‘மீடியாகார்ப்’ 20வது முறையாக ஏற்பாடு செய்யும் பிரதான விழா நிகழ்ச்சி, பிப்ரவரி 15ஆம் தேதி இரவு 9 மணி முதல் 11.45 மணி வரை ‘மீடியாகார்ப்’ அரங்கில் நடைபெறவுள்ளது.
விழா தொடங்குமுன், மாலை 6.30 முதல் இரவு 7.30 மணி வரை, விருதுகளுக்கு நியமனம் பெற்ற நட்சத்திரங்கள் சிவப்புக் கம்பளத்தில் வலம்வருவர். கம்பளத்தைச் சுற்றிலுமுள்ள ஒளியூட்டப்பட்ட சுவர்கள் பிரதான விழாவின் மறக்கமுடியாத நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கும்.
மலாய்க்காரர்கள், இந்தியர் என இருதரப்பினருக்கும் பொதுவான ‘பிரைம் 12’ விருதளிப்பு நிகழ்ச்சியாக 1996ஆம் ஆண்டில் தொடங்கி, இந்தியர்களுக்கு மட்டுமான விழாவாக 1999ல் மாற்றம்கண்டது பிரதான விழா.
இவ்வாண்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அவரது மனைவி ஜேன் இத்தோகியும் கலந்துகொள்வர்.
அன்றைய, இன்றைய, நாளைய கலைஞர்களுக்கு சமர்ப்பணமாக, விழா மூன்று அங்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஷபிர் சுல்தான், யங் ராஜா இருவரும் முதன்முறையாக இணைந்து மேடையில் பாடவுள்ளனர்.
நிகழ்ச்சி நெறியாளர்கள் ஏழு பேர் பிரதான விழா 2025ஐ வழிநடத்திச் செல்லவுள்ளனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜி. செல்வாவுடன் இணைந்து பிரதான விழாவைப் படைக்கவுள்ளதாகக் கூறினார் நெறியாளர்களில் ஒருவரான ஜனனி இளமாறன்.
ஆவலுடன் எதிர்பார்க்கவேண்டிய சில விருதுகள்
சிங்கப்பூர்க் கலையுலகில் அழியா முத்திரையைப் பதித்த கலைஞருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்படவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
‘சிறந்த நாடகத் தொடர்’ பிரிவில் ஐந்து நாடகங்கள் மோதுகின்றன. ஆசியத் தொலைக்காட்சி விருது வென்ற முதல் சிங்கப்பூர்த் தமிழ் நாடகத் தொடரான ‘ஐயா வீடு’, ‘எடிசன்’ விருதுகளை வென்ற ‘ஓ பட்டர்ஃப்ளை’, ஜப்பானிய காலகட்டக் காதலை நினைவுகூரும் ‘1943’, முன்னாள் கைதிகளின் பயணங்களை மையப்படுத்தும் ‘விலங்கு’, ஓர் இளம் எழுத்தாளரின் மாறுபட்ட பயணத்தைச் சித்திரிக்கும் ‘வான் வரு வான்’ ஆகியவை அவை.
ஆகப் பிரபலமான நட்சத்திரங்களுக்கான விருதுகளுக்குப் பிப்ரவரி 15ஆம் தேதி இரவு 10 மணி வரை mediacorp.sg/pradhanavizha இணையத்தளம்வழி வாக்களிக்கலாம்.
பிரதான விழா சிறப்புப் பாடல் - ‘விண்ணைத் தொடு’
பிரதான விழா 2025ன் மையப் பாடலான ‘விண்ணைத் தொடு’, அண்மையில் யூடியூப் தளத்தில் வெளியானது. முனைவர் இளவழகன் முருகன் எழுதிய பாடலுக்கு ஷபிர் சுல்தான் இசையமைத்துள்ளார். இளம் பாடகர்களும் அனுபவமிக்கோரும் இணைந்து பாடிய பாடலைப் புத்தாக்க முறையில் காணொளியாகப் பதிவு செய்துள்ளார் அப்துல் ஷரிஃப்.
“இப்பாடல் நம்முடைய கதைதான். கலைப்பயணத்தின் உண்மையும் அதற்குத் தேவையான உற்சாகமுமே இப்பாடலுக்கு உந்துதல்,” என்றார் ஷபிர்.
“பிரதான விழாவில் சிலமுறை நடுவராக இருந்துள்ளேன். இவ்விழாவின் மொத்த அழகையும் என் வரிகளில் படம்பிடிக்க விரும்பினேன்,” என்றார் முனைவர் இளவழகன்.
