தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரபைப் பாராட்டும் புதிய தாய்மொழி நூல்கள், கருத்தரங்கு

3 mins read
சிறாரிடம் மரபைக் கொண்டுசேர்க்கும் பாலமே தாய்மொழி
13ddc80f-69dd-4db5-b4b0-abe1fd3455f8
நான்கு மொழிகளில் புதிதாக வெளியான பாலர் கதை நூல் தொடர், சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புகளை உணர்த்துகிறது. - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 2

சிறாரிடம் மரபைக் கொண்டுசேர்க்கும் பணி எளிதன்று. எனினும், இச்சவாலை ஏற்றுள்ளனர் பாலர் பள்ளிகளில் கற்பிக்கும் தாய்மொழி ஆசிரியர்கள்.

பாலர் விரும்பும் வகையில் மரபைக் கற்பிக்க ஆசிரியர்கள் கையாளும் புத்தாக்க முறைகளைக் காட்சிப்படுத்தியது சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) முதன்முறையாக நடைபெற்ற ‘ஒன்எம்டிஎல்’ கருத்தரங்கு.

சிங்கப்பூரின் அதிகாரத்துவ தாய்மொழிகள் மூன்றையும் ஒரே கூரையில் இணைத்தது உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நடந்தேறிய இக்கருத்தரங்கு. அதன் கரு, ‘நமது மொழிகள், நமது இணைப்புகள்’.

கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்த பிசிஎஃப் எனப்படும் மக்கள் செயல் கட்சி (மசெக) சமூக அறநிறுவனத்தின் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளி, சிறப்பு அங்கமாக, சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புகளை உணர்த்தும் புதிய தாய்மொழிக் கதைநூல் தொடரையும் வெளியிட்டது.

‘லெட்ஸ் செட் ஆஃப்!’ எனும் இத்தொடரில் ஆறு நூல்கள் உள்ளன. ஒவ்வொரு நூலும் சிங்கப்பூரின் முக்கியச் சின்னம் ஒன்றைச் சித்திரிக்கும். ஆங்கில, சீன, மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் தமிழரின் இதயத்துடிப்பான பஃப்ளோ சாலை மட்டுமன்றி, மற்ற இனத்தவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த தெலுக் ஆயர், கேலாங் செராய், ஜூ சியாட் போன்றவையும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

அனைத்து பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர்பள்ளிகளுக்கும் இந்த நூல் தொடர் வழங்கப்படும். இதன்மூலம் 40,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயன்பெறுவர்.

நூல்களை எழுதியது பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர்பள்ளி ஆசிரியர்களே என்பது ஒரு தனிச்சிறப்பு.

ஜப்பானிய பாணியில் கதைசொல்லுதல்

இந்நூல்களில் ஒன்றான ‘டுடூஸ் லாஸ்ட் மி‌‌ஷன்’ கதைநூலை ‘கமி‌ஷிபாய்’ எனும் ஜப்பானிய மரபுக் கதைசொல்லும் விதத்தில் சுவாரசியமாகப் படைத்தார் பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் 519 பிடோக் நார்த் இருமொழியாசிரியர் சித்ரா. அவர் கதைக்கான படங்களை வரைந்து ஒரு கதைப்பெட்டியில் வைத்து, கற்பித்தார்.

“புக்கிட் தீமா ரயில் நிலையம் மூடப்பட்டதைப் பற்றி நான் கற்றேன்,” என்றார் கதையைக் கேட்ட கோபிநாத் மிருதுளா, 5.

ஜப்பானிய மரபுக் கதைசொல்லும் விதத்தில் சுவாரசியமாகப் படைத்தார் பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் 519 பிடோக் நார்த் இருமொழியாசிரியர் சித்ரா. 
ஜப்பானிய மரபுக் கதைசொல்லும் விதத்தில் சுவாரசியமாகப் படைத்தார் பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் 519 பிடோக் நார்த் இருமொழியாசிரியர் சித்ரா.  - படம்: ரவி சிங்காரம்

“ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 350 பிசிஎஃப் பாலர்பள்ளிகளில் 40 முதல் 45 நிலையங்களிலேயே தமிழ் கற்பிக்கப்பட்டது. இப்போது கிட்டத்தட்ட 200 நிலையங்களில் தமிழ் வழங்குகிறோம். 2027க்குள் 350 பாலர் பள்ளிகளிலும் தமிழில் கற்பிப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது,” என்றார் பிசிஎஃப் தலைமையகத்தின் தாய்மொழிகளுக்கான முதன்மை வல்லுநர் பத்மாவதி ராஜேந்திரன், 65.

