அன்றாட வாழ்க்கை அலுக்காமல் இருக்க, சுறுசுறுப்பான மற்றும் துடிப்பான வாழ்க்கைமுறை அவசியம்.
அப்படிப்பட்ட வாழ்க்கையை முதுமையிலும் வாழ்பவர்களுக்குப் பொங்கல் கூடுதல் தித்திப்பைத் தரும் என வாம்போ வட்டாரத்தைச் சேர்ந்த 66 வயது செந்தாமரை ராமதாஸ் கூறுகிறார்.
கணவருடன் வசிக்கும் திருவாட்டி செந்தாமரைக்குத் திருமணமான மகன் ஒருவர் உள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமது வீட்டுக்கு அருகில் உள்ள துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையத்தில் (Active Ageing Centre) அவர் சேர்ந்தார்.
“செய்தித்தாள் படிக்கலாம், தொலைக்காட்சி பார்க்கலாம், ஸும்பா போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யலாம். எல்லாவற்றையும் இங்குப் பிறருடன் இணைந்து செய்ய முடிகிறது,” என்று திருவாட்டி செந்தாமரை கூறினார். சன்லவ் ஜாலான் ராஜா துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையத்தின் இந்த ஆண்டுப் பொங்கல் கொண்டாட்டத்திற்கு உதவி செய்து மகிழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
முதியோர் 22 பேரும் நிலைய ஊழியர்கள் நால்வரும் பங்கேற்ற இந்தக் கொண்டாட்டத்தில், பலர் பாரம்பரிய இந்திய உடையணிந்து கலந்துகொண்டதாக நிலைய நிர்வாகி அனுபமா தெரிவித்தார். அரிசிக் கோலம், மலர்கள், விளக்குகள் முதல் பொங்கல் பானையுடன் கட்டப்பட்ட இஞ்சிக்கொத்து வரை, பண்பாடு அறிந்த முதியவர்கள் சிறப்பாகப் பங்களித்ததாக அவர் கூறினார்.
“எளிமையாகக் கொண்டாட நினைத்திருந்த நாங்கள், முதியவர்களின் ஆர்வத்தால் இதனைச் சிறப்பாக நடத்தினோம். பொங்கல் சமைத்துப் பிற இனத்து முதியோருக்கும் வழங்கினோம்,” என்று திருவாட்டி அனுபமா கூறினார்.
“வந்திருந்த சீன, மலாய் இனத்தவர்களுக்குப் பொங்கல் கொண்டாட்டத்தின் சிறப்பை, முக்கியத்துவத்தை விளக்கினோம். பொங்கல் வேளாண்மை தொடர்பானது என்பதையும், உணவுதரும் இயற்கைக்கு நன்றி நவிலக் கொண்டாடப்படுகிறது என்பதையும் எடுத்துக்கூறினோம்,” என்றார் அவர்.
வந்திருந்தோருக்குப் பொங்கலுடன் இடியப்பம், குழம்பு, இனிப்புப் பண்டங்கள் போன்ற உணவுவகைகள் பரிமாறப்பட்டன. ஓய்வுக்குப் பிறகு, இதுபோன்ற நிலையங்களுக்குச் செல்வது நல்லது என்று சக முதியோரைத் திருவாட்டி செந்தாமரை ஊக்குவிக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“நான்கு சுவர்களுக்குள் ஒன்றும் செய்யாமல் முடங்கிக் கிடந்தால் அலுப்பு தட்டும். மனமகிழ்ச்சிக்காகவாவது வாருங்கள். புதியவர்களைச் சந்திக்கலாம், உடற்பயிற்சி செய்து சுறுசுறுப்பாக இருக்கலாம்,” என அவர் அழைப்பு விடுத்தார். இந்திய வருகையாளர்களின் எண்ணிக்கை கூடிவருவதைக் கண்டு மகிழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.
“நிலையத்தின் ஊழியர்கள் நேரடியாக இந்திய வீடுகளுக்குச் சென்று மக்களை அழைப்பதைக் காண்கிறேன். இந்தியர்கள் இன்னும் அதிகமானோர் வரவேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார் அவர். தீவு முழுவதும் சன்லவ் இல்லம் துடிப்புடன் மூப்படைதலுக்கான ஏழு நிலையங்களை நடத்தி வருகிறது.
பல இனத்தவரும் பொங்கல் பானையைச் சூழ்ந்து ‘பொங்கலோ பொங்கல்’ என உற்சாகக் குரல் எழுப்பிய காட்சி, தமிழர் என்ற முறையில் பெருத்த மனநிறைவை அளிப்பதாக சன்லவ் இல்லத்தின் நிர்வாகி மகாலட்சுமி அண்ணாமலை தெரிவித்தார்.
இளையர்கள் பலரும் சன்லவ் இல்லத்துடன் தொடர்பில் இருப்பதால், அவர்களுக்குத் திறன்களையும் பண்புகளையும் கடத்தும் வழிகாட்டிகளாக முதியவர்கள் திகழலாம் என்று அவர் கூறினார்.
மேலும், இந்தக் கொண்டாட்டத்தைத் தாங்கள் ஆண்டுதோறும் நடத்தி வருவதாகக் கூறிய அவர், தனிமையில் வாடாமல், பண்டிகைக் காலங்களில் தங்களோடு இணையும்படி முதியவர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

