தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்புழக்கத்திற்கும் கடத்தலுக்கும் எதிரான ஒளியூட்டு நிகழ்ச்சி

2 mins read
6093e703-c371-4201-ac59-5d8c20e61e27
போதைப்பொருளுக்கு எதிரான நாடாவின் நிறங்களில் ஒளியூட்டப்பட்டுள்ள கரையோரப் பூந்தோட்டம். - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கமான “டிரக்ஃப்ரீஎஸ்ஜி” ஒளியூட்டு நிகழ்ச்சிக்காக சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்தில் உள்ள முக்கிய கட்டடங்கள் சில, வியாழக்கிழமை (26 ஜூன்) ஒளி வெள்ளத்தில் மிளிர்ந்தன.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு எட்டாவது ஆண்டாக ஏற்பாடு செய்துள்ள ஒளியூட்டு, அனைத்துலக போதைப்புழக்கம், கடத்தல் எதிர்ப்பு தினத்தன்று நடைபெற்றது. 

நாடாளுமன்றக் கட்டடம், ஃபுல்லர்டன் ஹோட்டல், எஸ்பிளனேடு, மிலெனியா டவர் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள், போதைப்பொருளுக்கு எதிரான நாடாவின் நிறங்களான, பச்சை, வெள்ளை, நிறங்களால் ஒளியூட்டப்பட்டன.

போதைப்பொருள் எதிர்ப்பைப்  பச்சை, வெள்ளை நாடா குறிப்பதால் அந்த வண்ணங்களின் ஒளி, இரவு 7.30 முதல் நள்ளிரவு வரை கட்டடங்களிலும் பொது இடங்களிலும் பிரதிபலித்தது.

 பச்சை நிற ஒளி ஆரோக்கியத்தையும் வெள்ளை நிற ஒளி வலிமையையும் குறிக்கின்றன.

போதைப்பொருளுக்கு எதிரான நாடாவின் நிறங்களில் ஒளியூட்டப்பட்டுள்ள மரினா பே சாண்ட்ஸ்.
போதைப்பொருளுக்கு எதிரான நாடாவின் நிறங்களில் ஒளியூட்டப்பட்டுள்ள மரினா பே சாண்ட்ஸ். - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு, கல்வி அமைச்சு, மக்கள் கழகம் உள்ளிட்டவை ஆதரவில் நடத்தப்பட்ட இந்த ஒளியூட்டு, இளையர்களைக் கருத்தில் கொள்கிறது. 

டிரக்ஃப்ரீஎஸ்ஜி இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டான 2018ல் 3,439 போதைப்புழங்கிகள் கைது செய்யப்பட்டதாகப் பதிவாகியுள்ளது. 2024ல் அந்த எண்ணிக்கை 3,175க்கு குறைந்தது. 

ஒட்டுமொத்த போதைப்பொருள் புழங்கிகளின் கைது எண்ணிக்கை, கிட்டத்தட்ட எட்டு விழுக்காடு குறைந்தது.

இருந்தபோதும் 20 வயதுக்கும் குறைவான புதிய போதைப்பொருள் புழங்கிகளின் எண்ணிக்கை 2023ல் 38 விழுக்காடு கூடியுள்ளது. 

போதைப்பொருள் புழக்கத்தின் முன்தடுப்பு நடவடிக்கையில் ஒளியூட்டு அங்கம் வகிக்கிறது.

ஒளியூட்டுக்காக மொத்தம் 48 அமைப்புகள் ஒன்றிணைந்ததாகவும் அவற்றுள் இரண்டு அமைப்புகள் முதல் முறை  இணைந்ததாகவும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்