சிங்கப்பூரின் முதல் இந்தியத் திரைப்படத் திருவிழாவில் 60 உள்ளூர்த் திரைப்படங்கள் திரைகாணவிருக்கின்றன.
நாட்டின் 60ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகச் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட 60 இந்தியக் குறும்படங்கள் ‘இண்ட்பாக்ஸ்’ திரைப்பட விழாவில் (indBOX Film Festival) திரையிடப்படும்.
சிங்கப்பூர் இந்திய நாடக, திரைப்பட ஆர்வலர்கள் (சிட்ஃபி) எனும் லாப நோக்கமற்ற அமைப்பின் ஏற்பாட்டில், இவ்விழா ஆகஸ்ட் 15 முதல் 17ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடைபெறும்.
தமிழ், இந்தி, மலையாளம், பஞ்சாபி போன்ற வெவ்வேறு மொழிகளில் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட இந்தியக் குறும்படங்களின் ஒரே ஆவணக் காப்பகமாகத் திகழும் ‘இண்ட்பாக்ஸ்’ அமைப்பை 2018ஆம் ஆண்டு திரு ராஜகோபால் தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டின் திருவிழாவில் திரையிடப்படும் 60 குறும்படங்களில் 30 குறும்படங்களை மக்கள் இலவசமாகக் கண்டு மகிழலாம்.
இந்தியர்கள் மட்டுமன்றி மற்ற இனத்தவரும் இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை முன்னிறுத்தி, பெரும்பாலும் அனைத்துக் குறும்படங்களிலும் துணையுரைகள் (Subtitles) சேர்க்கப்பட்டுள்ளன.
இந்திய மரபுடைமை நிலையத்தில் ஆகஸ்ட் 16, 17 ஆகிய தேதிகளில், ஒவ்வொரு நாளும் 15 குறும்படங்கள் இலவசமாகத் திரையிடப்படவுள்ளன.
மீதமுள்ள 30 குறும்படங்களைக் காணக் கட்டணம் செலுத்த வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
தொடக்கக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்காகச் சமுதாய வீதி என்ற நாவலை மையப்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படமும் இவற்றில் அடங்கும்.
சிறப்புக் கருத்தரங்குகள், விளக்கங்கள், பயிலரங்குகள் என மற்ற பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 15ஆம் தேதி, தாமான் ஜூரோங் சமூக மன்றத்தில் நடைபெறவிருக்கும் தொடக்க விழாவில், அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.
திரைப்படங்கள் போன்ற சக்தி வாய்ந்த ஊடகங்களின் மூலம் சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் குரல்களைப் பிரதிபலிக்கும் தளமாக இந்தத் திருவிழா விளங்கும் என்றார் ‘சிட்ஃபி’ இயக்குநரும் தோற்றுநருமான சலீம் ஹாதி.
“இந்தியச் சமூகத்தைப் பற்றி அனைத்து இனங்களைச் சேர்ந்த சிங்கப்பூரர்களும் தெரிந்துகொள்ள வேண்டும்; அனைவரும் திரைப்படங்களை ரசிக்க வேண்டும் என்று எண்ணி அதற்கு ஏற்றவாறு இந்தத் திருவிழாவை வடிவமைத்துள்ளோம்,” என்றார் அவர்.
இந்தத் திருவிழாவுக்கு நிதியுதவி வழங்கவும் மேல்விவரங்களுக்கும் https://linktr.ee/indboxffsg என்ற இணையத்தளத்தை நாடலாம் என்று அவர் குறிப்பிட்டார்.