முதுமையும் ஆனந்தமே

3 mins read
மூத்தோர் மகிழ்வுடன் வாழ ஊக்கமளிக்கிறார்
1acaaa19-b268-41dd-8c48-b122f3e38bc9
முதுமையடைவதை நினைத்து அஞ்சாமல், அதனை ஆனந்தமாக வரவேற்று உரிய முறையில் வாழ வலியுறுத்தினார் திரு ஜெயராஜ் இந்திர ராஜ். - படம்: செயிண்ட் லூக்ஸ் மருத்துவமனை

நீச்சல், நடைப்பயிற்சி, இசை நிகழ்ச்சிகள், ஆலோசகர் பணி, தொண்டூழியம் என 71 வயதிலும் பம்பரமாகச் சுழல்கிறார் வழக்கறிஞர் ஜெயராஜ் இந்திர ராஜ்.

செயிண்ட் லூக்ஸ் மருத்துவமனை நடத்தும் ‘கோ சில்வர் எஸ்ஜி’ எனும் மூத்தோருக்கான ஆதரவுத் திட்டத்தின்கீழ், ‘சமூகத்தில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த வயது ஒரு தடையல்ல’ என சக மூத்தோருக்கு இவர் ஊக்கமளித்து வருகிறார்.

1981ல் தமது 28வது வயதில் முழுநேர வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கிய இவர், அன்றாடம் 10 முதல் 11 மணி நேரம் வரை வாரத்தின் ஏழு நாள்களும் அயராது பணியாற்றியதை நினைவுகூர்ந்தார்.

பணியில் மட்டுமே கவனம் செலுத்தி, உடலையும் மனத்தையும் சோர்வுற்றதன் விளைவாக 39வது வயதில் தீவிர ஆஸ்துமா நோய்க்கு இவர் ஆளானார்.

படிகளில் வேகமாக ஏறுவது, வேகநடை என அன்றாட நடவடிக்கைகளால் மூச்சுப் பிரச்சினை ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டிய இவர், அக்கணம் முதலே உடல்நலத்தில் கவனம் செலுத்த உறுதி பூண்டதாகச் சொன்னார்.

மூச்சுப் பிரச்சினையிலிருந்து நிவாரணம் பெற நுரையீரலை வலுப்படுத்த வேண்டும் எனக் கருதி, மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப நீச்சல் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கினார். முதலில் 20 சுற்றுகள் நீந்தத் தொடங்கி தற்போது தொடர் பயிற்சிக்குப் பின் 30 சுற்றுகள் (32 சுற்றுகள் என்பது 1 மைல்) நீந்த முடிவதாகவும் திரு இந்திர ராஜ் சொன்னார்.

சுறுசுறுப்பான, ஓய்வற்ற வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டபின், வாழ்வின் மொத்த கண்ணோட்டமும் மாறிவிட்டதைச் சுட்டிக்காட்டினார். வாழ்வை ரசித்து வாழ வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டதாக இவர் கூறினார்.

அனைத்து வயதினரும், குறிப்பாக இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உணவுப் பழக்கத்தை சீர்படுத்தி, உடற்பயிற்சியில் அதிகம் ஈடுபட வேண்டும் என்றார்.

தனது 60களில், 100 கிலோ உடல் எடைக்கு மேல் இருந்த இவருக்கு நாட்பட்ட நோய்கள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்ததையடுத்து, நீச்சலுடன் சேர்த்து நீண்ட தூர நடைப்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளத் தொடங்கினார்.

இந்திய சமூகத்தில் பலருக்கும் சமச்சீரான உணவுப் பழக்கம் இல்லை என்றும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பது வருத்தமளிக்கிறது என்றார் இவர். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க மற்றவர்களிடம் தாம் வலியுறுத்துவதாகவும் சொன்னார்.

பணிச்சுமை, கடமைகள், நிதி நிலைமை என மன அழுத்தம் ஏற்படுத்தும் அம்சங்கள் தவிர்க்க முடியாதவை எனக் கூறிய திரு இந்திர ராஜ், அதிலிருந்து விடுபட விருப்பமான பொழுதுபோக்கில் ஈடுபடுவது சிறந்தது எனப் பரிந்துரைத்தார்.

சிறு வயதில் ‘டிரம்பட்’ எனும் ஒருவகை ஊதுகுழல் இசைக்கருவி வாசித்த இவர், பணிக்குச் சென்றபின் மீண்டும் வாசிக்கத் தொடங்கினார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயிற்சி செய்வது, இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வாசிப்பது, தேவாலயங்களில் வாசிப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதாகக் கூறினார்.

தம் மனைவிக்குப் பின் தாம் அதிகம் நேசிப்பது இசையேதான் எனச் சொல்லிய திரு இந்திர ராஜ், மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுவது இசையே என்றார்.

பொழுதுபோக்கு, உடற்பயிற்சி, பணி என அனைத்திலும் சமநிலையுடன் வெற்றியடைய ஒரே மந்திரம் ஒழுக்கம் என இவர் உறுதியாக நம்புகிறார். எதையும் நாள் தவறாமல் கடைப்பிடிக்கும் ஒழுக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் கண்கூடாக மாற்றத்தைப் பார்க்கலாம் என்றார்.

அதிகாலை 5 மணிக்கெல்லாம் தனது நாள் தொடங்கிவிடும் என்றும் சட்ட ஆலோசனை, சமரசம் ஏற்பட உதவுவது, இளம் வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டுவது, சட்டத்துறையில் ஏற்படும் மாற்றங்களை அறிவது என முழுநேரமும் தம்மை ஈடுபாட்டுடன் வைத்துக் கொள்வதாகவும் இவர் சொன்னார்.

செயிண்ட் லூக்ஸ் மருத்துவமனையுடன் தொடர்ந்து பணியாற்றும் இவர், மூத்தோருக்கான நிதி திரட்டு முயற்சிக்கும் பங்காற்றுகிறார். இளம் வயதினருடன் நட்பு பாராட்டும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் இவர், மனதளவில் தாம் ஓர் இளையர்போல உணர்வதாக பகிர்ந்தார்.

வயது ஒரு எண் மட்டுமே என்றும் வாழும் காலத்தை முழுமையாக, மகிழ்ச்சியுடன் வாழவும் புத்துணர்ச்சி ஏற்படுத்திக் கொள்ளவும் பயணம் மேற்கொள்ளவும் பலருடன் பேசிப் பழகவும் மூத்தோருக்கு திரு இந்திர ராஜ் வலியுறுத்துகிறார்.

குறிப்புச் சொற்கள்