தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளிச் சந்தையில் பானமும் பலகாரமும் விற்கும் மாமியார்-மருமகன்

2 mins read
உணவு வணிகத்தின்மீது குடும்பத்தில் நிலவும் ஆர்வம்
03fba72e-f2ed-4c54-88f1-83477cb34305
மாமியார் கத்திஜா பேகம், மருமகன் அசாத் அலி இருவரும் எதிரெதிராக, பெர்ச் சாலைத் தீபாவளிச் சந்தையில் கடைகளை நடத்திவருகின்றனர். - படம்: ரவி சிங்காரம்
Watch on YouTube

இவ்வாண்டு பெர்ச் சாலைத் தீபாவளிச் சந்தைக்குச் சென்றவர்கள் வீட்டில் செய்யப்பட்ட தீபாவளிப் பலகாரங்களை விற்கும் ‘அலிசா மகால்’ கடையைப் பார்த்திருக்கலாம்.

கடையின் உரிமையாளரான திருவாட்டி கத்திஜா பேகம், 58, வழக்கமாக தீபாவளிச் சந்தையில் காணும் அறிந்த முகம்.

அவர் கடைக்கு எதிரே, மாறுபட்ட குளிர்பானங்கள், குனாஃபா எனும் மத்திய கிழக்கு இனிப்புப் பலகாரம், இடியப்ப பிரியாணி, ரொட்டி ஜான், கொத்து பரோட்டா ஆகியவற்றை விற்கிறார் அவருடைய மருமகன் அசாத் அலி.

தீபாவளிச் சந்தையில் கடை வைப்பதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலிருந்து வந்திருக்கும் அசாத்துக்கு இது புதிய அனுபவம்.

விதவிதமான கரும்பு பானங்களும் துபாய் சாக்லெட் - ஸ்ட்ராபெர்ரி குனாஃபாவும் இங்கு கிடைக்கின்றன. புதினா, மாம்பழம், எலுமிச்சம்பழம், இஞ்சி போன்றவற்றைக் கரும்புச்சாற்றுடன் சேர்த்து புத்தாக்க பானங்களைத் தயாரிக்கும் அசாத், “காரமான கரும்பு பானம், மாம்பழக் கரும்பு பானம் போன்றவை மக்கள் விரும்பி அருந்துகின்றனர்,” என்றார்.

எதிரெதிராகக் கடை வைத்திருந்தாலும் மாமியார், மருமகனுக்கிடையே போட்டி இல்லை. “அவர் பானங்களும் குனாஃபாவும் விற்கிறார், நான் பலகாரங்கள் விற்கிறேன்,” என்றார் திருவாட்டி கத்திஜா.

பெர்ச் சாலைத் தீபாவளிச் சந்தையில் கரும்பு பானம், ‘துபாய் வைரல் குனாஃபா’ விற்கும் அசாத் அலி.
பெர்ச் சாலைத் தீபாவளிச் சந்தையில் கரும்பு பானம், ‘துபாய் வைரல் குனாஃபா’ விற்கும் அசாத் அலி. - படம்: ரவி சிங்காரம்

பரம்பரையாகத் தொடரும் வணிகம்

திருவாட்டி கத்திஜாவின் தாயார், 1995லிருந்து பலகாரங்கள், குக்கீஸ் வணிகத்தை கேம்பல் லேனில் நடத்தி வந்தார். அவரைப் பார்த்து வளர்ந்த திருவாட்டி கத்திஜா நாளடைவில் அந்த வணிகத்தை ஏற்று நடத்தத்தொடங்கினார். தற்போது அவருடைய மகளும் மருமகனும் இதே துறையில் கால்பதித்துள்ளனர்.

அவரது மகள் அலிசா பர்வீன், கட்டட வடிவமைப்பாளர்; மருமகன் பொறியியல் துறையைச் சேர்ந்தவர். இருவரும் உணவுப் பிரியர்கள். படித்த காலத்தில் தொடங்கி பத்து ஆண்டுகளாக உணவு, பானத் துறையிலும் பணியாற்றியுள்ளார் அசாத்.

இத்தம்பதியர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ‘ஃபிரெஷ் ரஸ்’ (Fresh ‘Rus’) எனும் கரும்புப் பானக் கடையை மெல்பர்னில் தொடங்கினர்.

‘ரஸ்’ என்பது உருது மொழியில் பானம் எனப் பொருள்படும். அசாத் பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்டவர்; உருதுமொழி பேசுபவர். அலிசா தமிழர்.

மெல்பர்னில் விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் ‘ஃப்ரெ‌ஷ் ரஸ்’ (Fresh Rus) உணவு வண்டி.
மெல்பர்னில் விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் ‘ஃப்ரெ‌ஷ் ரஸ்’ (Fresh Rus) உணவு வண்டி. - படம்: அசாத் அலி
புதினா, எலுமிச்சைச்சாறு  கலந்த கரும்புப் பானத்துடன் அசாத் அலி.
புதினா, எலுமிச்சைச்சாறு கலந்த கரும்புப் பானத்துடன் அசாத் அலி. - படம்: ரவி சிங்காரம்

“சிறுவயதில் கரும்பு சாப்பிட்டது எங்களுக்கு என்றும் நினைவில் இனிக்கும் அனுபவம். அந்த இன்பமான தருணங்களைப் பிறருக்கும் வழங்க, கரும்புச் சாற்றை மற்ற பானங்களுடன் கலந்து கலவையாக விற்கத் தொடங்கினோம்,” என்றார் அசாத்.

ஆஸ்திரேலியாவில் விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் அவர்கள் கரும்பு பானம் விற்கிறார்கள். வார இறுதிகளில் பொழுதுபோக்காகத் தொடங்கிய இந்த வணிகம் தற்போது விரிவடைந்துள்ளது.

துபாய் சாக்லெட்-ஸ்டிராபெர்ரி குனாஃபாவை சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தும் தொழில்முனைவர் அசாத் அலி.
துபாய் சாக்லெட்-ஸ்டிராபெர்ரி குனாஃபாவை சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தும் தொழில்முனைவர் அசாத் அலி. - படம்: ரவி சிங்காரம்

ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் வரை

திருவாட்டி கத்திஜா அளித்த ஊக்கத்தில் அசாத் தம்பதி, இவ்வாண்டு தீபாவளிச் சந்தையில் கடை நடத்த முடிவெடுத்தனர். கிட்டத்தட்ட $10,000 வாடகையை முதலீடாகச் செலுத்தி இப்புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

“ஆஸ்திரேலியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே விலைவாசி வேறுபாடு உள்ளது. ஆஸ்திரேலியாவில் $10க்கு விற்கும் கரும்புப் பானத்தை நாங்கள் இங்கு $2-$3க்கு விற்கிறோம். எங்கள் மையக் குறிக்கோள், எங்கள் உணவு, பானங்களை - குறிப்பாக, ‘துபாய் வைரல் சாக்லெட்-ஸ்ட்ராபெர்ரி குனாஃபாவை’ - சிங்கப்பூரில் அறிமுகப்படுத்துவதே.

“குனாஃபாவுக்குத் தேவைப்படும் இத்தாலிய பிஸ்தாவை நான் மெல்பர்னிலிருந்து கொண்டுவந்துள்ளேன். அதைப் பெல்ஜிய சாக்லெட்டுடன் சேர்த்து சுவையாக வழங்குகிறோம்,” என்றார் அசாத்.

குறிப்புச் சொற்கள்