நீ சூன் பொங்கல் போட்டியில் மலாய் மூதாட்டிக்கு முதல் பரிசு

நீ சூன் பொங்கல் போட்டியில் மலாய் மூதாட்டிக்கு முதல் பரிசு

2 mins read
a32107b5-1ab9-4059-82c1-4945176f0942
பொங்கல் சமைக்கும் 64 வயது மலாய் மாது கஸ்மாவதி.  - படம்: சாந்தா ராமன்

தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடின்றி அனைவர்க்குமானதாய் ஏற்பாடு செய்வது சமூக நிகழ்ச்சிக்கு அழகாகும். அதிலும், பொது இடங்களுக்கு அதிகம் செல்ல இயலாதோரைக் கொண்டாட்டங்களில் இணைப்பது கூடுதல் சிறப்பு.

நீ சூன் சென்ட்ரல் ‘ஸோன் 5’ (Zone 5) வசிப்போர் கட்டமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) நடத்திய பொங்கல் கொண்டாட்டத்தில், ஸ்ரீ நாராயண மிஷன் பராமரிப்பு இல்லத்தைச் சேர்ந்த முதியோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் வருகையாளர்கள் மட்டுமன்றி ஏற்பாட்டாளர்களுமே பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என வசிப்போர் கட்டமைப்பின் தலைவர் சாந்தா ராமன் தெரிவித்தார்.

“ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் பிற இனத்தவர்கள், பொங்கலின் சிறப்புகளை இன்னும் ஆழமாகக் கற்கின்றனர். பொங்கல் பண்டிகையைத் தங்களுடையதாக எண்ணி அவர்கள் கொண்டாடுகின்றனர்,” என்று திருவாட்டி சாந்தா கூறினார்.

சக்கர நாற்காலிகள், தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் முதியோர் அங்கு வந்திருந்தனர். கால்களில் தொய்வு இருந்தாலும் அவர்களது கைகள் சுறுசுறுப்பாகத் தோரணங்களைச் செய்வதில் ஈடுபட்டன.

பொங்கல் சமைக்கும் போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது. செங்கல் அடுப்பு, விறகு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பங்கேற்பாளர்கள் குழுக்களாகப் போட்டியிட்டனர்.

பொங்கல் போட்டியில் முதல் பரிசு வென்ற 64 வயது மலாய் மாது கஸ்மாவதி, தமக்கு இது பொங்கல் சமைக்கும் முதல் அனுபவம் எனக் கூறினார்.

“மலாய்க்காரர்கள் செய்யும் ‘புபூர்’ (Bubur) கஞ்சிபோலப் பொங்கல் உள்ளதாக நான் நினைக்கிறேன். மீண்டும் வீட்டில் பொங்கல் சமைத்து என் குடும்பத்தினருக்குப் பரிமாற விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

பங்கேற்பாளர்கள் வாழையிலையில் அறுசுவை விருந்துண்டு மகிழ்ந்தனர். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதையும் எல்லோருக்கும் நம் சமுதாயத்தில் மதிப்புமிக்க இடம் உள்ளது என்பதையும் இந்த நிகழ்ச்சி எடுத்துரைப்பதாகத் திருவாட்டி சாந்தா கூறினார்.

குறிப்புச் சொற்கள்