சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக மறைந்துபோன, தனித்துவமிக்க பானம் ஒன்றின் விற்பனையை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கி வெற்றியும் கண்டுவருகிறார் இளையர் ஒருவர்.
தென்னிந்தியாவில் குறிப்பாகக் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கக்கூடிய பானம் கள். சிங்கப்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளாக அதை விற்பனை செய்கிறார் ஷரவீன், 32.
‘ஹைட்ரேட் எஸ்ஜி’ (Highdrate SG) என்ற பெயரில் சிங்கப்பூரின் கடுமையான தரநிலைகளுக்கு உட்பட்ட, தூய்மையான, கலப்படமில்லாத, உயர் ரகக் கள்ளை ஷரவீன் விநியோகம் செய்கிறார்.
தமிழர் மரபுடைமையுடன் தொடர்புடைய கள்ளைத் தென்கிழக்காசிய நாடுகள், குறிப்பாக மலேசியாவிலிருந்து ஷரவீன் சிங்கப்பூருக்குக் கொண்டுவருகிறார்.
கள்ளை மீண்டும் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தும் யோசனைக்கு ஷரவீன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் வித்திட்டன.
ஷரவீன், தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் விளையாட்டு மேலாண்மையில் சான்றிதழ் பெற்றார்.
பின்னர் வெளிப்புற வீரதீர விளையாட்டுத் துறையில் சில காலம் பணியாற்றிய அவர், முதலாளி தன்னிடம் மரியாதைக் குறைவாகப் பேசியதன் காரணமாக இனி யாரிடமும் வேலை செய்யக்கூடாது என்று முடிவெடுத்தார்.
கொவிட்-19 நோய்ப்பரவல் காலகட்டத்தில் சொந்தத் தொழிலில் ஈடுபட ஷரவீனுக்கு வாய்ப்புக் கிடைத்தது. பெரியம்மாவுடன் இணைந்து சட்டிச் சோறு விற்கத் தொடங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
சொந்தத் தொழிலில் கிடைத்த மூவாண்டு அனுபவத்துக்குப் பிறகு கள் விற்பனை குறித்த யோசனை அவருக்கு வந்தது.
“சட்டிச் சோற்றின் காரத்தைத் தணிக்கக் கள் அருந்துவர் என்று தெரியவந்தது,” என்ற ஷரவீன், சிங்கப்பூரில் கள் விற்பனை பற்றி ஆராயத் தொடங்கினார்.
சிங்கப்பூர் உணவு அமைப்பு, காவல்துறை, சுங்கத் துறை ஆகியவற்றிடம் கள் விற்பனை பற்றிப் பேசினார்.
அதேநேரம் சிங்கப்பூருக்கு யாரும் கள் இறக்குமதி செய்யவில்லை என்பதையும் ஷரவீன் அறிந்துகொண்டார்.
தொடங்கியது கள் விற்பனை
2022ஆம் ஆண்டு உபியில் உள்ள ஒரு கிடங்கிலிருந்து கள் விற்பனையைத் தொடங்கினார் ஷரவீன். மலேசியாவிலிருந்து முதலில் 200 போத்தல்கள் கள்ளை அவர் இறக்குமதி செய்தார்.
வாடிக்கையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு போத்தல் கள்ளைத் தொடக்கத்தில் $35க்கு விற்றார்.
தொடக்கத்தில் மந்தமாக இருந்த வர்த்தகம் நாளடைவில் இந்தியர்கள் மட்டுமின்றி சீனர்கள் மத்தியிலும் சூடுபிடித்தது.
விற்பனையைப் பெருக்க ஒரு போத்தல் $19 என்ற விலையில் கள்ளை ஷரவீன் விற்றார். ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 4,000 போத்தல்கள் இறக்குமதியாயின.
உடலைக் குளிர்விக்கும் தன்மை கள்ளுக்கு இருப்பதால் வெப்பமான காலங்களில் ஷர்வீனின் கள் வியாபாரம் மேலும் சூடுபிடித்தது.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வரை
மலேசியாவில் பொருத்தமான தோட்டத்தைப் பல நாள்கள் தேடிக் கண்டுபிடித்தார் ஷரவீன்.
