‘உலகின் கிட்டப்பார்வைத் தலைநகரம்’ என்ற மற்றொரு பெயரை சிங்கப்பூர் பெற்றுள்ளது என்பதை நம்மில் பலர் அறியாமல் இருக்கலாம்.
‘மையோபியா’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கிட்டப்பார்வைக் குறைபாடு என்பது கண் வில்லையின் புறவளைவுப் பகுதி அதிகரிப்பதினாலும் கண்கோளம் நீட்சியுறுவதாலும் ஏற்படும் ஒருவகை கண் நோய்.
சிங்கப்பூர் தேசிய கண் நிலையத் தரவுகளின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட சிங்கப்பூர்க் குழந்தைகளில் 10 விழுக்காட்டினர் கிட்டப்பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 12 வயதில் 60 விழுக்காடாகவும், 18 வயதில் 80 விழுக்காடாகவும் உயர்கிறது.
கூடுதல் திரை நேரம், போதுமான அளவிற்கு வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது, மரபணுக் காரணிகள் போன்றவற்றால் குறிப்பாக குழந்தைகளிடையே இந்தக் கவலைதரும் போக்கு அதிகரித்து வருவதாகச் சிங்கப்பூர் தேசிய கண் நிலையத்தின் கண் மருத்துவரான டாக்டர் சுதர்சன் சேஷாசாய் கூறினார்.
“பார்வைத் திறன் வேகமாகக் குறைவதுடன், விழித்திரை பிரிதல், ‘கிளாகோமா’ எனும் கண் அழுத்த நோய், கண்புரை போன்ற பார்வைப் பிரச்சினைகளுக்கு குழந்தைகள் ஆளாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது,” என்றார் அவர்.
கண்ணின் ஒளிவிலகல் பிழைகளைச் சரிசெய்வது கண் பார்வை வலுவாக இருப்பதை உறுதிசெய்வதோடு, ‘மங்கல் பார்வை’ என்று அழைக்கப்படும் அம்ப்லியோபியா கண் நோய் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதற்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சை பெறாவிட்டால், மீளமுடியாத பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதைத் தடுப்பதற்கு, தொடக்கத்திலேயே கண்டறிவதும், தொடர் பரிசோதனையும், சிகிச்சையும், கண் பராமரிப்புப் பழக்கங்களை பின்பற்றுவதும் அவசியம் என்று டாக்டர் சேஷாசாய் கூறினார்.
கண்ணாடிகளுக்கு அப்பாற்பட்டு, அட்ரோபின் கண் சொட்டு மருந்து, ஆர்த்தோ-கே ஆடிகள் (லென்ஸ்), கிட்டப்பார்வைக் குறைபாட்டைக் கட்டுப்படுத்த தயாரிக்கப்பட்ட மூக்குக் கண்ணாடிகள் போன்ற மேம்பட்ட சிகிச்சை முறைகளையும் கருத்தில் கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
‘கார்னியா’ எனப்படும் விழி வெண்படலத்தை மறுவடிவமைப்பதன் மூலம், புற விலகலை உருவாக்குவதன் மூலம் அல்லது விழித்திரை சமிக்ஞைகளைத் தடுப்பதன் மூலம் கண் வளர்ச்சியை மேல்குறித்த சிகிச்சை முறைகள் மெதுவாக்குகின்றன என்று டாக்டர் சேஷாசாய் கூறினார்.
அதே சமயத்தில், அண்மையில் சீனா முழுவதும் பிரபலமடைந்துள்ள குறைந்த அளவிலான செவ்வொளிச் சிகிச்சை (Low level red light) போன்ற மற்ற கண் சிகிச்சை முறைகளின் பாதுகாப்பு, திறன் குறித்து மேலும் ஆய்வு தேவைப்படுகிறது, என்றும் அவர் சொன்னார்.
கிட்டப்பார்வைக் குறைபாடு குறித்து நிலவும் பல்வேறு தவறான கருத்துகளை தெளிவுபடுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார் சிங்கப்பூர் தேசிய கண் நிலையத்தின் பார்வைப் பரிசோதகர் முகமது ஃபாருக்.
“கண்ணாடி அணிவது கிட்டப்பார்வைக் குறைபாட்டை மேலும் மோசமாக்கும் என்று சில பெற்றோர்கள் நம்புகிறார்கள். ஆனால், அது உண்மையன்று.
“கண்ணாடிகள் குழந்தைகளின் பார்வையைத் தெளிவாக்கி, பள்ளியில் அவர்களின் செயல்திறனையும் கற்றலையும் மேம்படுத்துகின்றன. இருப்பினும், ஆபத்துக் காரணிகளை அடையாளம் கண்டு அவற்றைச் சரிசெய்யாவிட்டால், கண்ணாடி அணிந்தாலும் கிட்டப்பார்வைக் குறைபாடு மேலும் மோசமடையலாம்,” என்றார் அவர்.
சிறுவயது முதலே குழந்தைகளுக்கு நலவாழ்வுப் பழக்கவழக்கங்களை விதைப்பதன்மூலம் கிட்டப்பார்வைக் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம் என்று திரு ஃபாருக் சொன்னார்.
மின்னணுச் சாதனங்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன்மூலம் குழந்தைகளின் திரை நேரத்தைக் குறைக்கலாம்.
குழந்தைப் பருவத்தில் உடல்மீது சூரிய ஒளி படும்படி குறைந்தது 1 முதல் 2 மணி நேரம் செலவிட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். அப்பழக்கத்தை ஊக்குவிக்க பெற்றோரும் குழந்தைகளுடன் இணைந்து அவர்களுக்கு பிடித்த வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் அவர் அறிவுரை கூறினார்.
கண்களில் அழுத்தம் ஏற்படுவதைக் குறைக்க, 20-20-20 விதியைப் பின்பற்றுமாறு திரு ஃபாருக் பரிந்துரைக்கிறார். இருபது நிமிடங்களுக்கு மிக அருகிலுள்ள பொருள்களைப் பார்த்தபின், குறைந்தது 20 நொடிகளுக்கு, குறைந்தது 20 அடி தூரத்தில் எதையாவது பார்க்க வேண்டும்.
மேலும், உணவு நேரத்தின்போதும் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் குழந்தைகளிடம் மின்னணுச் சாதனங்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
“மின்னிலக்கச் சாதனங்களின் திரைநேரத்தைக் குறைக்க உதவ அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட வழிகாட்டுதல்களைச் சிறுவர்கள் பின்பற்றுவதைப் பெற்றோர் உறுதிசெய்ய வேண்டும்,” என்றார் திரு ஃபாருக்.
அதுமட்டுமல்லாமல், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை கண் மருத்துவரைச் சந்தித்து கண் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்கிறார் அவர்.
சமூகம், பள்ளி சார்ந்த முயற்சிகள் இதற்கு உதவக்கூடும். நல்ல வாசிப்புப் பழக்கங்களை ஊக்குவிப்பதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்று டாக்டர் சேஷாசாய் கூறினார். வழக்கமான கண் பரிசோதனைகள், நலமான வாழ்க்கைமுறை ஆகியவை கண் பராமரிப்பின் இன்றியமையாத கூறுகளாகும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கிட்டப்பார்வைக் குறைபாட்டை முன்கூட்டியே அடையாளம் கண்டு அதை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதன்மூலம், நமது குழந்தைகளின் கண் நலத்தை நீண்டகாலத்திற்குப் பாதுகாக்க முடியும்.