நாள் ஒன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவோருக்கு உடல், மன நலம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
உணவு, தண்ணீர் மனிதனுக்கு எந்தளவு அவசியமோ அதேபோலத்தான் தூக்கமும். ஆனால் பலரும் இன்றைய பரபரப்பான சூழலில் தூக்கம் வருவதில்லை என்று கூறி குறைவான நேரத்திற்கே அயர்ந்து கண்களை மூடுகின்றனர்.
தூக்கம் வராததால் பலரின் கைகள் பெரும்பாலும் தேடுவது கைப்பேசிகளைத்தான். ஆனால், அதே கைப்பேசிதான் அவர்களின் தூக்கமின்மைக்குக் காரணம் என்பதைச் சிலர் மட்டும் அறிந்திருக்கின்றனர்.
குறைந்த நேரத்துக்குத் தூங்கினாலும் ஒருசிலர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். ஆனால் வேறு சிலருக்குச் சரியான தூக்கம் தேவை. இல்லாவிட்டால் சோர்வும் களைப்பும் நாள் முழுக்க நீடிக்கும்.
எது எப்படியாயினும் நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 மணி நேரத் தூக்கம் அத்தியாவசியம்.
ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது இதய நோய், இரண்டாம் வகை நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள், ரத்த அழுத்தம், உடற்பருமன் போன்ற சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
தூக்கமின்மையால் கவனம் செலுத்துவதில் சிரமம், நினைவாற்றல் பிரச்சினைகள், தவறான முடிவுகளை எடுப்பது, மூளை செயல்திறன் குறைவது ஆகியவை ஏற்படலாம்.
தூக்கமின்மையால் மந்தம், ஒருவித எரிச்சல் ஏற்படும். இதனால் மனரீதியாகவும் ஒருவர் பாதிக்கப்படலாம். மன அழுத்தம், பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.