சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் நான்கு முக்கிய விழாக்களில் ஒன்றான கவியரசு கண்ணதாசன் விழாவைச் சனிக்கிழமை (நவம்பர் 15) மாலை 5.00 மணியளவில் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கார்த்திகேயன் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
இளையர் பிரிவின் பேச்சாளர் குமாரி சுபாஷினி கலைக்கண்ணன் “தமிழின்றி வேறில்லை” என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றவிருக்கிறார்.
பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராகத் திகழ்ந்த கவியரசு கண்ணதாசன் இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்தவர்.
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை,” என்று அறுதியிட்டுக் கூறிய கவியரசு சாகா வரம்பெற்றவர். அவரது படைப்புகள் மூலம் குறிப்பாகத் திரைப்பாடல்கள், கவிதைகள் மூலமாக அவர் இன்னும் தமிழ் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அத்தகைய மாபெரும் கவிஞரை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கவியரசு கண்ணதாசன் விழாவை சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தி வருகிறது.
கண்ணதாசன் விழாவை ஒட்டி இவ்வாண்டும் 40 வயதிற்கு உட்பட்ட ஒருவருக்குக் கண்ணதாசன் விருது வழங்கப்படுகிறது.
எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் அமரர் சுப. அருணாசலம் நினைவாக நடத்தப்பட்ட சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டியின் முடிவுகள் கண்ணதாசன் விழாவில் அறிவிக்கப்படுவதுடன் முதல் பரிசு பெற்ற பாடல் இசையமைக்கப்பட்டு ஒலியேற்றப்படும்.
கவியரசு கண்ணதாசன் விழாவை ஒட்டி இவ்வாண்டும் கண்ணதாசன் பாட்டுத் திறன்போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இரு பிரிவுகளுக்குமான இறுதிச் சுற்று விழா மேடையில் நடைபெறும். அத்துடன் கண்கவர் நடனம், கண்ணதாசன் புதிர்ப் போட்டி, கவிதாஞ்சலி ஆகியவையும் உண்டு.

