நல்லு தினகரனுக்குக் கவியரசு கண்ணதாசன் விருது

2 mins read
e5c953ad-5c13-403a-9dcd-561c6abf3735
(இடமிருந்து) எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன், சிறப்பு விருந்தினர் இரா. தினகரன், கவியரசு கண்ணதாசன் விருதுபெற்ற நல்லு தினகரன், அவரது தந்தை நல்லுராஜ், சிறப்புப் பேச்சாளர் முனைவர் உலகநாயகி பழநி, கழகச் செயலாளர் பிரேமா மகாலிங்கம். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் வழங்கிவரும் கவியரசு கண்ணதாசன் விருது இவ்வாண்டு எழுத்தாளர், நாடகாசிரியர், பாடலாசிரியர், இயக்குநர், நடிகர் எனப் பன்முகத் திறன்கொண்ட நல்லு தினகரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அவர் தெம்பனிஸ் உயர்நிலைப் பள்ளியில் நற்குணமும் குடியியல் கல்வியும் (Character and Citizenship Education) என்ற பாடத்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.

நவம்பர் 24ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரும் கழகத்தின் மதியுரைஞருமான இரா. தினகரன் அவ்விருதை வழங்கினார்.

கவியரசு கண்ணதாசன் மிகச் சிறந்த கவிஞர் மட்டுமன்றி சிறுகதை, நாவல், கட்டுரை, திரைப்படப் பாடல்கள், நாடகம் என அனைத்துத் துறைகளிலும் சிறப்புடன் திகழ்ந்தவர் என்று திரு தினகரன் புகழாரம் சூட்டினார்.

தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் வளர்ச்சிக் கழக இயக்குநர் பேராசிரியை, முனைவர் உலகநாயகி பழநி, ‘கவியரசரின் கவிதைகளில் வாழ்வியல் சிந்தனைகள்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.

எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் அமரர் சுப. அருணாசலம் நினைவாக நடத்தப்பட்ட, சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டியில் திரு. மா. அன்பழகன் முதல் பரிசு பெற்றார்.

சிங்கப்பூரில் சுற்றுப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இடங்கள் பற்றிப் பாடல் எழுத வேண்டும் என்ற சூழல் போட்டியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

முதல் பரிசு பெற்ற பாடல் இசையமைக்கப்பட்டு, விழாவில் ஒலியேற்றப்பட்டது. அதில் வரிகளுக்கேற்ப காட்சிகளைக் கழகத்தின் உதவித் தலைவர் அன்புச்செல்வன் சேர்த்திருந்தார்.

கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டியில், 14 வயதிற்குக் கீழானவர்களுக்கான பிரிவில் ‘இராகங்கள் பதினாறும்’ என்ற பாடலைப் பாடி ஆறுமுகம் சேதுமாதவன் முதல் பரிசை வென்றார்.

14 வயதிற்கு மேலானவர்களுக்கான பிரிவில் லஷ்மி ரவி ஐயர், ‘மலர்கள் நனைந்தன பனியாலே’ எனும் பாடலைப் பாடி முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.

இறுதிச் சுற்றில் முனைவர் மன்னை க. இராஜகோபாலன், இசையமைப்பாளர் பரசு கல்யாண், திருவாட்டிகள் சுவப்னாஸ்ரீ ஆனந்த், சுந்தரி சாத்தப்பன், தேனம்மை ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டு, பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்தனர்.

முன்னதாக, சக்தி நுண்கலைப்பள்ளி மாணவிகள் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் கவியரசர் எழுதிய ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ எனும் பாடலுக்கு நடனமாடினர்.

கழகச் செயலாளர் பிரேமா மகாலிங்கம் வரவேற்புரை ஆற்ற, தலைவர் நா. ஆண்டியப்பன் தலைமையுரை ஆற்றினார். துணைச் செயலாளர் கோ. இளங்கோவன் நன்றி தெரிவித்தார்.

செயலவை உறுப்பினர் சையது அஷ்ரத்துல்லாவும் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மோகன் ஹரிவர்தினியும் நிகழ்ச்சி நெறியாளர்களாகப் பணியாற்றினர்.

குறிப்புச் சொற்கள்