தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணவுப் பழக்கத்தில் கவனம் காப்போம்

2 mins read
3f91a478-9e00-44b4-a4b7-2acbd13d3992
‘மைண்ட்ஃபுல் ஈட்டிங்’ (mindful eating) என்று ஆங்கிலத்தில் அழைக்‌கப்படும் கவனத்துடன் சாப்பிடும் உணவுப் பழக்‌கம் இன்றைய உலகில் பிரபலமாகியுள்ளது.  - படம்: ஃபிரீபிக்

பரபரப்பான இன்றைய வாழ்க்கைச் சூழலில், பலருக்‌கு உணவைக்கூட பொறுமையாகச் சாப்பிட நேரமில்லாத நிலை.

கவனமாகப் சாப்பிடுவதற்குப் பதிலாக வேலையில் மூழ்கியவாரோ, தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டோ, கைத்தொலைபேசியைப் பயன்படுத்தியவாறோ உணவினைப் பலரும் உண்கின்றனர். ஆனால், இவ்வாறு சாப்பிடுவது உணவின் தரத்தை மட்டுமின்றி நமது உடலையும் மனநிலையையும் பாதிக்கிறது.

இதன் காரணமாக, ‘மைண்ட்ஃபுல் ஈட்டிங்’ என்று ஆங்கிலத்தில் அழைக்‌கப்படும் கவனத்துடன் சாப்பிடும் உணவுப் பழக்‌கம் பிரபலமாகியுள்ளது.

கவனத்துடன் சாப்பிடுவது என்றால் என்ன?

உணவை வெறுமனே வாயில் போட்டு விழுங்காமல், அதை நன்கு மென்று ரசித்தபடி சாப்பிடுவதே கவனத்துடன் சாப்பிடுவது என்று கூறப்படுகிறது.

இதன்வழி நாம் சாப்பிடும் உணவின் வண்ணம், மணம், சுவை, அமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி உணவை முழுமையாக அனுபவிக்க முடிகிறது. இந்தப் பழக்‌கம், உணவிற்கு நன்றி தெரிவிக்கவும் சீரான, ஆரோக்கியமான மற்ற உணவுப் பழக்கங்களை வளர்க்கவும் உதவுகிறது.

ஹார்வர்ட் பொதுச் சுகாதாரப் பள்ளி வெளியிட்ட கட்டுரை ஒன்றில் இந்தப் பழக்‌கம் பல்வேறு சமயத்தினரால் பின்பற்றப்பட்ட பழமையான நடைமுறையிலிருந்து உருவானது என்று கூறப்படுகிறது. இது, நமது சிந்தனைகள், உணர்ச்சிகள் முதலியவற்றைப் பற்றிய விழிப்புணர்வுடன் மனம் குழப்பமில்லாமல் தெளிவாகச் செயல்படுவதைக்‌ குறிக்‌கிறது.

ஆரோக்கியம்

கவனத்துடன் சாப்பிடுவது சாதக நிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

2022ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், உடல் பருமனானவர்கள் தங்கள் எடைக் குறைப்புத் திட்டத்தின் ஓர் அங்கமாகக் கவனத்துடன் சாப்பிடும் பழக்‌கத்தைக்‌ கடைப்பிடித்தபோது மன அழுத்தம், மனப்பதற்றம், மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் அவர்களிடையே குறைந்ததாகத் தெரியவந்தது. மேலும், 2019ல் நடத்தப்பட்ட மற்றோர் ஆய்வில், இப்பழக்‌கம் கர்ப்பிணிப் பெண்களின் மனநலத்தை மேம்படுத்தியதோடு, இதன் சிறந்த விளைவுகள் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் நீடித்ததாகக் குறிப்பிடப்பட்டது.

மேலும், பல நன்மைகளை இந்தப் பழக்‌கம் வழங்குகிறது. கவனத்துடன் சாப்பிடும்போது செரிமானப் பிரச்சினைகளைத் தவிர்க்‌கலாம். செரிமானம் முழுமையாக நிகழ, ஒரு நபர் தனது உணவைக் கவனமாக மென்று சாப்பிடுவது அவசியம்.

அப்போது பசியை ஆற்றிவிட்ட உணர்வையும் மனநிறைவையும் அடைந்ததுபோன்ற உணர்வை அவரின் உடல் பெறும். அதுமட்டுமில்லாமல், நம்முடைய பசியின் அளவைப் புரிந்துகொண்டு சாப்பிடுவதன்மூலம், அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடாமல் வயிற்றுக்குத் தேவையான அளவு மட்டுமே சாப்பிடலாம்.

கவனத்துடன் சாப்பிடுவது ஒருவித தியான முறை என்பதால், இதில் ஈடுபட அதிக நேரமும் பொறுமையும் தேவைப்படலாம். இருப்பினும், இந்தப் பழக்‌கத்தைத் தினசரி கடைப்பிடிப்பதன்மூலம் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்