முதியோர் நலத்துடன் வாழப் புரதச்சத்தும் உடற்பயிற்சியும் அவசியம்

முதியோர் நலத்துடன் வாழப் புரதச்சத்தும் உடற்பயிற்சியும் அவசியம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2026 - 7:00 am

2 mins read

முதியவர்கள் முதுமையிலும் வலிமையுடன் திகழ அன்றாட உணவில் அதிகப் புரதச்சத்தைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.

குறிப்பாக முட்டை, மீன், தௌஃபு, பீன்ஸ் போன்ற எளிய உணவுவகைகளைச் சாப்பிடுவதன் மூலம் இதைச் சாதிக்கலாம்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் அக்டோபர் 6ஆம் தேதி, ‘ஏஐசி’ ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்புடன் இணைந்து நடத்திய கலந்துரையாடலில் வல்லுநர்கள் இதைத் தெரிவித்தனர்.

முதியவர்கள் தசை வலிமையை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதையும் சுயமாக இயங்குவதை எப்படி உறுதிசெய்யலாம் என்பதையும் பற்றி அவர்கள் ஆலோசனை வழங்கினர்.

சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் உடல் செயல்பாடு, ஆரோக்கிய முதுமைப் பிரிவின் இயக்குநர் ரேச்சல் கோ இது குறித்துப் பேசினார்.

முதியவர்களுக்கு அன்றாடம் ஒரு கிலோகிராம் உடல் எடைக்கு 1.2 கிராம் புரதம் தேவைப்படுகிறது என்றார் அவர். அதன்படி, 60 கிலோகிராம் எடையுள்ள முதியவர் தினமும் 72 கிராம் புரதத்தை உட்கொள்ள வேண்டும்.

18 முதல் 49 வயதுடைய பிரிவினருக்கு 0.8 கிராம் புரதமே போதுமானது.

வயதாகும்போது ஏற்படும் தசை இழப்பைக் குறைக்க அதிகப் புரதத்தை உட்கொள்ள முதியவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இறைச்சி சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்ற தவறான எண்ணம் முதியவர்களிடம் உள்ளது என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு வேளை உணவிலும் 25 கிராம் புரதத்தைச் சேர்க்கலாம் என அவர் பரிந்துரைத்தார். ஒரு முட்டை சாப்பிட்டால் 6 முதல் 7 கிராம் புரதமும் தௌஃபு சாப்பிட்டால் 7 முதல் 20 கிராம் புரதமும் கிடைக்கும்.

தசை வலிமையை வளர்க்க ஊட்டச்சத்துடன் உடற்பயிற்சியும் தேவை எனச் சாங்கி பொது மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் சாமுவேல் சியூ வலியுறுத்தினார்.

நாள்தோறும் நாற்காலியில் 20 முறை உட்கார்ந்து எழும் பயிற்சியைத் தொடக்கமாகச் செய்யலாம் என அவர் ஆலோசனை கூறினார்.

உடல்நலத்திற்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக டான் டோக் செங் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் லிம் ஜுன் பெய் கூறினார்.

நிலையற்ற நடையும் அடிக்கடி கீழே விழுவதும் மூளை நலம் குன்றியதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் என்றார் அவர். எனவே முதியவர்கள் படிகளைப் பயன்படுத்திச் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

முதுமை நிலையங்கள் மூலம் சமூகத்தோடு இணைந்து சுறுசுறுப்பாகச் செயல்படுவது மிகுந்த பலனளிக்கும் என ஏஐசியின் துடிப்புடன் முதுமையடைதல் பிரிவுத் தலைவர் சோ ஸ்வீ பிங் குறிப்பிட்டார்.

வீட்டில் உடற்பயிற்சிகள் செய்வது, புரதம் உண்பது, சமூகத்தில் துடிப்புடன் இயங்குவது முதலியவை முதியவர்கள் நலத்துடன் வாழ உதவும் என வல்லுநர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்