முனைவர் ந. செல்லக்கிருஷ்ணன் எழுதிய ‘கம்பனும் வைணவமும்’ எனும் நூலின் அறிமுக நிகழ்ச்சி கடந்த மே மாதம் 25ஆம் தேதியன்று உமறுப்புலவர் அரங்கில் நடைபெற்றது.
தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் ஏற்று நடத்திய இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய முதுபெரும் பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன், “இலக்கிய ஆய்வு நூலாகவும் இலக்கிய உத்திகளை ஆராயும் நூலாகவும் தத்துவக் கருத்துகளை இனம் கண்டு ஆராயும் நூலாகவும் அமைந்துள்ளது இந்நூலின் தனிச்சிறப்பு,” எனக் குறிப்பிட்டார்.
நூலாய்வுச் சிறப்புரை வழங்கிய பாரதி கிருஷ்ணகுமார், “கம்பன் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டா அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டா’ என்னும் விவாதம் தமிழ் ஆய்வுலகில் நீண்ட நெடுங்காலம் நடைபெற்று வந்துள்ளது. இந்நூலாசிரியர் ஆய்வு அடிப்படையில், கம்பன் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டே என்று தெளிவாகக் கூறும் கருத்துகளின் அடிப்படையில், கம்பன் காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டே என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்,” என்றார்.
இந்நூலைப் படைப்பது தமது வாழ்க்கை லட்சியம் என்றார் நூலாசிரியர் முனைவர் செல்லக்கிருஷ்ணன். கம்பன் காலத்தையும் அவன் சமயத்தையும் காய்தல் உவத்தல் இல்லாமல், உண்மையான ஆய்வுநிலையில் நின்று ஆராய்ந்து, தமிழ் இலக்கியவாதிகளுக்கு வரலாற்று உணர்வு இல்லை என்னும் பெருங்குறையைப் போக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.
இந்த நூல் சிங்கப்பூரில் மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசு வென்றதையும், சிறந்த நூலுக்கான பரிசைத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையிடம் பெற்றதையும் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன் தமது உரையின்போது குறிப்பிட்டார்.
முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன், கவிமாலைக் காப்பாளர் மா. அன்பழகன் ஆகியோர் நூலையும் நூலாசிரியரையும் வாழ்த்திப் பேசினர்.