தமிழார்வமும் சமூக நோக்கும் ஒருசேரக் கொண்டு, தமிழ்மொழி ஊடகத் துறையில் பத்து ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் தமிழ் முரசு செய்தியாளர் ஜனார்த்தனன் கிருஷ்ணசாமிக்கு இந்த ஆண்டிற்கான கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது.
சனிக்கிழமை (நவம்பர் 15) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 27வது ‘கவியரசு கண்ணதாசன் விழா’வில் அவருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. விருதை சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பாக அவரிடம் வழங்கினார் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்.
தமிழ்மொழியிலும் திரையுலகிலும் தனித்தன்மையுடன் கோலோச்சியவர் கவியரசு கண்ணதாசன். அவர் தம் எளிமையாலும் வாய்மையாலும் பல மனங்களில் குடிகொண்டிருப்பவர்.
கவியரசுக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றளவும் யாரும் இல்லாவிட்டாலும், தம் சொந்த பாணியில் தமிழ் மூலம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்திவரும் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்குக் கவியரசு கண்ணதாசன் விருது வழங்கப்படுகிறது.
2012 முதல் ஆண்டுதோறும் இவ்விருதைச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், கவியரசு கண்ணதாசன் விழாவில் வழங்கிவருகிறது. 2024 முதல் இவ்விருதுக்கு சிங்கப்பூர் தமிழர் இயக்கம் ஆதரவாளராக இருந்துவந்துள்ளது.
“சமய நல்லிணக்கம், கலை வளர்ச்சி, தன்முனைப்பு, நாட்டு நடப்பு, பொருளியல், நீதிமன்ற விசாரணை, தொழில்நுட்பம் உள்ளிட்ட தலைப்புகளில் எழுதி அரிய கருத்துகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் சீரிய பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார் ஜனார்த்தனன்,” என அறிமுக உரையில் குறிப்பிட்டார் கழகச் செயலாளர் பிரேமா மகாலிங்கம்.
இருமொழித் திறன்படைத்த ஊடகவியலாளராக ஜனார்த்தனன் எழுதியுள்ள செய்திகள் மூலம் உதவி தேவைப்படுவோருக்கு மனநல உதவி கிட்டியது, உடற்குறையுள்ளோருக்கு வேலை கிடைத்தது, வீடு தீப்பற்றியதால் தவித்தவருக்கு நன்கொடைகள் குவிந்தன.
எஸ்-பாஸ் கட்டுப்பாடுகளால் இந்தியச் சமையற்கலை நிபுணர்களின் பற்றாக்குறை, தன் பெற்றோரால் துன்புறுத்தப்பட்ட சிறுவன் போன்ற எண்ணற்ற சமூகப் பிரச்சினைகளுக்கு அவர் குரல்கொடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 காலகட்டத்தில், தங்குமிடங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் சந்திக்கும் சவால்களைத் தன் எழுத்து மூலம் வெளியுலகுக்கு உணர்த்தியதோடு அவர்களுக்கெனப் பல மொழிபெயர்ப்பு, உரைபெயர்ப்பு உதவிகளைச் செய்துவந்தார் ஜனார்த்தனன்.
அவர் தன் ஊடகப் பயணத்தை மீடியாகார்ப் தமிழ்ச் செய்தியில் தொடங்கினார். அங்குப் பணிக்குச் சேர்ந்த மறுவாரம் அதன் இணையத்தளம் செயல்படத் தொடங்கியதில் அவரது பங்கும் இருந்தது. மூவர் கொண்ட அணியில் அவரது பங்கு அளப்பரியதாக இருந்தது.
அதன்பின் தமிழ் முரசில் பணிக்குச் சேர்ந்த ஜனார்த்தனன், பலரது வாழ்க்கைக் கதைகளை வாசகர்களின் உள்ளம் தொடும் வண்ணம் எழுத்துவடிவில் வழங்கினார்.