நண்பரின் உதவியுடன் மலாக்காவில் உள்ள தென்னை, பனை மரத் தோட்டங்களிலிருந்து சிங்கப்பூருக்கு நேரடியாகக் கள்ளைக் கொண்டுவருகிறார் அவர்.
“கள்ளில் அந்திக் கள், காலைக் கள் என இரு வகை உண்டு. அந்திக் கள் கூடுதலான நேரம் நொதிக்கப்படுவதால் அதில் அதிக அளவு மது இருக்கும். காலைக் கள் சற்று இனிப்பாக இருக்கும்,” என்றார் ஷரவீன்.
“சிங்கப்பூரில் தமிழர்களுடன் கள்ளுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. வலுவான மரபு உள்ளது,” என்று சொன்ன ஷரவீன், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதைப்போலக் கள்ளை அளவோடு அருந்துவது நல்லது என்றார்.
“திடகாத்திரமாக இருக்கும் பனை மரத்திலிருந்து ஆறு ஆண்டுகள் வரையிலும்கூட கள் எடுக்கலாம். சிங்கப்பூரர்கள் பலர் இங்கு வந்து கள் குடிப்பதை நான் பார்த்திருக்கிறேன்,” என்றார் கள் இறக்கும் தோட்டத்தில் பணிபுரியும் குமார், 55.
சிங்கப்பூரில் மறைந்த, மறக்கப்பட்ட கள்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது 19ஆம் நூற்றாண்டில் சிங்கப்பூரில் முதல் முறையாகக் கள் அறிமுகம் செய்யப்பட்டது.
வேலை முடிந்து தொழிலாளர்கள் கள் அருந்துவது அப்போது வழக்கம். அப்போது அது மலிவான விலையில் எளிதில் வாங்கக்கூடிய பானமாகவும் இருந்தது.
அதோடு சிங்கப்பூரின் வெப்பநிலை பனை மரங்கள் வளர உகந்த சூழலைத் தந்தது.
1900களின் முற்பகுதியில் ஜூரோங், லிட்டில் இந்தியா, சிராங்கூன் ஆகிய வட்டாரங்களில் கள்ளுக்கடைகளும் செயல்பட்டன. அப்போதெல்லாம் கள்ளை வாங்கி வீட்டுக்குக் கொண்டு செல்வது சட்டபடி குற்றமாகக் கருதப்பட்டது.
காலப்போக்கில் கள் விற்பனை சிங்கப்பூரின் சூழலுக்கு ஏற்பச் சிறிது சிறிதாக நலிவடைந்தது.
சிங்கப்பூரை நகர்ப்புற இடமாக மாற்ற முற்பட்ட அப்போதைய அரசாங்கம், கள்ளுக் கடைகளுக்கு உகந்த இடங்களை அமைப்பதில் சிரமத்தை எதிர்கொண்டது.
அதோடு காலனித்துவக் காலங்களிலிருந்தே கள்ளத்தனமான, கலப்படமான கள் விற்பனை அரசாங்கத்துக்குப் பெரிய தொல்லையாக இருந்தது.
கடந்த காலக் குற்றச்செயல்களுடன் கள் தொடர்புபடுத்தப்பட்டதால், அதைக் குடிப்பவர்கள் மோசமாக நடந்துகொள்வர் என்ற கண்ணோட்டமும் இருந்தது.
அதோடு, சிங்கப்பூரில் கடைசியாகக் கள் விற்பனை செய்த நபருக்கும் மரத்திலிருந்து கள் இறக்கும் ஊழியர்களுக்கும் இடையே சம்பள உயர்வு தொடர்பில் பிரச்சினை மூண்டது.
இப்படிப் பல காரணங்களால் 1979ஆம் ஆண்டு சிங்கப்பூரில் கள் தயாரித்து விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் தற்போது கள் குடிப்பது சட்டவிரோதமன்று. கள்ளைச் சிங்கப்பூரில் தயாரிக்க முடியாது. ஆனால் உரிய அனுமதியுடன் விற்பனை செய்யலாம்.

