உணவுமுறைதான் உடல் நலனுக்கு வழிவகுக்கிறது என்பதைப் பலரும் உணரத் தொடங்கியுள்ளனர். இதுவே, பலவகை உணவு முறைகளும் பிரபலமடைய காரணமாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு உணவு வகை பெரிதாகப் பின்பற்றப்படுகிறது. எல்லாக் காலகட்டத்திலும், எல்லா உணவு முறையிலும் சொல்லப்படும் தாரக மந்திரம், “அளவே அவசியம்” (மாடுரேஷன் இஸ் த கீ) என்பதே.
அடிப்படையில் உடலுக்கு ஊட்டத்தைக் கொடுக்கும் உணவை எடுப்பது அவசியம். அதிலும் உண்ணும் உணவுகளின் அளவை நிர்ணயிப்பதே ஆரோக்கியத்திற்கான சிறந்த வழி.
எவ்வளவு உட்கொண்டாலும், அதற்கேற்றபடி விரியும் தன்மை கொண்டது வயிறு. அனால், அதற்குச் சுமையைக் கொடுத்துக்கொண்டே இருப்பது பிற்கால பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அளவுக்கு அதிகமாக உண்ணும்போது, பயன்படாத கூடுதல் கலோரிகள் இடுப்பைச் சுற்றி தசைத் திரட்சியை ஏற்படுத்தும். உடல் பருமன் நீரிழிவில் தொடங்கி, இதய நோய்கள் வரையிலான பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். சிலருக்கு கல்லீரலில் கொழுப்புப் படிமானம் (Fatty Liver) ஏற்படலாம்.
தேவையை விட அதிகம் உணவு உட்கொண்டால் செரிமானம் தொடங்கி பலவகை பாதிப்புகள் நேரலாம். இந்த அளவு உணவு போதும் என எவ்வாறு அறிவது எனும் கேள்வி எழலாம். பொதுவாகவே கவனச் சிதறலின்றி, மனதை ஒருநிலைப்படுத்தி சாப்பிட்டால், சரியான அளவு உண்டபின், திருப்தி ஏற்பட்டு, ‘போதும்’ எனும் சமிக்ஞை மூளைக்குச் செல்லும் வாய்ப்பு தானாக அமையும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
பொதுவாக பணி முடிந்து இரவு நேரத்தில் அதிகம் உண்பது பரவலாகியுள்ளது. இது, வயிறுப்புண், இரைப்பை பாதிப்பு என பலவகை கோளாறுகளுக்கு வழிவகுக்கலாம். தவிர்க்க முடியாமல் உணவு உண்ண நேர்ந்தால், சாப்பிட்டவுடன் உறங்கச் செல்லாமல் சற்றே நடந்த பின் உறங்குவது உதவும்.
எவ்வளவு விருப்பமான உணவாக இருந்தாலும், எல்லை மீறி உண்பதை விடுத்து குறைவாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.