உண்டபின் நடப்பதால் நீரிழிவு உள்ளோர்க்குப் பெருநன்மை

2 mins read
ce10668f-9b02-4dac-b412-b00bbdccf837
மெதுநடை மூலம் சாப்பிட்ட பிறகு ஏற்படும் சர்க்கரை அளவின் ஏற்றம் குறைகிறது. - படம்: செயற்கை நுண்ணறிவு

சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடப்பது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது.

சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வதன்வழி, ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரையை உறிஞ்சிக்கொள்ள தசைகள் உதவுகின்றன. இதன் மூலம் சாப்பிட்ட பிறகு ஏற்படும் சர்க்கரை அளவின் ஏற்றம் குறைகிறது.

“பிற்பகல் உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் நிதானமாக நடப்பது சர்க்கரை அளவைச் சிறப்பாகக் கட்டுப்படுத்த உதவும். உங்கள்  ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் புரதமான இன்சுலினுக்கு ஓர் இயற்கையான ஊக்கத்தைக் கொடுப்பதைப் போன்றது அது,” என்று இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், தானே நகரில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையின் நீரிழிவுத்துறைத் தலைவர் டாக்டர் விஜய் நெகலூர் கூறுகிறார்.

நடக்கும் வேகத்தைவிட தொடர்பயிற்சிதான் முக்கியம் என்று அவர் வலியுறுத்துகிறார்.

“சாப்பிட்ட உடனேயே 10 முதல் 15 நிமிடங்கள் நிதானமான வேகத்தில் நடப்பதே சிறந்தது. வேகமாக நடக்கவேண்டிய அவசியமில்லை; நிதானமாக நடந்தாலே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே காலையில் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு, சாப்பிட்ட பிறகு மேற்கொள்ளும் இந்தச் சிறு நடைப்பயிற்சி குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த கூடுதல் உதவியாக இருக்கும்,” என்று டாக்டர் நெகலூர் கூறினார்.

சாப்பிட்டவுடன் கடுமையான உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை என்று கூறும் மும்பையைச் சேர்ந்த கிளெனிகில்ஸ் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் மஞ்சுஷா அகர்வால், மெதுநடை போதுமானது என்றார்.

“காலப்போக்கில் இந்த நடைமுறை ஒட்டுமொத்த ரத்த சர்க்கரையின் ஏற்ற இறக்கங்களைக் குறைத்து, ஆற்றலை மேம்படுத்தி, உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும். சிறந்த பலன்களைப் பெறுவதற்கு, வேகத்தைவிட தொடர் பயிற்சி மிகவும் முக்கியமானது. எனவே, தினமும் நடப்பதை உறுதிசெய்யுங்கள்,” என்று டாக்டர் அகர்வால் கூறினார்.

மன அழுத்தம் அதிகமாகும்போது, சர்க்கரை அளவும் அதிகரிக்கும். தியானம், ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி அல்லது உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கில் ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

போதுமான தூக்கம் (ஒருநாளைக்குச் சராசரியாக 7-8 மணி நேரம்) உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்