கலை, பாரம்பரியம் மரபுடைமையைப் பறைசாற்றும் வகையில் தெமங்கோங் தீபாவளிக் கொண்டாட்டம் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற்றது.
‘தெமங்கோங் ஆர்டிஸ்ட்ஸ்-இன்-ரெசிடென்ஸ்’ அமைப்பும் (Temenggong Artists-In-Residence) சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கலைகள் மற்றும் சமூக அறிவியல் பிரிவும் இணைந்து வழங்கிய ‘தெமங்கோங்’ தீபாவளி மரபுடைமை 2024 நிகழ்ச்சியைக் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கிவைத்தார் சட்ட, போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளை.
வரலாறு பேசும் தெமங்கோங் சாலையில், மரபுடைமை பேணும் காலனித்துவ பங்களாக்கள் சூழ்ந்திருக்க கலைகள், கலாசாரம் மற்றும் சமூகத்தைக் கொண்டாடிய தீபாவளிக் கண்காட்சி நடைபெற்றது.
தீபாவளியைக் குறிக்கும் மின்னொளி அலங்காரங்களும் சமயம் போற்றும் கலைப்படைப்புகளும் அணிவகுத்த கண்காட்சியைப் பார்வையிட்ட துணை அமைச்சர், “நாம் வெறும் பார்வையாளர்கள் அல்ல; ஒவ்வொரு தலைமுறையினரிடமும் தொடர்ந்து உருவாக்கம் காணும் வாழும் பாரம்பரியத்தின் துடிப்புமிக்க பங்கேற்பாளர்கள்,” என்று கூறினார்.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங் 2017ஆம் ஆண்டு சிங்கப்பூர் சீனக் கலாசார நிலையத் துவக்கத்தின்போது கூறியதை தமது உரையின்போது நினைவுகூர்ந்த திரு முரளி பிள்ளை “ஆன்மாவிற்கு ஊக்கமளிக்க மாந்தர்க்குக் கலையும் கலாசாரமும் தேவை,” என்றார்.
பாரம்பரிய மணம் கமழ்ந்த உள்ளூர் கலைக்குழுவினரின் இசை நடனப் படைப்புகள், இவற்றுடன் ‘தெமங்கோங்’ நிறுவனர் திரு.ஹென்றி சென் கிஸானின் இந்து சமயம் பற்றிய தொன்மைவாய்ந்த கலைப்படைப்புகள் குறித்துப் பேசிய திரு முரளி பிள்ளை, “இதன்மூலம் கலை நம் சமூகத்தை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதுடன், பகிரப்பட்ட மனித வரலாற்றில் நமது வலிமை, மகிழ்ச்சி, போராட்டம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக அவை திகழ்வதையும் காண்கிறோம்,” என்றார்.
“ஒளி, நன்மை, அறிவு இவை மறைத்து வைப்பதற்கு அல்ல, பகிர்வதற்கு என்று தீபாவளி கற்பிப்பது போல, இத்தகைய பெருமைவாய்ந்த கலைப்படைப்புகள், கலைவடிவங்களைப் பகிர்ந்துகொள்வதன் வழியாக, அவற்றுள் இருக்கும் நம் விழுமியங்கள், மரபுகளை வழங்கி நம் சமூகத்தின் அறநெறிமிக்க கட்டமைப்பை நாம் வலுவூட்டுகிறோம்,” என்று தெரிவித்தார் திரு முரளி பிள்ளை.
நிகழ்ச்சி குறித்து தமிழ் முரசிடம் பேசிய ‘தெமங்கோங் ஆர்டிஸ்ட்ஸ்-இன்-ரெசிடென்ஸ்’ அமைப்பின் தலைவர் பேராசிரியர் சூ கீ சீ, “முதல்முறையாக தெமங்கோங் தீபாவளி சார்ந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.
தொடர்புடைய செய்திகள்
தேசத்தை நிறுவிய தலைவர்கள் திரு லீ குவான் இயூ, திரு ராஜரத்தினம் ஆகியோர் வலியுறுத்திய பன்முகக் கலாசாரம், பன்முக இன நல்லிணக்கத்தை இத்தகைய நிகழ்ச்சிகள் மேலும் வலிமைப்படுத்துகின்றன,” என்று கூறினார்.