வளர்ச்சியையும் புத்தாக்கத்தையும் மையப்படுத்தி, மீன்பிடிக் கிராமத்திலிருந்து உலக நகரமாக உருமாறியுள்ள நம் நாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பாக அமைகிறது சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் ‘ஒன்ஸ் அப்பான் எ டைட்’ (Once Upon A Tide) கண்காட்சி.
சிங்கப்பூரின் 60 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் சனிக்கிழமை மே 24ஆம் தேதி முதல் சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது.
காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் 350க்கும் மேற்பட்ட கலைப்பொருள்கள் மூலம், சிங்கப்பூரை வடிவமைத்த மக்கள், பொருள்கள், எண்ணங்கள் ஆகியவற்றை பார்வையாளர்கள் அறிந்துகொள்ளலாம்.
நாள்தோறும் காலை 10 மணியிலிருந்து இரவு 7 மணிவரை திறந்திருக்கும் கண்காட்சி, 2026 அக்டோபர் மாதம் மூடப்படும்.
ஆண்டு இறுதியில் சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் அமைந்துள்ள சிங்கப்பூர் வரலாறு காட்சிக்கூடம் சீரமைப்புக்காக 2026ஆம் ஆண்டின் இறுதி வரை மூடப்படவுள்ளதால், ‘ஒன்ஸ் அபோன் எ டைட்’ கண்காட்சி அரும்பொருளாகத்திற்கு பார்வையாளர்களை ஈர்க்கும் முக்கிய தளமாக விளங்கும்.
ஒரு தீவாகச் சிங்கப்பூரின் அடையாளம், கடலின் முக்கியத்துவம், பின்னர் சிங்கப்பூர் நதியின் மையத்தன்மை ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட பயணமாக இந்தக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
“சிங்கப்பூர் எப்போதும் இருந்திருக்கிறதா, உலக வரைபடத்தில் சிங்கப்பூரை இடம்பெறச் செய்தது எது,” ஆகிய கேள்விகளோடு முதல் அத்தியாயம் தொடங்குகிறது.
சிலர் எண்ணுவது போலச் சிங்கப்பூரின் பயணம் சுதந்திரம் கிடைத்தபோதோ, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு உள்ளானபோதோ தொடங்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
3000 - 5000 ஆண்டுகளுக்கு முன்பே சிங்கப்பூரின் கதை தொடங்குகிறது என்பதற்குச் சான்றாக விளங்கும் கலைப்பொருள்களை இப்பிரிவில் காணலாம்.
ஒரு துறைமுகத்திலிருந்து இன்றைய துடிப்புமிக்க சுற்றுலாத் தலமாக உருமாறியுள்ள சிங்கப்பூரை, சிங்கப்பூர் நதி எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை ‘நதிச்சாலைகள் (The River Roads)‘ என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டாவது அத்தியாயம் எடுத்தியம்புகிறது.
சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டதால் சிங்கப்பூரில் வர்த்தகம் எவ்வாறு செழித்தது என்பதை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கலைப்பொருட்களின் மூலம் வருகையாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூர் நதி எவ்வாறு காட்சியளித்தது என்று பார்வையாளர்கள் உணர உதவும் நிகழ்பட ஆட்டத்தையும் இங்குக் கண்டறியலாம்.
கடலிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட நிலம் சிங்கப்பூர் வரலாற்றின் நவீன நிகழ்வு என்றெண்ணும் பார்வையாளர்களைக் கவரும் விதமாக, ‘விரிவடையும் எல்லைகள்’ எனும் மூன்றாவது அத்தியாயம் விளங்கும்.
பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தால் வழிநடத்தப்பட்டு, 1880களில் தொடங்கிய முதல் நிலமீட்புப் பணியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்த அத்தியாயத்தில் காணலாம்.
‘மக்களின் ஓட்டங்கள்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள நான்காவது அத்தியாயம், ‘சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு யார் காரணம்?’ என்ற கேள்வியை எழுப்புகிறது.
சீனத் தொழிலாளர்கள் முதல் இந்திய அரசு ஊழியர்கள் வரையிலான தொடக்கக் காலக் குடியேறிகளின் கதைகளைச் சொல்வதன் மூலம், தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் சிறந்த வாழ்க்கையை உருவாக்கப் பல்வேறு நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த குடியேறிகளை இவ்வத்தியாயம் பிரதிநிதிக்கிறது.
ஐந்தாம் அத்தியாயமான ‘அலைகளை உருவாக்குதல்’, சிங்கப்பூரர்கள் வட்டார ரீதியாகவும் உலகளவிலும் எவ்வாறு பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
1998 ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் பறந்த சிங்கப்பூர் கொடி, சிங்கப்பூரின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்ற நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் அணிந்த நீச்சல் உடை, ஆசிய திடல்தடப் போட்டியில் வரலாறு படைத்த திடல்தட வீராங்கனை சாந்தி பெரேராவின் வண்ணமயமான காலணிகள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியின் இறுதியில், தங்களின் பதில்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட சிங்கப்பூருக்கான தங்கள் கனவைப் பார்வையாளர்கள் கண்டறியலாம்.
அதோடு, ‘ வேவ்ஸ் ஒஃப் வோன்டெர் (waves of wonder)’ என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான 11 புத்தகங்கள் கண்காட்சியின் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
முத்திரைகளையும் காந்த எழுத்துகளையும் கொண்டு விளையாடும் விதமாக அவர்களுக்கெனச் சில நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தொடக்கக் காலத்திலிருந்து அண்மைய காலம் வரையிலான சிங்கப்பூர் வரலாற்றின் அனைத்துக் கூறுகளையும் மக்கள் முழுமையாக உணர இக்கண்காட்சி வழிவகுக்கும்.