சைவ சமயத்தின் புனிதர்களாகப் போற்றப்படும் நாயன்மாருள் ஒருவரான பெண்பாற் புலவர் காரைக்கால் அம்மையாரின் பாடல்களை உள்ளடக்கிய நூல் வெளியிடப்பட்டுள்ளது.
முனைவர் மீனாட்சி சபாபதி தொகுத்து எழுதிய இந்நூல், மலேசியாவின் கிள்ளானிலுள்ள தெலுக் புலாய் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் இம்மாதம் 8ஆம் தேதியன்று வெளியீடு கண்டது.
சில ஆண்டுகளுக்கு முன், ‘பெண்பாற் புலவர்கள்’ என்ற தேசிய நூலக வாரிய நிகழ்ச்சியில் காரைக்கால் அம்மையார் உரைக்குக் கிடைத்த வரவேற்பு, இந்நூலை எழுத ஒரு காரணம் என்றார் முனைவர் மீனாட்சி.
பங்குனி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று காரைக்கால் அம்மையாருக்கு நடத்தப்படும் குருபூசையில் சிவபக்தர்கள் அவரது பதிகங்களைப் பாடுவதற்கான ஏடு ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்ற மற்றொரு நோக்கத்தையும் அவர் குறிப்பிட்டார்.
“திருவாசகத்தில் கூறப்படுவது போல், சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து நாம் சொல்லவேண்டும். இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ள சேக்கிழார் பெருமானின் காரைக்கால் அம்மையார் புராணத்தில், ஒவ்வொரு நான்கு வரிப் பாடலுக்கும் ஒரு வரியில் பொருள் சுருக்கத்தை எழுதியுள்ளேன்,” என்றார் அவர்.
காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் உள்ள கருத்துகள், உண்மைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் தொகுத்துத் தந்துள்ளார்.
மாணவர்கள் கலந்துரையாடுவதற்கு ஏற்ற தலைப்புகளையும் இந்நூலில் சேர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 20 ஆண்டுகளுக்குமேல் வானொலித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றிய முனைவர் மீனாட்சிக்கு 15 ஆண்டுகளுக்குமேல் கல்வியாளராகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு.
சிவபக்தி, சிவதத்துவம், யோகம் போன்ற ஆன்மிகத் தலைப்புகளுடன் பெண்ணின் சிறப்பு, நல்லறமாகிய இல்லறம், உலக வாழ்க்கையின் நிலையாமை, துன்பத்திலும் தடுமாறாது இருத்தல் உள்ளிட்ட அறநெறிக் குறிப்புகளையும் இந்நூலில் காணலாம்.
நூலின் சிங்கப்பூர் வெளியீடு, டெப்போ சாலை ஸ்ரீருத்ர காளியம்மன் ஆலயத்தில் 2025ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும்.
இசையையும் தமிழையும் வளர்த்த புனிதவதியாரின் பணி
பத்துப் பாடல்கள் அடங்கியுள்ள பதிகம் என்ற செய்யுள் வடிவத்தைக் கையாண்ட முன்னோடியாகப் புனிதவதியார் என்றும் அழைக்கப்படும் காரைக்கால் அம்மையார் திகழ்ந்ததாக மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஏழு ஸ்வரங்களுக்கான தமிழ்ப் பெயர்களில் துத்தம் (ரி எனப்படும் ரிஷபம்), கைக்கிளை (க எனப்படும் காந்தாரம்), உழை (ம எனப்படும் மத்யதம்), இளி (ப எனப்படும் பஞ்சமம்), விளரி (த எனப்படும் தைவதம்), தாரம் (நி எனப்படும் நிஷாதம்) ஆகிய சொற்கள், அம்மையாரின் மூத்த திருப்பதிகத்தில் இடம்பெறுகின்றன.
முற்கால நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படும் காரைக்கால் அம்மையாரின் காலத்தின்போது இசையின் நிலை மேம்பட்டிருந்ததையும் அவரது பாடல்களில் காண முடிகிறது.
அந்தாதி வடிவில் பாடல்களை முதன்முதலில் எழுதியவர் காரைக்கால் அம்மையார் என்று கூறப்படுகிறது. அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூலாகப் போற்றப்படும் அவரது அற்புதத் திருவந்தாதியான நூல் ‘ஆதி அந்தாதி’ என்று அழைக்கப்படுகிறது.
அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் எனப் பொருள்படும் ஆதி ஆகிய இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது. ஒரு பாடலின் முடிவில் உள்ள எழுத்து, அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும்.
இந்நூல், சைவ சமயம் சார்ந்த நூலாக இருந்தபோதும் அதைப் பிற சமயங்களைச் சேர்ந்த தமிழர்களும் படிக்க ஆசைப்படுவதாக மீனாட்சி சபாபதி கூறினார்.
“பண்டைக் காலத்துத் தமிழரின் வாழ்வியல் சிந்தனைகள், கல்வி முறை, வர்த்தக முயற்சிகள், பிள்ளை வளர்ப்பு முறை போன்றவை குறித்த விவரங்களை இந்நூலில் தெரிந்துகொள்ளலாம். பண்டைய தமிழர்கள் பற்றிய அறியாமையும் தவறான மனப்போக்குகளும் இதன் மூலம் களையப்படும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
நூல் வெளியீடு குறித்த மேல்விவரங்களுக்கு 9856 4603 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். முன்பதிவுக்கு https://forms.gle/DgrsXmm7eg6bVGob6 என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.