அன்னையர் தினத்தன்று பூக்கள் அல்லது வாழ்த்து அட்டைகள் கொடுப்பதைவிட, அவர்களோடு நேரம் செலவிட்டு மறக்க முடியாத நினைவுகளை உருவாக்குவது அந்நாளுக்கு மேலும் அழகு சேர்க்கும்.
இயற்கையோடும் அன்னையோடும் நாளைக் கழிப்பது, நேரம் ஒதுக்கி அவரோடு சாப்பிடச் செல்வது எனப் பல முயற்சிகளை எடுக்கலாம்.
அவ்வாறு, மக்கள் அன்னையர் தினத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுள் சில இங்கே தரப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் சிம்ஃபனி இசைக்குழுவின் கலைநிகழ்ச்சி
சிங்கப்பூர் பூமலையில் நடைபெறும் திறந்தவெளிக் கலை நிகழ்ச்சியில், இசையோடு இணைந்த உணர்வோடு அன்னையின் அன்பைப் பாராட்டி மகிழலாம்.
மே 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குச் சிங்கப்பூர் பூமலையின் ஷா அறக்கட்டளை சிம்ஃபனி மேடையில் இந்த ஒரு மணி நேரக் கலை நிகழ்ச்சி இடம்பெறும்.
தாய்மையைக் கொண்டாடும் இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் திறனாளர்கள் குளோவி சுவா, சார்ல்ஸ் டே, மார்ட்டின் இங் ஆகியோர் பாடல்களைப் பாடுவர்.
சிம்ஃபனி 92.4 படைப்பாளர் அமண்டா ஜு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்.
மாலை நேரத்தில் குடும்பத்தோடு சென்று, ஒன்றுசேர்ந்து உணவுண்டு இலவசமாக இளம் கலைஞர்களின் இசையைக் கேட்டு மக்கள் களிப்புறலாம்.
தொடர்புடைய செய்திகள்
முகவரி: சிங்கப்பூர் பூமலையின் ஷா அறக்கட்டளை சிம்ஃபனி மேடை, 1 குளூனி சாலை, சிங்கப்பூர் - 259569
கரையோரப் பூந்தோட்டங்களில் துலிப்மானியா (Tulipmania)
வெவ்வேறு வண்ணங்களில் துலிப் மலர்களைக் கண்டு ரசிக்க கரையோரப் பூந்தோட்டத்தில் இருக்கும் மலர்மாடத்தில் (Flower dome) மே 17 வரை நடைபெறும் துலிப்மானியாவுக்குச் செல்லலாம்.
ட்ரோஜன் குதிரை போன்ற துருக்கியின் புகழ்பெற்ற இடங்களின் மாதிரிகளையும் அங்குக் காணலாம்.
மலர்மாடத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றாலும், சுற்றியுள்ள அழகிய பூங்காக்களை ரசித்து இலவசமாக இரவில் நடக்கும் சூப்பர்ட்ரீ ஒளி நிகழ்ச்சியையும் கண்டுகளிக்கலாம்.
முகவரி: கரையோரப் பூந்தோட்டங்கள், 18, மரினா கார்டன்ஸ் டிரைவ், சிங்கப்பூர் - 018953
தாயின் அன்பைக் கொண்டாடும் வார இறுதி நிகழ்ச்சி
ஓசிபிசியின் விஸ்மா ஏற்றியாவில் நடக்கும் ‘கிரேன்’ என்ற நிகழ்ச்சியில் தாய்மார்களுக்குத் தேவையான பல பொருள்களை வாங்குவதோடு உள்ளூர் கைவினைஞர்களையும் கண்டறிய வாய்ப்பு உண்டு.
மே 10 முதல் 12 வரை, காலை 11 மணியிலிருந்து இரவு 7 மணிவரை நடக்கும் இந்த இலவச நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்வது அவசியம்.
உள்ளூர் நிறுவனங்களின் அழகுக்கலைப் பொருள்கள் மட்டுமின்றி, வீட்டிற்கான அலங்காரப் பொருள்களையும் இங்கு வாங்கலாம். சிறிய பட்டறைகளில் கலந்துகொண்டு, கைவினைக் காப்பியையும் சுவைத்து மகிழலாம்.
முகவரி: கிரேன், 432 ஜூ சியாட் ரோடு, சிங்கப்பூர் - 427647
யமஹாவில் இசை
மூன்றிலிருந்து எட்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் தெம்பனிஸ் கடைத்தொகுதியின் யமஹா இசைப் பள்ளியில் மே 10, 11 தேதிகளில் நடக்கும் யமஹா அன்னையர் தின நிகழ்ச்சியில் பங்கெடுக்கலாம்.
அன்னையோடு இசை வகுப்புகளில் பங்கெடுத்து, தாள வாத்தியங்களை உருவாக்கி, ஒரு கிட்டார் நிகழ்ச்சியையும் கண்டு மகிழலாம்.
முன்பதிவு செய்து, இலவசமாகவும் இன்பமாகவும் நேரத்தைச் செலவிட சிறுவர்களுக்கும் அவர்களின் அன்னையர்க்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு.
முகவரி: யமஹா இசைப் பள்ளி, தெம்பனிஸ் கடைத்தொகுதி, 4 தெம்பனிஸ் சென்ட்ரல் 5, #05-04, சிங்கப்பூர் - 529510.