பெரியார் விழா 2025 - ‘பெரியாரும் சிங்கப்பூரும்’

2 mins read
60f2234a-3780-4bc6-8b40-0e1c9ea65d14
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணிக்கு மன்றத்தின் மதியுரைஞர் வீ.கலைச்செல்வம் பொன்னாடை அணிவிக்க, செயற்குழு உறுப்பினர் சு. தெ. மதியரசன் நினைவுப்பரிசை வழங்கினார். - படம்: சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம்
multi-img1 of 4

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில், ‘பெரியாரும் சிங்கப்பூரும்’ என்ற தலைப்பில் பெரியார் விழா 2025 நிகழ்ச்சி நவம்பர் 9ஆம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அல்ஜுனிட் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஜெகதீஸ்வரன் ராஜும், சிறப்புப் பேச்சாளராக தமிழ்நாட்டிலுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணியும் கலந்துகொண்டனர்.

மன்றத்தின் தலைவர் க.பூபாலன் வரவேற்புரையும் தலைமை உரையும் ஆற்றினார்.

“மனிதநேயத்தை முன்னிறுத்திய திருவள்ளுவர் வாழ்ந்த காலமும், ஈ.வெ.ரா. பெரியார் வாழ்ந்த காலமும் வேறுபட்டவை என்றாலும், இருவரும் மனிதநேயக் கருத்துகளை மக்களிடம் பரப்பியவர்கள்.

பெரியார் அவர்கள் திருக்குறள் மாநாட்டையே நடத்தியவர்.

“இதேபோல் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவும் மனிதநேயம், சமத்துவம், அனைவருக்கும் சம வாய்ப்பு ஆகிய உயர்ந்த மதிப்புகளின் அடிப்படையில் செயல்பட்டவர்.

“எனவே, இந்த மூவரையும் ஆழமாக அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ‘வள்ளுவரின் குறளும் பெரியாரின் குரலும்’ என்ற நூலையும், ‘பெரியாரும் சிங்கப்பூரும்’ என்ற புதிய நூலையும் எழுத வேண்டும்,” என்று திரு பூபாலன் வேண்டுகோள் விடுத்தார்.

சிறப்புரையாற்றிய டாக்டர் கி.வீரமணி, “சிங்கப்பூரின் வளர்ச்சி உலகத்திற்கே முன்மாதிரியாக உள்ளது.

“இங்கு இருக்கும் ஒழுக்கம், தூய்மை, நிர்வாகம், சட்டத்தின் கடுமையான சமத்துவம் அனைத்துமே சமூகநல அரசுக்கான அழகிய பாடங்களாகும்,” என்றார்.

மேலும், சிங்கப்பூரின் எதிர்காலமும் பெரியார் சிந்தனையின் தொடர்ச்சியும் இளையர்களின் கைகளில் பாதுகாப்பாக இருக்கின்றன என்றும் அவர் சொன்னார்.

இவ்வாண்டிற்கான ‘பெரியார் விருது’ சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளரும் கல்வியாளருமான திரு மு.அ. மசூதுக்கு வழங்கப்பட்டது.

சிங்கப்பூரில் உள்ள தமிழ் அமைப்புகளின் நிகழ்வுகளில் பங்கெடுத்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டாற்றி வரும் பெரியார் தொண்டர் திருவாட்டி சு.தெ. சுசிலாவிற்கு ‘பெரியார் பெருந்தொண்டர் விருது’ வழங்கப்பட்டது.

பேச்சாளர்களுக்கு மன்றத்தின் உட்கணக்கு ஆய்வாளர் மாறன் நினைவுப்பரிசு வழங்கினார்.
பேச்சாளர்களுக்கு மன்றத்தின் உட்கணக்கு ஆய்வாளர் மாறன் நினைவுப்பரிசு வழங்கினார். - படம்: சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம்

நிகழ்வின் சிறப்பம்சமாக இளையர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது.

திரு சுந்தர் பிலவேந்தர்ராஜ் ‘பெரியாரின் ஒளியில் பெண் முன்னேற்றத்தின் தொடரும் பயணம்’ என்ற தலைப்பிலும், திரு அருள் ஓஸ்வின் ‘மலாயாவில் பெரியாரின் வருகையும் தாக்கமும்’ என்ற தலைப்பிலும், மாணவி தமிழ்மதி ‘நுண்ணறிவு வளரட்டும், பகுத்தறிவு வழிநடத்தட்டும்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

குறிப்புச் சொற்கள்