கலையுலகின் ஆரம்பகாலச் சிற்பிகளின் மலரும் நினைவுகள்
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ஊடகத்துறையில் ஈடுபடும் எல். விஜயேந்திரன், 67, வெ. சூரியமூர்த்தி, 65, இருவரும் இளம் கலைஞர்களுடன் இணைந்து ‘விண்ணைத் தொடு’ பாடலைப் பாடியுள்ளனர்.
“இளையரோடு பாடும்போது எங்களுக்குப் புத்துணர்ச்சி பிறக்கிறது, என்று கூறிய சூரியமூர்த்தி அக்காலத்தில் உடன் பாடியவர்களின் பிள்ளைகளோடு இன்று பாடுவதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டின் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதை வென்ற எல். விஜயேந்திரன், “பிரதான விழா ஒரு கலைஞருக்கு ஊக்கமும் அங்கீகாரமும் வழங்கும் முக்கிய விருது,” என்றார்.
இந்திய மரபுடைமை நிலையத்தில் சிறப்புக் கண்காட்சி
பிப்ரவரி 10 முதல் மார்ச் 17ஆம் தேதி வரை, இந்திய மரபுடைமை நிலையத்தின் முதல் தளத்தில் ‘பிரதான விழா 2025’ சிறப்புக் கண்காட்சி இடம்பெறும். நிலையத்துக்கு வருபவர்கள், சிங்கப்பூர்க் கலை வரலாற்றில் பிரதான விழாவின் பங்கு குறித்து அறிந்துகொள்ளலாம். சிவப்புக் கம்பளத்தில் நின்று புகைப்படமும் எடுத்துக்கொள்ளலாம்.
இளநெஞ்சங்களில் இடம்பிடிக்கும் பிரதான விழா
வசந்தம் ஸ்டார் 2023 பிரபலங்கள் நவீன் குணசேகரன், முஹம்மது யாகோப், ‘யார் அந்த ஸ்டார்’ பிரபலங்கள் சூரியா ஆனந்த், பல்லவி ஜே இணைந்து ‘மனசிலாயோ’ பாடலைப் பாடுவர்.
விஷ்ணு பாலாஜி, சுதாஷினி இருவரும் ஒரு பியானோ அங்கத்தை வழங்கவுள்ளனர். அவர்கள் இணைந்து ‘1943’ நாடகத் தொடருக்காக இசையமைத்து வழங்கிய பாடலுக்காக ‘சிறந்த பாடல்’, ‘சிறந்த பாடகர்’ இரு பிரிவுகளிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, ‘தமிழோடு இணைவோம்’ நிகழ்ச்சிப் பாடலுக்காக விஷ்ணு பாலாஜி ‘சிறந்த பாடகர்’ பிரிவில் மற்றொரு நியமனமும் பெற்றுள்ளார்.
“அனுபவமிக்க கலைஞர்களுடன் பாடுவது எங்கள் திறன்களை வளர்க்க வாய்ப்பளிக்கிறது. அவர்களும் எங்கள் ஆலோசனைகளுக்குச் செவிசாய்த்தார்கள்,” என்று பல்லவியும் சூரியாவும் கூறினர்.
‘விண்ணைத் தொடு’ பாடலில் பாடிய ஸ்வாதி தினகரன், 22, “பாடலின் பின்னணியில் நிறைய வேலை நடந்தது. முதலில் முழுப் பாடலையும் எங்கள் குரலில் பதிவுசெய்தபின், பாடலின் வெவ்வேறு கட்டங்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டன,” என்றார்.
“பிரதான விழா கலைஞர்களுக்கும் தொழில்நுட்பத் திறனாளர்களுக்கும் தகுந்த அங்கீகாரம் வழங்கிவருகிறது. சிறுவயதிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் பிரதான விழாவில் நானும் ஒரு பங்காக இருக்கிறேன் என நினைக்கும்போது பெருமகிழ்ச்சி,” என்றார் யாகோப், 29.
“நான் பிரதான விழாவழி நிறைய நண்பர்களைப் பெற்றுள்ளேன்,” என்றார் ‘விண்ணைத் தொடு’ பாடலில் பாடியுள்ள சுவேதா அசோக், 23.
பிரதான விழா 2025ஐயும் அதற்கு முன்பு நடக்கும் சிவப்புக் கம்பள அங்கத்தையும் வசந்தம் ஒளிவழி, https://www.mewatch.sg/pradhanavizha https://www.youtube.com/@MediacorpEntertainment ஆகிய தளங்களில் காணலாம்.