தமிழ்மறையான திருக்குறளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில், தேசிய தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 4 மணிக்கு சுவா சூ காங் நூலகத்தில் ‘குறளோடு விளையாடு’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
‘Kural4all’ அமைப்பு நடத்திய இந்நிகழ்ச்சியில், 60க்கும் மேற்பட்டோர் சிவப்பு, வெள்ளை நிற ஆடைகளில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் திருக்குறளின் ஆற்றலை மனப்பாடம், கதைக்களம், கலைப்பாடுகள் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தினர்.
மாணவர்களில் சிலர் திருக்குறள் மூலமாக சமூக ஒழுக்கம், குடும்ப ஒழுக்கம், தன்னொழுக்கம் பற்றிய தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.
அனைத்துலகப் பள்ளி ஆசிரியரான திருவாட்டி அனுராதா, வள்ளுவரின் கருத்துகளை சிந்தனையோடு எதிர்வினையாற்றி, மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தினார்.
திரு பிரம்மக்குமார் தலைமையில், மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் திருக்குறளின் அறிவின் ஆழத்தைப் பரிசோதிக்கும் வினாடி வினா போட்டி நடைபெற்றது.
சிறுவர்களையும் பெரியவர்களையும் ஒருங்கிணைத்த ஒரு சுவாரசியமான அம்சமாக அமைந்தது, திருவாட்டி லதாவின் வழிகாட்டுதலில் இடம்பெற்ற குறள் இசை நாற்காலி விளையாட்டு.
சிங்கப்பூரில் தமிழ் மொழியின் மரபையும், திருக்குறளின் சிறப்பையும் கற்றுக் கொடுப்பதற்கான சிறந்த மேடையாக ‘குறளோடு விளையாடு’ நிகழ்வு விளங்கியது.