பாலர்பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட குழந்தைப் பாடல் இசையமைப்புப் போட்டி, பாலருக்காக நடத்தப்பட்ட மாறுவேடப் போட்டி ஆகியவற்றில் ஒவ்வொரு மொழிக்கும் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன.

குழந்தைப் பாடல் இசையமைப்புப் போட்டியில் பரிசு வென்ற ஆசிரியர்கள் (இடமிருந்து) கனகராஜ் கார்த்திகா, ஜெய ரூபி கேரலின், சசிரேகா கார்த்திக்.
குழந்தைப் பாடல் இசையமைப்புப் போட்டியில் பரிசு வென்ற ஆசிரியர்கள் (இடமிருந்து) கனகராஜ் கார்த்திகா, ஜெய ரூபி கேரலின், சசிரேகா கார்த்திக். - படம்: ரவி சிங்காரம்

“‘செல்லப்பிராணி, ‘உணர்வுகள்’ போன்ற வெவ்வேறு கருப்பொருள்களில் பாடல் வரிகள் தரப்பட்டன. நாங்கள் அவற்றுக்கு இசையமைத்து, மாணவர்களுக்குக் கற்பித்தோம்,” என்றார் பரிசை வென்ற பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் புளோக் 143 செங்காங் ஈஸ்ட் மூத்த ஆசிரியர் ஜெய ரூபி கேரலின்.

“பாடல்கள் பாடும்போது மொழியறிவைக் கொண்டுவருகிறோம்; பாலரின் மனத்தில் பதிகிறது; தமிழ்ச் சொற்களையும் கற்கின்றனர். இசையுடன், கரகாட்டம், தப்பாட்டம் போன்ற நடனங்களையும் மாணவர்கள் வகுப்பில் ஆடுவார்கள்,” என பரிசுவென்ற பிசிஎஃப் செங்காங் வெஸ்ட் புளோக் 330ஏயின் தமிழாசிரியர் கனகராஜ் கார்த்திகா கூறினார்.

பரிசை வென்ற மற்றோர் ஆசிரியரான பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் தெம்பனிஸ் வெஸ்ட் புளோக் 140, தமிழாசிரியர் சசிரேகா கார்த்திக், மறுசுழற்சிசெய்யப்பட்ட பொருள்களால் எப்படி மாணவர்கள் இசை வாத்தியங்கள், நடனப்பொருள்களை உருவாக்கலாம் எனக் கருத்தரங்கில் கற்பித்தார்.

“நெகிழிக் கொள்கலன்களைக் கொண்டு கரகம், உறிஞ்சுகுழல் வைத்து பறைக் குச்சி போன்றவற்றைச் செய்யலாம்,” என்றார்.

மாறுவேடப் போட்டியில் வென்ற சிறார்கள் (இடமிருந்து) கோபிநாத் மிருதுளா, த்யுதி ஸ்ரீராம், வேணுகோபால் தன்யஸ்ரீ.
மாறுவேடப் போட்டியில் வென்ற சிறார்கள் (இடமிருந்து) கோபிநாத் மிருதுளா, த்யுதி ஸ்ரீராம், வேணுகோபால் தன்யஸ்ரீ. - படம்: ரவி சிங்காரம்

நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த தற்காப்பு; நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது, “பழங்காலக் கதைகள்மூலம் பாலருக்கு மரபு, மொழியுடனான தொடர்பை நிலைக்கச் செய்வது இன்றைய விரைவாக மாறிவரும் உலகில் முன்பைவிட அவசியமாகிறது,” என்றார்.

“பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சிப் பட்டறைகள் மூன்று மொழிகளிலும் நடைபெற்றன,” என்றார் பிசிஎஃப் தலைமையகத்தின் தமிழ்மொழி வல்லுநர் பு‌ஷ்பலதா.

கருத்தரங்கின் நடவடிக்கைகளில் ஒன்றான பூ கோக்கும் நடவடிக்கையில் பங்கேற்ற சீனச் சிறுமி.
கருத்தரங்கின் நடவடிக்கைகளில் ஒன்றான பூ கோக்கும் நடவடிக்கையில் பங்கேற்ற சீனச் சிறுமி. - படம்: ரவி சிங்காரம்
பாரம்பரிய இசையைக் கற்பிக்கும் பிசிஎஃப் பாலர்பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டும் மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது.
பாரம்பரிய இசையைக் கற்பிக்கும் பிசிஎஃப் பாலர்பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டும் மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது. - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்