முதியவர்கள் கைவண்ணத்தில் புதிய சூரியகாந்தி கண்காட்சி

2 mins read
b7b79d56-ef36-49f4-a40d-dd2cbf97903b
‘சன்ஃபிளவர் சர்ப்ரைஸ்’ கண்காட்சி, கரையோரப் பூந்தோட்டங்களின் மலர்மாடத்தில் அக்டோபர் 22 முதல் நவம்பர் 16 வரை நடைபெறும். - படம்: த.கவி

தீபாவளி மாதத்தில், இந்தியா-சிங்கப்பூர் உறவுகளின் 60 ஆண்டு நிறைவைப் பறைசாற்றும் வகையில், ராஜஸ்தானின் கட்டடக்கலையுடன் கூடிய 3,000க்கும் மேற்பட்ட சூர்யகாந்திகளை ஒரு சிறப்புக் கண்காட்சியில் கரையோரப் பூந்தோட்டங்கள் காட்சிப்படுத்துகின்றன.

‘பிங்க் சிட்டி’ என அழைக்கப்படும் ஜெய்ப்பூரை கண்முன் கொண்டுவரும் இந்த ‘சன்ஃபிளவர் சர்ப்ரைஸ்’ கண்காட்சி, மலர்மாடத்தில் (flower dome) அக்டோபர் 22 முதல் நவம்பர் 16 வரை நடைபெறும்.

- படம்: த.கவி

இதன் சிறப்பம்சமாக, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தைச் (சிண்டா) சேர்ந்த முதிய பயனாளிகளின் கைவண்ணத்தில் உருவான அலங்காரங்கள் கலைப்படைப்புகளில் இடம்பெறுகின்றன.

Watch on YouTube

அக்டோபர் 22ஆம் தேதி பொதுமக்களுக்காகத் திறக்கப்படவுள்ள கண்காட்சியின் அதிகாரபூர்வத் தொடக்கத்தை முன்னிட்டு, கண்காட்சியின் மையத்திலிருக்கும் இரண்டு பிரம்மாண்டமான மயில் சிற்பங்களுக்கு உயிரூட்ட சிண்டாவின் முதிய பயனாளிகள் வியாழக்கிழமை (அக்டோபர் 16) கைகொடுத்தனர்.

- படம்: த.கவி

உள்ளூர் தனிப்பயனாக்கப்பட்ட தொப்பி தயாரிப்பாளர் கிறிஸ்டின் ஹக்கீமின் வழிகாட்டுதலுடன், முதியோர் கையால் செய்யப்பட்ட மயிலிறகுகளை, பாரம்பரிய இந்திய உடைகளை நினைவூட்டும் வண்ணமயமான கண்ணாடி மணிகளுடனும் துணி அலங்காரப் பொருள்களுடனும் கவனமாக அழகுபடுத்தினர்.

உள்ளூர் தனிப்பயனாக்கப்பட்ட தொப்பி தயாரிப்பாளர் கிறிஸ்டின் ஹக்கீமும் (இடது) சிண்டாவின் முதிய பயனாளிகளில் ஒருவரும்.
உள்ளூர் தனிப்பயனாக்கப்பட்ட தொப்பி தயாரிப்பாளர் கிறிஸ்டின் ஹக்கீமும் (இடது) சிண்டாவின் முதிய பயனாளிகளில் ஒருவரும். - படம்: த.கவி

பொறுமையுடனும் துல்லியத்துடனும் பொருத்தப்பட்ட ஒவ்வொரு மணியும், மயிலிறகின் ‘கண்’ வடிவத்தை உருவாக்கியது.

- படம்: த.கவி

இந்த நடவடிக்கையில் பங்கேற்ற மூத்தவர்களில் ஒருவரான 68 வயது சரண்ஜீத் கோர் தில்லனுக்கு இந்த அனுபவம் மனத்திற்கு அமைதியையும் உள்ளார்ந்த திருப்தியையும் அளித்தது என்றார்.

திருவாட்டி சரண்ஜீத் கோர் தில்லன், 68.
திருவாட்டி சரண்ஜீத் கோர் தில்லன், 68. - படம்: த.கவி

“மயிலிறகுகளின் வண்ணங்களுக்கு ஏற்ப மணிகளைப் பொருத்தி, பின்னர் அவற்றைப் பெரிய சிற்பத்தில் சிறப்பாக ஒட்டினோம்.

“தீபாவளி நெருங்கும் இத்தருணத்தில், மற்ற மூத்தோருடன் சேர்ந்து இங்குப் பயனுள்ள விதத்தில் நேரத்தைக் கழித்ததில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். அனைவரின் பங்களிப்புகளையும் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக உள்ளது,” என்று திருவாட்டி சரண்ஜீத் குறிப்பிட்டார்.

பங்கேற்றவர்களில் மற்றொருவரான கலை செல்வன், 58, இந்த நடவடிக்கை தமக்கு பொறுமையின் முக்கியத்துவத்தை உணர்த்தியதாகக் குறிப்பிட்டார்.

திரு கலை செல்வன், 58.
திரு கலை செல்வன், 58. - படம்: த.கவி

மற்ற மூத்தோருடன் ஒன்றாக இந்தக் கைவினைக் கலையைச் செய்தது தமக்கு உற்சாகம் அளித்ததாக அவர் சொன்னார்.

“எனக்குத் தெரிந்ததை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அவர்களும் எனக்கு உதவினர். எங்களுக்கிடையே நல்லதொரு நட்பு மலர்ந்தது,” என்றார் அவர்.

மேலும், தாம் செய்த அலங்காரத்தை தம் நண்பர்கள், மனைவி, மகள் என அனைவரும் வந்து பார்ப்பார்கள் என்றும் அது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்றும் தாம் நம்புவதாக திரு கலை செல்வன் கூறினார்.

- படம்: த.கவி

மூத்தோரின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் சிண்டாவும் கரையோரப் பூந்தோட்டங்களும் இந்த நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்ததாக சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் சொன்னார்.

“இது, அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், வயது வெறும் ஒரு எண் மட்டுமே என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறது. மூத்தவர்களும் சமுதாயத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க முடியும் என்பதை இது காட்டுகிறது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்