ஓய்வின்றி உழைப்பதாகக் கடின உழைப்பாளியைக் குறிப்பிடுவது வழக்கம் என்றாலும், உண்மையில் ஓய்வின்றி உழைப்பவை மனித உடல் உறுப்புகள்தான்.
மனிதர்களின் உடலுக்கும் மனத்துக்கும் புத்துணர்ச்சி ஏற்பட ஆறு முதல் எட்டு மணி நேர உறக்கம் தேவை. அதேபோல, உடல் உறுப்புகளுக்கும் அவ்வப்போது ஓய்வளிப்பது அவசியம்.
இன்றைய சூழலில் பலருக்கும், பணிக்காகப் பல மணி நேரம் கணினித் திரை முன்பு அமர வேண்டியுள்ளது. வேலைக்காக இல்லாவிட்டாலும், திறன்பேசித் திரை அனைவரது வாழ்விலும் விலக்க முடியாத அங்கம் வகிக்கிறது. அதனால் கண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன.
ஏறத்தாழ 8 மணி நேரம் ஏதேனும் ஒரு திரைமுன் செலவிடுவதால் கண்கள் வறண்டு சோர்வடையும். அதற்குச் சற்று ஓய்வளிக்கவும் சிரமத்தைக் கட்டுப்படுத்தவும் சில வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். ஒவ்வோர் இருபது நிமிடங்களுக்கும் 20 நொடிகள் கண்களைத் திரையிலிருந்து திருப்பி வேறுபுறம் பார்க்க வேண்டும்.
திரையை இயன்றவரை தள்ளியிருந்து பயன்படுத்துவதும் இருட்டில் திரையைப் பார்ப்பதைத் தவிர்ப்பதும் கண்களுக்கு ஓய்வளிக்கும்.
திறன்பேசியில் அதிக நேரம் பேசுவதும் காதொலிக் கருவி மாட்டியபடி பணி செய்யும் பழக்கமும் அதிகரித்துள்ளன. இது காதுகளில் வலி, அழுத்தம், செவித்திறன் குறைபாடு உட்பட பல பிரச்சினைகளை உருவாக்கலாம்.
அதிகமாக 20 நிமிடங்கள் காதொலிக் கருவியைப் பயன்படுத்தலாம். படம் பார்ப்பது போன்ற நீண்ட நேரப் பயன்பாடுகளுக்கு அவற்றைத் தவிர்க்கலாம்.
நீண்ட நேரம் அமர்ந்தவாறே வேலை செய்வதால் முதுகுத் தண்டு பாதிக்கப்படக்கூடும். சரியான முறையில் அமராமல் தொடர்ந்து பணியாற்றும்போது கழுத்து, முதுகுவலி ஏற்படும் வாய்ப்புள்ளது.
பணிச்சூழலில் அவரவர் உடல் உயரத்துக்கேற்ப மேசை உயரத்தை அமைத்துக்கொள்வது நல்லது. மேலும், அவ்வப்போது ‘ஸ்ட்ரெச்சிங்’ எனும் எளிய உடற்பயிற்சிகளைச் செய்வது தசைகளில் ஏற்படும் சோர்வை நீக்க உதவும்.
பொதுவாகவே உடல் உழைப்பு குறைந்துள்ள நிலையில், செரிமானத்திலும் சிக்கல் ஏற்படுகிறது. இரவுநேர உறக்கத்தின்போதும் செரிமான மண்டலம் மெதுவாகத் தன் பணியை மேற்கொள்ளும்.
சரியான உறக்கம் இல்லையென்றால் இச்செயல்பாடு பாதிக்கப்படலாம். இதனால் நெஞ்சு எரிச்சல், வயிற்றில் புண் எனப் பல பிரச்சினைகள் உருவாகலாம். உணவு உட்கொண்டவுடன் உறங்காமல் இரண்டு மணி நேரம் கழித்து உறங்கலாம்.
இதயம் உண்மையில் ஓய்வின்றி உழைக்கும் உறுப்பு. அதற்கு அதிக அழுத்தமோ சிரமமோ ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். மனப்பதற்றம், தூக்கமின்மை, உணவுக் கட்டுப்பாடின்மை உள்ளிட்டவை ரத்த ஓட்டத்தைச் சீர்குலைப்பதுடன் நச்சுகள், கால்சியம் போன்றவை ரத்தக்குழாய்களில் படியவும் வழிவகுக்கும்.
எலும்பு, மூட்டு, தசை போன்ற உறுப்புகள் சற்றே மாறானவை. அவை சீராக இருக்க, சரியான அளவு உடல் உழைப்பும் உடற்பயிற்சியும் உதவும்.
இதயத்தைப் போன்றே சிறுநீரகமும் தொடர்ந்து பணிசெய்யும் உறுப்பு. இது ரத்தத்தைச் சுத்திகரித்து அதிலிருக்கும் கழிவுகளை வெளியேற்றும். அதன் வேலைப்பளுவைக் குறைப்பதே அதற்கான ஓய்வு. குறைந்த அளவு நீர் அருந்துவது அதன் பணிச்சுமையை அதிகரிக்கும். அதிக உப்பு சேர்ப்பதும் சிரமம் உண்டாக்கும்.
கல்லீரல், கணையம், பித்தப்பை உள்ளிட்டவை புரத உற்பத்தி, ரத்தம் உறைவதற்கு உதவுதல், நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாக்கம், உணவில் உள்ள நச்சுப்பொருள்களை வடிகட்டுதல் என பல்வேறு பணிகளை ஒருசேர மேற்கொள்கின்றன.
மது அருந்துதல், கொழுப்பு அதிகம் சேர்வது போன்றவை இவற்றின் செயல்பாட்டில் தடை ஏற்படுத்தும். இவற்றைத் தவிர்ப்பதே ஓய்வு கொடுப்பது போலாகும்.
உடல் உறுப்புகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் உறுப்பான மூளைக்கும் ஓய்வு அவசியம். கவனச்சிதறல், சோர்வு, மனஅழுத்தம் போன்றவை மூளைக்கு ஓய்வு தேவை என உணர்த்தும் அறிகுறிகள். தூங்கும்போதும் மூளையின் செயல்பாடு நிற்பதில்லை. ஆனால் ஆழ்ந்த உறக்கம் அதற்குப் புத்துணர்வைத் தரும். பணியிலிருந்து அவ்வப்போது மன ரீதியிலான விடுப்பு, தியானம் உள்ளிட்ட மனத்துக்கு அமைதி தரும் செயல்களை மேற்கொள்வது மூளைக்கு உரிய ஓய்வளிக்கும்.