நீண்ட வேலைக்குப் பிறகு சோர்வாக இருப்பது இயல்பான ஒன்றுதான். நன்றாக உறங்கி எழுந்தால் அச்சோர்வு போய்விடலாம்.
ஆனால், தொடர்ந்து சோர்வாக இருப்பது கவலைக்குரியது என்றும் அது இன்னொரு சிக்கலின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர்.
சோர்விற்கான அறிகுறிகள்
ஓய்வெடுத்தாலும் அதிக அளவில் தூக்கமின்மை, தொடர்ச்சியான தலைவலி, தலைச்சுற்றல், தசை வலி, உடல்வலு குறைதல், செயல்களில் ஆர்வமின்மை, மனநலச் சிக்கல்கள் ஆகியவற்றால் தொடர்ச்சியான சோர்வை உணரலாம்.
சோர்வை ஏற்படுத்தக்கூடிய உடல்நலப் பிரச்சினைகள் என்னென்ன?
புற்றுநோய்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புற்றுநோய் சோர்வை அனுபவிக்கிறார்கள். நலமிக்க உயிரணுக்கள் ஊட்டச்சத்துகளுக்காக புற்றுநோய் உயிரணுக்களை எதிர்ப்பதால் சோர்வு உண்டாகிறது.
புற்றுநோயால் அவதிப்படும் எல்லாரும் இந்தச் சோர்வை அனுபவிக்கின்றனர்.
சில புற்றுநோய்கள் மற்றவற்றைவிட அதிகச் சோர்வை உண்டாக்கும். எடுத்துக்காட்டாக, மார்பக மற்றும் ஆண் சுரப்பி புற்றுநோய்கள் உடலில் ஹார்மோன் அளவை மாற்றக்கூடும் என்பதால் சோர்வு உட்பட பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்று பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட புற்றுநோய் குறித்த ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
நீரிழிவு
பொதுவாக, நாம் உண்ணும் உணவு இரத்தச் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. உடலில் உள்ள கணையம் சுரக்கும் ‘இன்சுலின்’ ஹார்மோன், இரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
நீரிழிவால் பாதிக்கப்பட்டோரின் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த போதுமான இன்சுலினைக் கணையத்தால் உற்பத்தி செய்ய இயலாததால் உடல் பலவீனம் அடைகிறது. இதனால் சோர்வு ஏற்படுகிறது.
தன்னுடல் தாக்குநோய்கள்
தோல் முடிச்சு நோய் (lupus), முடக்குவாதம் (rheumatoid), ஆர்த்ரிடிஸ் (arthritis), பலதசை இறுக்கம் (multiple sclerosis) போன்ற தன்னுடல் தாக்குநோய்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கிறது.
இதனால், அந்நோய்களால் பாதிக்கப்படுவோர்க்கு உடலில் ஆற்றல் குறைந்து சோர்வு உண்டாகிறது.
தூக்கச் சீர்குலைவு
தூக்கச் சீர்குலைவு என்பது ஒருவரின் தூக்கத்தைப் பாதிக்கும் ஒரு மருத்துவக் சிக்கலாகும்.
தூக்கமின்மை, மயக்கம், தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பலவகைச் தூக்கச் சீர்குலைவுகள் உள்ளன.
தூக்கச் சீர்குலைவானது சர்க்கேடியன் சுழற்சி எனப்படும் உடலின் பொதுவான தூக்கம்-விழிப்புச் சுழற்சியைப் பாதித்து, உடல், மனநலத்திற்குத் தேவையான தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
தூக்கச் சீர்குலைவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தொடர்ச்சியான சோர்வை அனுபவிக்கின்றனர்.
மனநலச் சிக்கல்
மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை உடல், மனநலத்தைப் பாதிக்கும்.
ஒருவர் தொடர்ந்து இத்தகைய மனநலச் சிக்கல்களுடன் போராடுவதால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வை உணரலாம்.
தொடர்ச்சியான சோர்வு அன்றாட நடவடிக்கைகளை கணிசமாகப் பாதித்தால் ஒரு மருத்துவ வல்லுநரை நாடுவது நல்லது.