பாவைப் பாடல்களைச் சிறப்பிக்கும் வகையில் சிங்கப்பூரில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் இளையர்களின் பங்கேற்பு ஆண்டுக்கு ஆண்டு நிலையாக உள்ளது. பக்திச்சுவை ததும்பும் திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் தீந்தமிழ்ச் சொற்கள் நிறைந்தவை; பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுச் சாளரங்களாகவும் திகழ்பவை. மார்கழிக்கு விடைகொடுத்து தை மாதத்தை வரவேற்கத் தயாராகும் நேரத்தில் பாவை இலக்கியத்தைச் சுவைத்த இளையர்கள், தாங்கள் கற்றது பற்றித் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர். ஆண்டாள் வடித்த திருப்பாவையின் ‘தூமணி மாடத்து’ எனத் தொடங்கும் ஏழாவது பாசுரம் பற்றிய குறுங்காணொளியை (Reels) 14 வயது ஸ்ரீதயா வெங்கடேஷ் உருவாக்கியுள்ளார்.
ஆண்டாள் வடித்த பாவையின் ‘தூமணி மாடத்து’ எனத் தொடங்கும் ஒன்பதாவது பாசுரத்தைப் பற்றிய ரீல் காணொளியை கூ சுவான் பிரெஸ்பிட்டேரியன் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் உயர்நிலை 2 மாணவி ஸ்ரீதயா வெங்கடேஷ் தயாரித்தார்.
சிங்கப்பூர் ராமானுஜர் சங்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் திருப்பாவைத் தொடரில் பங்கேற்று வரும் ஸ்ரீதயா, ஒவ்வொரு முறையும் புதிய தகவல்களைக் கற்று மகிழ்வதாகக் கூறினார்.
“அந்நாள் தமிழர்களின் வழக்கங்களையும் வாழ்வியலையும் பற்றித் தெரிந்துகொண்டேன். மணிக்கதவம், அனந்தல் போன்ற பழஞ்சொற்களைக் கற்றேன்,” என்று அவர் கூறினார்.
வைணவ சமயப் புனிதர்களான ஆழ்வார்களையும் அவர்கள் இயற்றிய செந்தமிழ்ப் பாடல்களையும் பற்றி சிங்கப்பூரில் உள்ளவர்கள் மேலும் அறியச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் திருப்பாவைத் தொடர் என்ற முயற்சி தொடங்கப்பட்டதாகச் சிங்கப்பூர் ராமானுஜர் சங்கச் செயலாளர் எஸ்.முகுந்தன் குறிப்பிட்டார்.
“திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் கர்நாடக இசை முறையில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. மார்கழி மாதத்திற்குச் சிறப்பாக இளையர்கள், திருப்பாவையின் முப்பது பாடல்களை இரண்டரை நிமிட குறுங்காணொளிகளாக, போகிப் பண்டிகை நாள்வரையில் நாளுக்கொன்றாகத் தயாரித்து வருகின்றனர்,” என்று அவர் சொன்னார்.
இதே போன்று, சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடும் சைவ சமயத்தினர், மார்கழி மாதத்திற்காக மாணிக்கவாசகர் இயற்றிய 20 திருவெம்பாவைப் பாடல்களை ஓதுவது வழக்கம்.
திருவெம்பாவையின் பெருமையைப் பறைசாற்றும் பாவை விழா டிசம்பர் 11ஆம் தேதி செங்காங் வட்டாரத்திலுள்ள அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் கோயிலில் நடந்தேறியது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர்க் கோயில்களில் பணிபுரியும் ஓதுவார்கள் அறுவர் தேவாரத்தையும் திருமுறைகளையும் பாடினர். திருவெம்பாவை பாடப்பட்டதுடன் அதன் பொருளையும் எடுத்துரைக்கும் உரைகளும் இடம்பெற்றன.
திருவெம்பாவையின் பன்னிரண்டாம் பாடலில் ‘காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி’ என்ற தொடரைத் தலைப்பாகக் கொண்டு சொற்பொழிவாளர் பவானி தியாகராஜன் உரையாற்றினார்.
திருமுறைப் பயிற்சிக் கழகத்தின் பாடத்தின் கடைசி நிலையான ஆறாவது நிலையை முடித்த 17 வயது ரிஷி குமாருக்குப் பாவை விழாவின்போது ‘திருமுறை கற்றுவல்லார்’ விருது வழங்கப்பட்டது.
பல்லாண்டு உழைப்புக்காகத் திருமுறை மாநாடு ஏற்பாட்டுக் குழுவின் அங்கீகாரம் கிட்டியதால் மகிழ்ச்சி அடைவதாக ரிஷி குமார் கூறினார். இதற்காக அவர், தம் தாயாருக்கும் தேவாரம் கற்பித்த சுந்தரமூர்த்தி ஓதுவாருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

