அழகு ‘ராணி’க்கு பெங்களூரில் அங்கீகாரம்

அழகு ‘ராணி’க்கு பெங்களூரில் அங்கீகாரம்

2 mins read
945f2dd7-7d5c-4ead-923c-0d1fc37e145a
முனைவர் மஞ்சரி பிரியா குப்தாவிடமிருந்து (இடது) விருது பெற்ற ராணி ஸ்ரீகந்தாச்சாரி. - படம்: ராணி ஸ்ரீகந்தாச்சாரி
Google News Preferred Icon

அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி மார்ச் 8ஆம் தேதியன்று சிங்கப்பூரைச் சேர்ந்த ராணி ஸ்ரீகந்தாச்சாரி, பெங்களூரில் நடந்த அழகுராணிப் போட்டியில் ‘அனைத்துலக இந்தியப் பெண் நட்சத்திரம்’ விருதை வென்றார்.

‘ஹோட்மோண்ட் திருமதி இந்தியா 2024’ அனைத்துலக அழகுராணிப் போட்டியில் ‘திருமதி தெற்காசியா’ விருதையும் ‘திருமதி உற்சாகம்’ விருதையும் வென்ற ராணிக்கு மற்றோர் அங்கீகாரமாக இது அமைந்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் 14 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி அனுபவம் கொண்டுள்ள ராணி, அழகுராணியாக வேண்டும் என்ற தன் சிறுவயது இலட்சியத்தை நிறைவேற்ற அழகுராணிப் போட்டியில் கலந்துகொண்டார்.

பொறியியலில் இரு பட்டங்கள் பெற்ற பின்னரும் திருமணத்திற்குப் பின்னும் அழகுராணிப் போட்டியில் பங்கேற்பது எளிதன்று. எனினும், அச்சவாலைத் திறம்பட எதிர்கொண்டு போட்டியில் வாகை சூடினார் ராணி.

பெண்கள் தங்கள் கனவுகளைத் தன்னம்பிக்கையுடன் பின்தொடர்ந்து, சொந்த அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என அவர் தொடர்ந்து ஊக்குவிக்கிறார்.

சிங்கப்பூர் வங்கி ஒன்றில் மூத்த மேலாளராகப் பணிபுரியும் அதே சமயம், சமூக ஊடகங்கள் மூலமும் மக்களிடம் பயனுள்ளவற்றைக் கொண்டுசேர்க்கிறார் ராணி.

பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் அடையாளம், கல்வி, வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் ‘இங்கி பேச்சான் அறக்கட்டளை’ (Inki Pehchaan Foundation Trust) தொடக்க விழாவில் அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

‘அனைத்துலக இந்தியப் பெண் நட்சத்திரம்’ விருது வென்ற ராணி ஸ்ரீகந்தாச்சாரி.
‘அனைத்துலக இந்தியப் பெண் நட்சத்திரம்’ விருது வென்ற ராணி ஸ்ரீகந்தாச்சாரி. - படம்: ராணி ஸ்ரீகந்தாச்சாரி

பிரபல இந்திய நடிகையும் நடனமணியுமான சுதா சந்திரனும் அறக்கட்டளையின் தூதர் முனைவர் மஞ்சரி பிரியா குப்தாவும் அறக்கட்டளையின் சார்பில் விருதை வழங்கினர்.

“சிங்கப்பூரில் பல்லாண்டுகளாக வசிக்கும் நிரந்தரவாசியாக, என் தொழில்நுட்பத் தலைமைத்துவம், அனைத்துலக அழகுராணிப் பயணம் போன்றவற்றுக்காக இவ்விருது கிடைத்ததில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்,” என்றார் ராணி.

நிகழ்ச்சியில், சமூகத் தொண்டு, தொழில்முனைப்பு, கலைகள், தலைமைத்துவம் எனப் பல துறைகளிலும் சாதனைபுரிந்த பெண்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.

‘இங்கி பேச்சான்’ அறக்கட்டளை பற்றிய மேல்விவரங்களுக்கு https://inkipehchaan.com/ இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்