடைபெறவிருக்கும் தேவாவின் இன்னிசை நிகழ்ச்சியை ‘8 பாய்ண்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் ‘தி ஸ்டார்’ அரங்கில் நடத்தவுள்ளது.
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்ளிட்ட ஏராளமானோரின் திரைப்படங்களுக்கு இசையமைத்து மெல்லிசை முதல் கானா பாடல்கள் வரை ரசிகர்களுக்கு வழங்கி ‘தேனிசைத் தென்றல்’ என்று பெயர் பெற்றவர் தேவா.
இவ்வாறு கோடிக்கணக்கான ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்துள்ள தேவா மற்றும் குழுவினரைச் சிங்கப்பூருக்கு அழைத்து வருவது குறித்து தமிழ் முரசிடம் பேசினார் ‘8 பாய்ண்ட் எண்டர்டெயின்மெண்ட்’ தலைவர் பெ. அருமைச் சந்திரன்.
“ஜிஆர்பி உள்ளிட்ட பல்வேறு ஆதரவாளர்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
“மறைந்த முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு பிடித்தமான ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலுக்கு இசையமைத்தவர் தேவா. அவரது நிகழ்ச்சியை நேரடியாகக் காண்பதற்குச் சிங்கப்பூர் ரசிகர்களுக்கு இது ஒரு சிறப்பான வாய்ப்பு,” என்றார் திரு அருமைச் சந்திரன்.
இந்த இசை நிகழ்ச்சியில் தேவாவுடன் சேர்ந்து பிரபல இசைக் கலைஞர்கள் ஸ்ரீகாந்த் தேவா, சபேஷ் முரளி, மனோ, அனுராதா ஶ்ரீராம், விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ பாடகர்கள் உட்பட பல இசைப் பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
‘தேவா இன்னிசை சாரல்’ எனும் இந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் தற்போது வேகமாக விற்பனையாகின்றன.
$69 முதல் $449 வரை வெவ்வேறு பிரிவுகளில் நுழைவுச்சீட்டுகள் விற்கப்படுகின்றன. bookmyshow.com.sg என்ற இணையப் பக்கத்திலும் நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
கூடுதல் சிறப்பாக, இந்த இசை நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்புப் போட்டி ஒன்றை தமிழ் முரசு நடத்துகிறது.
இப்போட்டியில் பங்கேற்று பரிசு வெல்ல இன்ஸ்டகிராம், டிக்டாக், ஃபேஸ்புக் என ஏதாவது ஒரு தளத்தில் ‘தேவா இன்னிசை சாரல்’ நிகழ்ச்சி குறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழ் முரசின் பதிவை ‘லைக்’ செய்து, நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் மூவரை ‘டேக்’ செய்து தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்.
மேலும், நீங்கள் தேர்ந்தெடுத்த சமூக ஊடகப் பக்கத்தில் இப்பதிவைப் பகிர்ந்தோ அல்லது மீண்டும் பதிவிடவோ வேண்டும். இப்போட்டி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெறும்.
இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு $99 மதிப்புள்ள நுழைவுச்சீட்டு பரிசாகக் காத்திருக்கிறது. பத்து பேருக்கு மட்டுமே இந்த அரிய வாய்ப்பு.
இதற்கிடையே, நுழைவுச்சீட்டுகள் விற்பனையிலிருந்து பெறப்படும் தொகையில் 10 விழுக்காட்டை மார்சிலிங் ஸ்ரீ சிவகிருஷ்ணா ஆலய புதுப்பிப்புப் பணிகளுக்கு வழங்கவுள்ளதாகவும் ‘8 பாய்ண்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தெரிவித்தது.

