அறியாமல் நீரிழிவுடன் வாழும் 250 மில்லியன் மக்கள்

2 mins read
இதயநோய், சிறுநீரகச் செயலிழப்பு, நரம்புக் குறைபாடு, பார்வை இழப்பு போன்ற பாதிப்புகளுக்கும் நீரிழிவு இட்டுச்செல்லக்கூடும்
ceb1472e-2891-4915-8c73-778a424a6703
முன்கூட்டியே தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறுவதால் உடல்நலச் சீர்கேடுகளும் திடீர் மரணம் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. - படம்: இணையம்

விஷ்ருதா நந்தகுமார்

தாங்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டதை அறியாமலேயே 250 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

அனைத்துலக அளவில், ஏறத்தாழ ஒன்பது பெரியவர்களில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மை ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

பாதிப்படைந்தோரில் ஏறத்தாழ 252 மில்லியன் பேர், தங்களுக்கு நீரிழிவு இருப்பது பற்றி தெரியாமல் இருக்கின்றனர்.

நீரிழிவு மோசமாகி, அதனால் சிக்கல் ஏற்படும்போதுதான் அந்நோய் தங்களுக்கு இருப்பதை அவர்கள் அரிய நேர்கிறது.

முன்கூட்டியே தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறுவதால் உடல்நலச் சீர்கேடுகளும் திடீர் மரணம் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.

அனைத்துலக நீரிழிவுக் கூட்டமைப்பின் ‘டயபெட்டிஸ் அட்லஸ்’ சஞ்சிகையின் 11வது பதிப்பில் ஆய்வுத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் ஏப்ரல் நான்காம் தேதியன்று நடைபெற்ற உலக நீரிழிவு மாநாட்டின் தொடக்கத்தில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டன.

தற்போது, 20 வயதுக்கும் 79 வயதுக்கும் உட்பட்ட 580 மில்லியனுக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளளர்.

அத்துடன், 2050க்குள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 853 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுக்கு 3.4 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் உயிரிழக்கின்றனர்.

‘டைப் 2’ எனப்படும் இரண்டாம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயம், பெரியவர்களில் எட்டுப் பேரில் ஒருவருக்கு உள்ளது.

20 வயதிற்கு உட்பட்ட 1.8 மில்லியன் குழந்தைகளும் இளையர்களும் ‘டைப் 1’ எனப்படும் முதலாம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2024ஆம் ஆண்டில், முதல் முறையாக, நீரிழிவு நோய்க்காக உலகளவில் செலவிடப்பட்ட தொகை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலரை (S$1.29 டிரில்லியன்) தாண்டியுள்ளது,

இதயநோய், சிறுநீரகச் செயலிழப்பு, நரம்புக் குறைபாடு, பார்வை இழப்பு போன்ற பல உடல்நலச் சீர்கேடுகளுக்கும் நீரிழிவு இட்டுச்செல்லக்கூடும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறுமுகமாகவே இருப்பதால், தொடக்கத்திலேயே அதனைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை ஆய்வு வலியுறுத்துகிறது.

நீரிழிவுத் தடுப்புக்கும் கட்டுப்பாட்டுக்குமான நடவடிக்கைகள் தேவை என்பதற்கு இந்தத் தகவல்கள் வலுவான சான்றுகள் என்று சஞ்சிகையின் இணைத்தலைவரான பேராசிரியர் டயானா மக்லீயானோ கூறியுள்ளார்.

இத்தனை பேர் தங்களுக்கு நீரிழிவு உள்ளதை அறியாத நிலையில், அரசாங்கங்கள் நோயைத் தொடக்கத்திலேயே கண்டறிய உதவவேண்டும் என்று அனைத்துலக நீரிழிவு அறநிறுவனத்தின் தலைவர் பீட்டர் ஸ்சவார்ஸ் தெரிவித்தார்.

“விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக அவசியம். அதைப் புறக்கணிக்கலாகாது. இல்லாவிடில், விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும்,” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்