அத்தகைய அவரது படைப்பான ‘பிறப்பால் சீனர்கள், உணர்வால் தமிழர்கள்’ எனும் கட்டுரை தமிழ் முரசின் 2024க்கான சிறந்த மின்னிலக்கப் படைப்பாக எஸ்பிஎச் மீடியா ஆங்கில, மலாய், தமிழ்மொழிப் பிரிவு விருதுகளில் தேர்வுசெய்யப்பட்டது. 2023ல் வெளியான ‘அறிவொளி ஏற்றும் ஆசிரியர் பணி’ எனும் கட்டுரைக்காகவும் அவர் பரிசு பெற்றுள்ளார்.
தமிழ் முரசு அண்மையில் தொடங்கிய முரசுக்களம் வாயிலாகவும் ஜனார்த்தனன் வலிமையான சமூகக் கருத்துகளை எடுத்துரைக்கிறார்.
பணியிடத்தோடு நின்றுவிடவில்லை அவரின் தமிழ்ப் பணி. இவ்வாண்டு வெளியான சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்துக்கும் அவர் பங்களித்தார்.
ஹேஷ்பீஸ் (Hash peace), தர்மா டைலாக்ஸ் (Dharma Dialogues) உள்ளிட்ட அமைப்புகளுடன் பணியாற்றிச் சமய நல்லிணக்கத்தைப் பேணுகிறார். ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரியிலும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்திலும் (எஸ்எம்யு) தமிழ் அமைப்புகளில் செயற்குழு உறுப்பினராகவும் துணைத்தலைவராகவும் செயலாற்றியுள்ளார்.
செய்தி எழுதும் பணிக்காக இவ்விருதைப் பெற்றது தமக்குப் பெரிதும் ஊக்கம் தருவதாக ஜனார்த்தனன் கூறினார்.
“புதிய தகவல்களைப் பழம்பெரும் மொழியில் ஆவணப்படுத்துவது என்னைப் பொறுத்தவரையில் தித்திப்பான, மனத்திற்கு நிறைவூட்டும் பணி.
“நாடளாவிய, உலக அளவிலான முக்கிய நிகழ்ச்சிகளைத் தமிழில் வாசகர்களுக்கு வடித்துத் தருவது தமிழை வாழும் மொழியாக நிலைபெறச் செய்யும் பணியாகும்,” என்றார் அவர்.
இளையர்கள் பலரும் தமிழ்ச் செய்தியாளர்களாகி நமது சமூகத்தின் குரலைப் புதுப்பிக்க வேண்டும் என விரும்புவதாகவும் ஜனார்த்தனன் குறிப்பிட்டார்.
“அச்சு, மின்னிலக்க, சமூக ஊடகத் தளங்களில் வாசகருக்கேற்ற வகையில் செய்திகளைப் படைப்பதில் திறம்படச் செயல்படுபவர் திரு ஜனார்த்தனன். தமிழ்மொழி மீது தீராப் பற்றுடன் மொழியாற்றலை மேம்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்படும் அவருக்குக் கண்ணதாசன் விருது வழங்கப்பட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. அவரது தமிழ்த் தொண்டு தமிழ் ஊடகத் துறையில் பல்லாண்டு காலம் பிரதிபலித்து வருங்காலத் தலைமுறைக்குப் பங்காற்ற இந்த விருது மேலும் ஊக்கத்தைத் தரும் என்று நம்புகிறேன்,” என்றார் தமிழ் முரசின் செய்தி ஆசிரியர் இர்ஷாத் முஹம்மது.
“அன்றாடம் எழுத்தாளராய் இயங்கும் செய்தியாளர்களை அங்கீகரிக்கும் விருது இது. செய்தித்துறையில் பல ஆண்டுகள் கடுமையாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஜனார்த்தனனுக்கு இவ்விருது அளிக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் தமிழ் முரசு ஆசிரியர் த.ராஜசேகர்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கிய முதல் கண்ணதாசன் விருது 2012ல் உள்ளூர் இசையமைப்பாளர் ஷபிர் சுல்தானுக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விருதுபெற்றவர்களின் பட்டியலை https://www.singaporetamilwriters.com/30 இணையத்தளத்தில் காணலாம்.
சென்ற ஆண்டு எழுத்தாளர், நாடகாசிரியர், பாடலாசிரியர், இயக்குநர், நடிகர் எனப் பன்முகத் திறன்கொண்ட நல்லு தினகரனுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

